மக்களவை தேர்தலில் கூட்டணி யாருடன்? எப்போது முடிவு எடுக்கப்படும்? - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Agnipuratchi

மக்களவை தேர்தலில் கூட்டணி யாருடன்? எப்போது முடிவு எடுக்கப்படும்? - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி!

Share This

மக்களவை தேர்தலில் கூட்டணி யாருடன்? எப்போது முடிவு எடுக்கப்படும்? - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி!

அரியலூர் மாவட்டம் பெரியதத்தூரில் வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி இல்ல விழாவில் கலந்து கொண்ட பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,

தமிழ்நாட்டில் தற்போது மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. சென்னை அருகிலுள்ள பரனூர் சுங்கச்சாவடியில், 53% முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் சிறப்பு வாகனங்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது.  அங்கு ஊழல் நடந்து, பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள். இதற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும்.

அரியலூர் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்து, மக்களுக்கும் - அதிகாரிகளுக்கும்  விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. முதல்வர், சோழர் நீர்ப்பாசன திட்டத்தை அறிவிக்க வேண்டும். கடந்த மாதம் பொன்னேரியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தி, 5 இலட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம், 5 இலட்சம் கையெழுத்து வந்ததும் முதல்வரை சந்தித்து, திட்டத்தை செயல்படுத்த அழுத்தம் கொடுப்போம். அரியலூர் மாவட்டம் ஒருகாலத்தில் மிக பசுமையான, செழிப்பாக இருந்த மாவட்டம், இன்று வறட்சி, வேலைவாய்ப்பு இன்மையால் தடுமாறுகிறது. அம்மாவட்ட மக்கள் வளர்ச்சியடைவதற்கான திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.

• JOIN US: https://t.me/agnipuratchi1

மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை ரூ.200 குறைத்ததை முன்னதாகவே செய்திருக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் உச்சபட்ச கொள்ளை இலாபத்தில் இயங்கி வருகிறது. அவர்களின் கொள்கைப்படி கச்சா எண்ணெய் விலை குறைக்கப்படும்போது, இந்தியாவில் விலை குறைவது இல்லை. இன்று அதே நிலையில் கச்சா எண்ணெய் விலை இருந்தும், எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை ரூ.500 முதல் ரூ.600 வரை விலை குறைக்க வேண்டும். பெட்ரோல் - டீசல் விலையும் குறைக்க வேண்டும். எரிவாயு விலை ரூ.200 குறைத்தது போதுமானதாக இல்லை. பண அழுத்தம் காரணமாக பல பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, போக்குவரத்து, மின்சார கட்டணம், காய்கறிகள் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. ஆனால், ஊதியம் உயரவில்லை, வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. மத்திய அரசு அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே மக்கள் சுயமரியாதையோடு வாழ உதவும்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும், அணைகளின் கட்டுப்பாடு கர்நாடக மாநில அரசிடம் உள்ளது. ஹரியானா - பஞ்சாப் - சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் அணைகளின் கட்டுப்பாடு மேலாண்மை வாரியத்திடம் இருக்கிறது. அவர்கள் மாநிலங்களுக்கு தேவையை அறிந்து நீரை வழங்குகிறார்கள். இங்கு அண்டை மாநிலத்திடம் கேட்கத்தான் முடியும். காவேரி மேலாண்மை வாரியத்திற்கும், காவேரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவிற்கும் அதிகாரம் கிடையாது. திறந்து விடுங்கள் என்று கூறலாமே ஒழிய, திறந்து விடவில்லை என்றால் எதுவும் செய்ய இயலாது. காவேரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு என்னவென்றால், 177.25 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு கொடுக்க வேண்டும். செப்டம்பர் மாதத்திற்குள் 60 டிஎம்சி நீராவது கொடுத்திருக்க வேண்டும். ஆனால், நமக்கு அவர்கள் கொடுக்கவில்லை. ஒழுங்குமுறை குழு 5000 கனஅடி நீர் திறக்கச்சொன்னால், கர்நாடகா 3000 கனஅடி நீர் தான் வழங்குவோம் என கூறுகிறார்கள். தரவேண்டியது 60 டிஎம்சி என்ற நிலையில், 2 டிஎம்சி கொடுக்கிறார்கள். தமிழகத்திற்கு பிச்சை போடுகிறார்கள். உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பு கொடுத்து, அழுத்தும் தர வேண்டும். இல்லையேல் குறுவை சாகுபடி கட்டாயம் தமிழக விவசாயிகளுக்கு பெரும் இழப்பாக அமையும்.

10.5% உள்ஒதுக்கீடு வேண்டும் என பலவகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பிறகு கொடுக்கப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றார்கள், நீதிமன்றம் முதலில் அதனை தடை செய்தாலும், பின் 10.5% உள்ஒதுக்கீடு கொடுக்கலாம் என நிபந்தனை விதித்தது. தரவுகளை தயாரிக்க அறிவுறுத்தியது. அந்த தரவுகளை ஒன்றரை ஆண்டுகாலமாக தமிழ்நாடு அரசு சேகரித்து வருகிறது. அரசிடம் தரவுகள் ஏற்கனவே இருக்கும் நிலையில், அதனை எடுக்க இயலாமல் அரசு அமைதியாக இருந்து வருகிறது. இதுவே கலைஞரின் ஆட்சியாக இருந்தால், இந்நேரம் கொடுத்திருப்பார். இப்போதும் கலைஞரின் ஆட்சி நடப்பதாக கூறும் இன்றைய ஆட்சியாளர்கள், கலைஞரின் ஆட்சியை வழங்கவில்லை. முதல்வர் தனது தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். சுற்றியுள்ள அமைச்சரின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டு, தாமதம் செய்ய கூடாது. நிச்சயம் அப்படியொரு சூழ்நிலை வந்தால், கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம். இது சாதிய பிரச்சனை இல்லை, சமூக நீதிப்பிரச்சனை. சமூகநீதி என்றால் திமுக என விளம்பரப்படுத்தினால் போதாது, நடைமுறைப்படுத்த வேண்டும்., செயல்படுத்த வேண்டும்.

20% இட ஒதுக்கீடு கலைஞர் கொடுத்ததாக கூறுகிறார்கள், அதனை போராடி பெற்றுத்தந்தது மருத்துவர் அய்யா அவர்கள். அந்த 20 விழுக்காடில் உள் ஒதுக்கீடு மட்டுமே கேட்கிறோம். அதனை அவசியம் செய்ய வேண்டும். இன்னும் பொறுமையாக இருக்க முடியாது. அதனை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அது சாதிய கணக்கெடுப்பு மட்டும் இல்லை. சமூக ரீதியாக பின்தங்கிய நிலையையும் கணக்கெடுத்து வருகிறார்கள். அங்கும் அதனை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் செல்கிறார்கள். இவற்றையும் மீறியே வெற்றிகரமாக தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதனை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் செய்துள்ளார்.

• JOIN US: https://t.me/agnipuratchi1

"12 கோடி மக்கள் வாழும் பீகார் மண்ணில் இருக்கும் சமூகங்கள், எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை தரவுகளின் வழியே சேகரித்து முன்னேற்றத்தை கொடுக்க முயற்சிக்கிறோம்" என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். இதனை பிற மாநில முதல்வர்களும் பின்பற்ற வேண்டும் என நிதிஷ் குமார் தெரிவிக்கிறார். தமிழ்நாடு முதல்வரும் அதனை பின்பற்ற வேண்டும். அதுதானே சமூகநீதி.

இறுதியாக 1931ல் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு குறியீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. இட ஒதுக்கீடு சாதிய அடிப்படையிலேயே இந்தியா முழுவதும் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (BC) 30% இருக்கிறார்கள். இவர்களில் சில சமூகம் முன்னேறி இருக்கிறார்கள், சிலர் இன்னும் பின்தங்கி இருக்கிறார்கள். இந்த சமநிலையின்மை குறித்த தகவலை சேகரித்து, அதனை சரி செய்வதே சமூகநீதி. ரோகிணி கமிஷன் பரிந்துரை செய்துள்ளதின் படி, தோராயமாக இந்தியாவில் இருக்கும் 2800 சமுதாயங்களில் 45% வேலைவாய்ப்புகளை 60 சமுதாயங்கள் மட்டுமே தட்டிச்செல்கின்றன. உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி, 10.5 % இட ஒதுக்கீடுக்கு பொருளாதார நிலையிலான பின்தங்கிய தரவை கேட்கிறார்கள். அவை அரசிடம் இருக்கின்றன. அவற்றை வைத்து உள் ஒதுக்கீடை அரசு கொடுக்க வேண்டும்.

நேற்று முன்தினம், பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர் நகரத்தில் 35ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றோம். உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்ந்த அரசு வழக்கறிஞர்கள், பாட்டாளி மக்கள் கட்சியைப்பற்றி மிகவும் மோசமான அவதூறு கருத்துக்களை பகிர்ந்தார்கள். பாமக வன்முறை கட்சி, எந்த கூட்டம் நடந்தாலும் வன்முறை செய்கிறார்கள் என கூறி இருக்கிறார்கள். இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், நாங்கள் பேச ஆரம்பித்தோம் என்றால் நீங்கள் தாங்கமாட்டீர்கள். நாங்கள் அந்த அளவுக்கு இறங்கி பேச விரும்பவில்லை.

பாமக தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் பல திட்டங்களை வழங்கி இருக்கிறது. நாங்கள் இல்லையென்றால் இந்தியாவிற்கே 108 ஆம்புலன்ஸ் வந்திருக்காது, தேசிய சுகாதார திட்டம் கிடைத்திருக்காது, இன்னும் போலியோ ஒழிந்திருக்காது, பொதுஇடங்களில் புகைபிடிக்க தடைச்சட்டம் வந்திருக்காது, புகை-மது போன்ற போதை பொருட்கள் மீதான எச்சரிக்கை வாசகம் வந்திருக்காது, 8 இலட்சம் ஆஷாக்கள் வந்திருக்கமாட்டார்கள், தமிழ்நாட்டில் பல இரயில்வே திட்டங்கள் உருவாகி இருக்காது, புதுச்சேரி-ஜிப்மர் வந்திருக்காது, தமிழ்நாடு - இந்தியா அளவில் 6 இடஒதுக்கீடுகள் வந்திருக்காது. இவ்வாறாக பல சாதனைகள் செய்துகொண்டு இருக்கும் கட்சியை, அரசு வழக்கறிஞர்கள் வன்முறை கட்சி என அடையாளப்படுத்துவது, ஆக்ரோஷமாக வாதம் செய்வது ஏற்றுக்கொள்ள இயலாதது. நாங்கள் கேட்டது சாதாரண பொதுக்கூட்ட அனுமதி தான்.

இதே கூட்டம் நெல்லை, உத்திரமேரூர், திருத்தணி, சென்னை, கும்பகோணம், பாபநாசம், திண்டுக்கல் பகுதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது. கடலூரில் அனுமதி மறுக்கப்படுவது ஏன்? இதில், நேற்று நடந்த நீதிமன்ற வாதத்தில், என்.எல்.சி குறித்து பேசமாட்டோம் என உத்தரவாதம் கொடுக்கச்சொல்கிறார்கள். எதற்கு என்.எல்.சி-க்கு பயம் கொள்கிறார்கள்? என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என சொல்கிறீர்களா?

பொதுக்கூட்டத்தில் இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளான சாதிவாரி கணக்கெடுப்பு, காவேரி நீர் பிரச்சனை, கடலூர் மாவட்ட சிப்காட் பிரச்சனை, நெல் கொள்முதல் விலையை உயர்த்துதல் என பல கோரிக்கைகளை பேசுவோம். கடலூர் மாவட்ட சிப்காட்டில் இருக்கும் நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவுகளால், தாய்மார்களின் தாய்ப்பாலில் டையாக்சின் என்ற கேன்சரை உருவாக்கும் வேதிப்பொருள் உள்ளது. இதனைப்பற்றி பேசக்கூடாதா? பரங்கிப்பேட்டையில் இருக்கும் சைமா ஆலையினால், ஈரோடு-திருப்பூர் சாயக்கழிவுகளை குழாய் மூலமாக கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து, அந்நீரை கடலில் விடுவதாக கூறுகிறார்கள். பரங்கிப்பேட்டை காவேரி ஆறு முடியும் பகுதி.

அங்கு விவசாயம் பாதிக்கப்படாதா? வெள்ளாறு - மணிமுத்தாறு தடுப்பணை வேண்டும் என கோரிக்கை இருக்கிறது. அவை குறித்து பேசக்கூடாதா?

கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், மடகாஸ்கரில் இருந்து குறைந்த விலையில் முந்திரியை இறக்குமதி செய்ததால், இங்குள்ள வியாபாரிகளின் முந்திரி விலை குறைக்கப்பட்டு, அவர்களின் இலாபம் மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

என்.எல்.சி பிரச்சனை அனைவருக்கும் தெரியும். அண்ணா தொடங்கிய திமுக, கலைஞர் நடத்திய திமுக என்.எல்.சி-க்கு அடிமையாக இருப்பதை பார்ப்பதற்கு எங்களுக்கு மனம் இல்லை. அடக்குமுறை, காவல்துறை ஏவல் என ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்படுகிறது.

நிலத்திற்கு தேவை இருந்தால் சரி, தேவையே இல்லாத விசயத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவது ஏன்? தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி 36 ஆயிரம் மெகாவாட், தமிழகத்தின் தேவை 18 ஆயிரம் மெகாவாட் ஆகும். இதில், என்.எல்.சி பங்களிப்பு 800 மெகாவாட் தான். வெறும் 800 மெகாவாட்டுக்காக 65 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தமிழ்நாடு அரசு என்.எல்.சி-க்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. இன்னும் 50 ஆயிரம் ஏக்கர் கேட்டு என்.எல்.சி அரசிடம் கோரிக்கை வைக்கிறது. இவை அனைத்தும் டெல்டா பகுதியில் வருகின்றன. 3ம் நிலக்கரி சுரங்கத்தை ஏற்படுத்தவும் என்.எல்.சி தயாராக இருக்கிறது, தமிழ்நாடு அரசும் உடந்தையாக இருக்கிறது. 3வது சுரங்கத்தில் 26 கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் 9 கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் முதல்வர் நானும் டெல்டாகாரன் தான் என கூறி, நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி கொடுக்கமாட்டோம் என உறுதி கொடுத்தார். இன்று அவை எங்கே போனது? அமைச்சர்களும் மறுக்கிறார்கள். கடலூர் மாவட்டம் தானே என்ற மனநிலையில் இருக்கிறீர்களா? மின்சாரம் தேவை என்றால் சரி, என்.எல்.சி கொடுக்கும் மின்சாரம் வெறும் 800 மெகாவாட் தான். தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி 15 ஆயிரம் மெகாவாட், காற்றாலை மின்சாரம் 7,200 மெகாவாட் கிடைக்கிறது. இவ்வுளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கிடைக்கிறது, ஆனால் என்.எல்.சி-யிடம் அரசு இறங்க வேண்டிய காரணம் என்ன?.

என்.எல்.சி வருவதற்கு முன்பு 8 அடி என இருந்த நிலத்தடி நீர்மட்டம், இன்று 800 அடிக்கு சென்றுவிட்டது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை இல்லை, தமிழ்நாடு மக்களுக்கு வேலை இல்லை, முதலீடும் இங்கு இல்லை, இலாபம் வடமாநிலத்தில் முதலீடு செய்யப்படுகிறது. தேவைக்கு அதிகமான நிலத்தை வாங்கி, தனியாருக்கு விற்பனை செய்து, இன்னும் நிலத்தை தேவை என்கிறார்கள். தனது தேவைக்கு அதிகமாக 10 மடங்கு நிலத்தை வைத்துக்கொண்டு, இன்னும் நிலம் வேண்டும் என கேட்கிறார்கள்.

நமக்கு சோறுபோடும், நாம் சோறுசாப்பிடும் மண்ணை அழித்து, நமக்கு தண்ணீர் கொடுக்காத கர்நாடகாவுக்கு என்.எல்.சி மின்சாரமே செல்கிறது. அதேபோல, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும் மின்சாரம் செல்கிறது. என்.எல்.சி பற்றி பேசக்கூடாது என்றால், சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா? அடக்குமுறைகளை பார்த்துவிட்டோம், எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படப்போவதும் இல்லை, பயப்படப்போவதும் இல்லை. மண்ணையும் மக்களையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வோம். மக்களுக்காக போராடுவதை, அவர்களுக்காக குரல் கொடுப்பதை அரசியல் கட்சியின் கடமையாக நாங்கள் பார்க்கிறோம். மண்ணையும், மக்களையும் பாதுகாப்பது குறித்து பேசக்கூடாது என்றால், நாங்கள் என்ன ரஷியாவில் இருக்கிறோமா? நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று கூட்டம் நடத்துவோம். இது எங்களின் அடிப்படை அரசியல்சாசன உரிமை.

சமீபத்தில் கடலூரில் உதயநிதி, கீ.வீரமணி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். எங்களுக்கு அனுமதி இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி குறித்து அவதூறாக சொன்ன அரசு வழக்கறிஞர்கள், அரசு கூறாமல் ஆக்ரோஷமாக வாதம் செய்திருக்கமாட்டார்கள். பாமக இல்லையென்றால், கலைஞர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்திருக்க முடியாது. இது திமுகவினருக்கு தெரியும். நாங்கள் பதிவு செய்த வழக்கை, அன்று இரவு திரும்ப பெறவில்லை என்றால், அன்று வழக்கை எடுத்திருக்கமாட்டார்கள். கலைஞரை அண்ணா அருகில் அடக்கம் செய்திருக்க முடியாது. இது எங்களுக்கான பெருமை. கலைஞரின் மீது இருந்த அளவுகடந்த மரியாதை காரணமாக வழக்கை திரும்ப பெற்றோம். பாமக தயவாலேயே 2006ல் 96 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வைத்து 5 ஆண்டுகாலம் கலைஞர் ஆட்சி செய்தார். இதனையெல்லாம் திமுக தெரிந்தும் மறந்துவிட்டது. எங்களின் மீது அவதூறு பரப்ப வேண்டாம். நாங்கள் பேச ஆரம்பித்தால் தாங்கமாட்டீர்கள். உங்களின் வன்முறை, சர்ச்சை செயல்கள் என அடுக்கடுக்கான குறைகள் உள்ளன. அவற்றை நாங்கள் பேச ஆரம்பித்தால் நிலை என்னவாகும்? எங்களுக்கு வன்முறை செய்வது வேலையும் இல்லை, நோக்கமும் இல்லை. அடித்தளத்தில் உள்ள விவசாயிகளுக்கு, பாட்டாளிகளுக்கு போராடுவதே எங்களின் கொள்கை. நீங்கள் எத்தனை தடை வேண்டுமானாலும் போடுங்கள்.

• JOIN US: https://t.me/agnipuratchi1

சமூக நீதி என்றால் இட ஒதுக்கீடு கொடுப்பது மட்டுமல்ல. அடிப்படை உரிமைகளை வழங்குவதே சமூக நீதி. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வீடு, விவசாயிகள் மகிழ்ச்சி, சுற்றுசூழல், குடிநீர் வழங்குதல் சமூக நீதியில் தான் உள்ளன. எங்களின் பயணம் தொடரும், சட்டரீதியான போராட்டத்தை மேற்கொண்டு வெற்றி அடைவோம்.

நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கவில்லை. விரைவில் முடிவு எடுப்போம். எங்களின் நோக்கம் 2026ல் பாமக ஒருமித்த கட்சிகள் கொண்ட கூட்டணி அமைப்போம். அதற்கேற்ப வியூகம் 2024ல் நாடாளுமன்ற தேர்தலின்போது தெரிவிக்கப்படும்.

2019ல் என்.எல்.சி-க்கு எதிராக எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருந்தார், மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டு வந்தார். ஆனால், இன்று என்.எல்.சி-க்கு அடிமையாக இருக்கிறார்கள். என்.எல்.சி பாதிப்பு தெரியவந்தும் அதனை ஆதரிப்பது ஏன்? உலகமே புதுப்பிக்கத்தக்க எரிபொருளை கொண்டு மின்சாரம் தயாரிக்கிறார்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் காலநிலை கொள்கையை அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு 17 ஆண்டுகளில் 2040-க்குள் பூஜ்ய கார்பன் வெளியேற்றம் என்ற நிலையை அடையும் என தெரிவித்தார். 2030-க்குள் தமிழ்நாட்டில் 50% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க வகைகளில் இருந்து தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.

• JOIN US: https://t.me/agnipuratchi1

ஐ.நா சபையில் 2015ல் பாரிஸ் மாநாட்டில் இந்தியாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 2030-க்குள் இந்தியா 50%, 2050-க்குள் 100% புதுப்பிக்க இயலாத எரிவாயுக்களின் தேவையை குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிவாயுவுக்கு மாறுவோம் என தெரிவித்துள்ளது. உலகமே புதுப்பிக்கத்தக்க எரிவாயுவை நோக்கி மாறுகிறது. பழுப்பு நிலக்கரியை எடுத்து, நிலத்தை அழிக்கிறார்கள். கலைஞர் இருந்திருந்தால் 100% அனுமதி கொடுத்திருக்கமாட்டார். கலைஞர் ஆட்சி நடத்துவதாக கூறும் திமுகவினர், கலைஞர் இருந்தால் என்ன செய்வார் என யோசனை செய்து பார்க்க வேண்டும். கலைஞரின் ஆட்சியை வழங்குவதாக கூற, இன்றைய ஆட்சியாளர்களுக்கு எப்படி மனம் வருகிறது என தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய பிரச்சனை கஞ்சா விற்பனை. எங்கும் கஞ்சா விற்பனை செய்கிறார்கள், காவலர்களை அடிக்கிறார்கள். கஞ்சா விற்பனையாளர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் செயல்கள் அளவுக்கு மீறி போவது இதன் வாயிலாக உறுதியாகிறது.

குற்றவழக்குகளுக்கு முக்கிய காரணமாக அமைவது கஞ்சா. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலமுறையும், நேரில் சந்தித்த இரண்டு முறையும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கோரிக்கை வைத்தோம். மாதாமாதம் காவலர்கள், ஆட்சியர்கள் தலைமையில் முதல்வர் கூட்டம் கண்டிப்பாக நடக்க வேண்டும். காவலர்களுக்கு தெரியாமல் கஞ்சா விற்பனை நடக்காது என்பதால், கடுமையான நடவடிக்கை எடுத்து அதனை ஒடுக்க வேண்டும். மதுவை விட கஞ்சாவை வைத்து நாம் மோசமான பிரச்சனைகளை சந்திக்கவுள்ளோம்.

கஞ்சா மட்டுமல்லாது அபின், கோகைன் போன்ற போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா விற்பனையார்களை அதிரடி ஆக்சன் என்ற பெயரில் 3 ஆயிரம் பேரை கைது செய்து, 20 நாட்களில் வெளியே விடுவது எதற்கு? 20 ஆயிரம் காவலர்களை நியமனம் செய்து விற்பனையை கட்டுப்படுத்தலாம். ஓய்வுபெற்ற காவலர்கள், இராணுவ அதிகாரிகளை பகுதிநேர அதிகாரிகளாக நியமித்து சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்கலாம்.

முதல்வருக்கு கஞ்சா விவகாரத்தில், அதனை ஒழிக்க ஈடுபாடு இல்லை. அண்ணாவின் கொள்கையை இன்றைய திமுக மறந்துவிட்டது. அண்ணாவின் கொள்கையை படிப்படியாகவாது செய்திருக்கலாம். நாங்கள் அழுத்தம் கொடுத்து 500 மதுக் கடைகளை மூடினார்கள். உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் அக்கடைகளை மூடவில்லை என்பது பின்னாளில் தெரியவந்துள்ளது. இது வேதனையை தருகிறது. மதுவிலக்குத்துறை அமைச்சரின் துறையை மது விற்பனைத்துறை என கூறவேண்டும். மதுவால் இந்த தலைமுறை நாசமாகிவிட்டது, இன்றைய தலைமுறையால் மது இல்லாமல் இருக்க இயலாது. நாங்கள் எதிர்கால தலைமுறைக்காக போராடுகிறோம். மது இல்லாமல் இளம் தலைமுறை இருக்க இயலாது என்பதே திராவிட மாடல்" என அன்புமணி பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages