சமூகநீதி : பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? - Agnipuratchi

சமூகநீதி : பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

Share This

சமூகநீதி : பாட்டாளி மக்கள் கட்சியின்  நிலைப்பாடு என்ன?
-------------------------------------------------------------------------------
அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு  ஆகும். 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இது குறித்து  விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.  உங்கள் பார்வைக்காக இதோ....
---------------------------------------------------------------------------------

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சாதிகளைத் தனித்தனிப் பிரிவுகளாக பிரித்துப் பார்க்க முடியாது. அவை தமிழகம் என்ற ஒட்டுமொத்த அமைப்பின் ஓர் அங்கம் தான். அனைத்துச் சமூகங்களும் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். அதனால்தான் அனைத்துச் சமுதாயங்களையும் முன்னேற்றுவதற்காக உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள்.

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியின் போது, 1927ஆம் ஆண்டில் இருந்தே 100% இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. 1950ஆம் ஆண்டில் செண்பகம் துரைராஜன் வழக்கில் அந்த இடஒதுக்கீடு இரத்து செய்யப்பட்ட நிலையில், 1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் தொடக்கத்தில் 41% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இப்போது 69% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால், இவற்றில் எந்தக் காலக் கட்டத்திலும் சமூகநீதிக்கான போட்டி சமமானவர்களுக்கு இடையே நடத்தப்படவில்லை; கல்வியிலும் சமூக நிலையிலும் முன்னேறிய சமுதாயங்களுக்கும், சமூகத்தில் அடித்தட்டில் உள்ள சமூகங்களுக்கும் இடையில் தான் போட்டி நிலவி வருகிறது. இதனால், ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் முன்னேறிய நிலையில் உள்ள மக்கள் தான் இடஒதுக்கீட்டின் பயன்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு எந்தப் பயனும் கிடைப்பதில்லை.

இந்த உண்மையை இந்திய அரசின் மானுடவியல் (Anthropological Survey of India - ASI)  அமைப்பு நடத்திய இந்திய மக்கள் திட்டம் என்ற தலைப்பிலான ஆய்வு உறுதி செய்கிறது. மொத்தம் 43 தொகுப்புகளும், 40 ஆயிரம் பக்கங்களும் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், இந்தியாவில் மொத்தம் 4,694 சமூகங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சமுதாயங்களின் எண்ணிக்கை 364 ஆகும். இவற்றில் 209 சமுதாயங்கள் தமிழைத் தாய்மொழியாகவும், 155 சமுதாயங்கள் பிறமொழிகளைத் தாய்மொழியாகவும் கொண்டவை ஆகும்.  இன்றைய சூழலில், ஒட்டுமொத்த இந்தியாவில் அதிகச் சாதிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாட்டை 7 சூழல் பண்பாட்டு மண்டலங்களாகப் பிரித்துள்ள இந்த ஆய்வறிக்கை, வன்னியர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான சமுதாயங்கள் இன்னும் முன்னேற்றமடையவில்லை என்பதைப் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளைச் சுட்டிக்காட்டி உறுதி செய்திருக்கிறது. இந்தப் புள்ளி விவரங்கள் மறுக்க முடியாதவை.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் தனித்தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு அய்யா அவர்கள் மேற்கொண்ட போராட்டங்களின் காரணமாகத் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடும், பட்டியலின வகுப்பில் உள்ள அருந்ததியருக்கு 3 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மிகமிகப் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 10.5% இடஒதுக்கீட்டை மருத்துவர் அய்யா அவர்கள் அண்மையில் வென்றெடுத்துக் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டுமானால், இந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படும் போதுதான் முழுமையான சமூகநீதி உறுதி செய்யப்படும்.
-----------------------------------------------------------------------
அனைத்துச் சாதிகளுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குறுதிகள்
-----------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்காகவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காகவும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உள்இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் விஸ்வகர்மாக்கள், யாதவர்கள், முத்தரையர்கள் ஆகியோரின் கல்வி, வேலைவாய்ப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தநிலையைப் போக்க 3 சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைப் பொறுத்தவரை நாவிதர், வண்ணார், பருவதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குரும்பர் ஆகிய 7 சமுதாயங்கள் வன்னியர்களைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சட்டநாதன் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. குயவர், வேட்டுவக்கவுண்டர் ஆகிய சமுதாயங்களின் சமூகக் கல்வி நிலையும், இதே நிலையில் தான் உள்ளது. எனவே இந்தச் சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காக நாவிதர், வண்ணார், பருவதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குரும்பர், குயவர், வேட்டுவக்கவுண்டர், ஊராளி கவுண்டர் ஆகிய 10 சமுதாயங்களையும் கொண்ட தனி இடஒதுக்கீட்டுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள மற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு / தொகுப்பு ஒதுக்கீடு வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் குருமன்கள், நீலகிரி மாவட்டத்தில் வாழும் குரும்பர்கள் ஆகியோர் மட்டும் பழங்குடியினர் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிற பகுதிகளில் வாழும் குரும்பர்கள், குரும்பக்கவுண்டர்கள் ஆகிய சமுதாயங்களைப் பழங்குடியினர் வகுப்பில் சேர்க்கும்படி மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

கூட்டுறவுச் சங்கங்களின் நகை மதிப்பீட்டாளர் பணிநியமனத்தில் விஸ்வகர்மா & பொற்கொல்லர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இடஒதுக்கீட்டின் பயன்கள் & ஆய்வு

1989ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இடஒதுக்கீட்டுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு இன்று வரையிலான 32 ஆண்டுகளில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த அளவுக்குப் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பது குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்கள் திரட்டப்பட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகமும் எட்டியுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று சட்டநாதன் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. அதன்படி, இடஒதுக்கீட்டால் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைத்த பயன்கள் குறித்த விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் திரட்டப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

பிற்படுத்தப்பட்ட சாதிகளின் முன்னேற்றத்திற்காகத் தனித்தனி வாரியங்கள், கூட்டுறவுச் சங்கங்கள்

ஆந்திர மாநிலத்தைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமுதாயங்களில், 30 ஆயிரத்திற்கும் கூடுதலாக மக்கள் தொகை கொண்ட அனைத்துச் சாதிகளுக்கும், தனித்தனியாக நலவாரியங்கள் அமைக்கப்படும். 30 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சாதிகளைச் சில குறிப்பிட்ட காரணிகளின் அடிப்படையில் ஒருங்கிணைத்து, வாரியங்கள் உருவாக்கப்படும். அந்த வாரியங்களின்  தலைவர்களாக அந்தந்தச் சாதிகளைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு சாதிக்குமான நலத்திட்ட உதவிகள், முதியோர் ஒய்வூதியம், கல்விக்கட்டணம், தொழில் தொடங்கக் கடனுதவி, மருத்துவ உதவிகள் ஆகியவை இந்த வாரியங்களின் மூலமாக மட்டுமே வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வாரியங்களின் மூலமாக மொத்தம் 3 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என பா.ம.க. உறுதி அளிக்கிறது.

பாரம்பரியத் தொழில் சமுதாயத்தினரின் பொருளாதார நிலை, மோசமடைந்துள்ள நிலையில், அந்தச் சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காக, மண்டல் ஆணையப் பரிந்துரைப்படி ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனியாகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்படும். அந்தச் சங்கங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவர்களாக அந்தந்தச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படும் வகையில், கூட்டுறவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

நரிக்குறவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள்

தமிழ்நாட்டில் சமமற்றவர்களுக்கு இடையிலான சமூகநீதிப் போட்டியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சமுதாயங்களில் நரிக்குவறர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள முன்னேறிய சாதிகளுடன் போட்டியிட முடியாமல் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அவர்கள் மிக மோசமாகப் பின்தங்கியுள்ளனர். அவர்களின் முன்னேற்றத்திற்காக அவர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கப்படும். அதுமட்டுமின்றி, சேலம், கடலூர், தருமபுரி, தஞ்சாவூர் உள்ளிட்ட நரிக்குறவர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில், அவர்களின் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும். அப்பள்ளிகளில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான தரத்தில் கல்வி வழங்குவதற்கான நடவடிக்கைகளைப் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும்.

பட்டியலினச் சமூகங்களுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்குவதில் தேவையற்ற தாமதம் காட்டப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, அனைத்துப் பழங்குடியினச் சாதிகளுக்கும் உடனடியாகச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்; மலைவேடன் சமுதாய மக்களுக்கு விண்ணப்பித்தவுடன் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 12.12.2000 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைத் திரட்டி, மருத்துவர் அய்யா அவர்கள் போராட்டம் நடத்தினார் என்பது அனைவரும் அறிந்த வரலாறு. பழங்குடியின மக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் அவர்களின் சாதி குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டுச் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

20 ஆண்டுத் திட்டங்கள்

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் ஒரே மாதிரியான பொருளாதார மேம்பாட்டை அடைய அந்தந்தப் பகுதிகளின் இயற்கை வளங்கள், மழை அளவு, தட்ப வெப்பம், மக்கள் தொகை, பூகோள அமைப்பு இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு சிறந்த பொருளாதார நிபுணர்களையும், தொழில்சார் பொருளியல் வல்லுநர்களையும் கொண்டு சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும். இந்தத் திட்டங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட 20 ஆண்டுத் திட்டங்களாக அமைக்கப்படும்.

இந்தியச் சிறுபான்மையினர் துறை அமைச்சகத்தின் பன்முகத்தன்மைக் குறியீடு அளவீட்டினை முன்மாதிரியாகக் கொண்டு சாதி மேம்பாட்டுக் குறியீடு எனும் அளவீட்டு முறை ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அனைத்துப் பிரிவினரும் சம வளர்ச்சியை எட்ட வழி செய்யப்படும்.

அட்டவணை இனத்தவரும், மலைவாழ் மக்களும் பெற்று வரும் அனைத்துச் சலுகைகளும் அவர்கள் விருப்பத்துக்குரிய மதத்திற்கு மாறிய பின்னரும் தரப்படும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகப் பின்தங்கிய மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மாணவர்களின் விடுதிச் செலவை முழுமையாக அரசே ஏற்கும். இந்தப் பிரிவு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages