வீரப்பன் நாயகனா, வில்லனா?
"உண்மையான மனிதனா இருந்தா உயிரைக்கூட கொடுத்து காப்பாத்துவாரு... துரோகம் மட்டும் பண்ணிட்டா உசிரை எடுக்கணும்னு நினைப்பாரு!"- சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் புன்னகை கலந்த இந்த ஓப்பன் ஸ்டேட்மெண்ட்டோடு தொடங்குகிறது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் The Hunt for Veerappan' என்ற டாக்குமெண்டரி வெப்சீரீஸ்!
காவல்துறையால் 20 வருடங்கள் தேடப்பட்ட குற்றவாளி வீரப்பன் எப்படிக் கொல்லப்பட்டான் என்ற விஷயத்தை ஆவணப்படமாக்கும் சவாலான வேலையை முடிந்த அளவு சமரசமின்றி செய்திருக்கிறார் செல்வமணி செல்வராஜ். 'Life of Pi' ஆங்கிலப்பட இயக்குநர் ஆங்லீயின் உதவி இயக்குநர் என்ற அடையாளத்தோடு நான்கு வருட உழைப்பைக் கொட்டி இந்த டாக்குமெண்டரியை நெட்பிளிக்ஸுக்காக ஒரு பெரும் ரிசர்ச் டீமோடு இயக்கியிருக்கிறார்.
மொத்தம் 120 பேர், அதில் 44 வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்ததோடு மட்டும் அல்லாமல் ஆயிரக்கணக்கான யானைகளையும் லட்சக்கணக்கான சந்தன மரங்களையும் வெட்டி சமூக மற்றும் பொருளாதார இழப்புக்குக் காரணமான பெரும் கொள்ளைக்கார - கடத்தல்காரரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை இந்த நான்கு எபிசோடுகளில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
The Hunt for Veerappan
இந்த ஆவணப்படம் வீரப்பனைக் கதாநாயகனாகத் தூக்கிப் பிடிக்கிறதா... அல்லது துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியாலேயே செத்துப்போனான்' என்ற ஒரு Notorious Criminal-ன் முடிவினை நீதி போதனையாகச் சொல்கிறதா?
அச்சு ஊடகங்களில் வீரப்பன் பற்றிய கட்டுரைகள் பத்திரிகைகளின் விற்பனைகளைத் தீர்மானித்த காலத்தில், சமகால வரலாற்றில் நாம் பார்த்த 20 வருடங்கள் நீண்ட 'எலி - பூனை ஆட்டம்' 2004-ல் முடிவுக்கு வந்தது. வீரப்பன் வேட்டையாடப்பட்டதை முடிந்த அளவு சுருக்கமாக 168 நிமிடங்களுக்குள் 4 எபிசோடுகளாகத் தந்திருக்கிறார்கள்.
• JOIN US: https://t.me/agnipuratchi1
முதல் எபிசோடான 'The Forest King', வீரப்பன் ஒரு கிரிமினலாக உருவான கதையைப் பேசுகிறது. கர்நாடகா - தமிழ்நாடு என்ற இரு மாநில போலீஸைக் குலைநடுங்க வைத்த ஒரு நபர் முதன்முதலில் எப்படி வனத்துறை ரெக்கார்டுகளில் பதிவானார் என்பதைத் தெளிவாக விளக்குகிறது. யானைத் தந்த கடத்தலுக்காக யானைகளைக் கொல்ல ஆரம்பித்த பயணம், மெல்ல மெல்ல 10,000 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பை தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்தி ஒரு சாம்ராஜ்யத்தையே காட்டுக்குள் நிறுவிய நபர் வளர்ந்ததைப் பதிவு செய்திருக்கிறது.
ஆனால், வீரப்பன் வெறும் கடத்தல்காரனாய் மட்டும் இருக்கவில்லை. தன்னைப் பிடிக்க மெனக்கெட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினருடன் வீரப்பன் நடத்திய வன யுத்தம்தான் நம் நூற்றாண்டில் இந்தியா கண்ட மிகப்பெரிய ரத்த வேட்டையாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. காவல்துறைக்கும் வீரப்பனுக்கும் நடந்த இந்த வன யுத்தத்தில் இரு பக்கமும் எண்ணற்ற உயிர்கள் பலியாகின.
இரு தரப்பு வாதங்களையும் இந்தப் பகுதியில் நாம் உணர முடிந்தாலும் ஶ்ரீனிவாஸ் என்ற வனத்துறை அதிகாரியின் கொடூர மரணத்தோடு இந்த எபிசோடு முடிகிறது. முதன்முதலில் வீரப்பனைச் சமாதானப்படுத்தி சரண்டர் ஆகச் செய்ய மெனக்கெட்ட STF Chief-ஆக இருந்த ஶ்ரீனிவாஸை வீரப்பன் கொலை செய்த விதம் நம்மை உலுக்கி விடுகிறது. கொலைகளைச் சர்வசாதாரணமாய் செய்யும் கிரிமினலாக வீரப்பன் இருந்தான் என்பதை ஶ்ரீனிவாசின் கொலை பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.
Watch: https://youtu.be/K3CeMFEUZAU
வீரப்பன் கொலைகளைச் செய்த Modus Operandi பற்றியும், கூடவே காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்திய வன்கொடுமைகள் பற்றியும் 'The Bloodbath' என்ற இரண்டாவது எபிசோடில் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இரு தரப்பு 'Revenge Saga' இப்பகுதியில் காட்டப்பட்டிருக்கிறது. ஷகீல் அகமது, 'ராம்போ' கோபால கிருஷ்ணன் போன்ற காவல்துறை அதிகாரிகளின் முயற்சிகள் மற்றும் காவல்துறையே நல்லூர் கிராமத்தை எரித்துச் சூறையாடிய கதை, சங்கர் மகாதேவ் பிதரி என்ற அதிரடிக்குப் பெயர் போன காவல்துறை அதிகாரியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் என ஊடகவியலாளர் மற்றும் வீரப்பன் கேங்கில் இருந்தவர்களாலேயே விவரிக்கப்படுவதைக் கேட்கும்போது குலை நடுங்குகிறது.
சுனாத் என்ற புலனாய்வுப் பத்திரிகையாளர், கர்நாடகா அதிரடிப்படை தலைமை அதிகாரி ஆர்கேஷ், கர்நாடகா காவல்துறை அதிகாரி டைகர் அசோக் குமார், ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி பி.கே,சிங் ஆகியோரின் ஒட்டுமொத்த விவரிப்புக்கும், முத்துலட்சுமி தன் கணவர் வீரப்பன் பற்றிச் சொல்வதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள். ஆனால், ஷகீல் அகமதுவின் முடிவு, பத்திரிகையாளர் விவரிக்கும் விதம் எல்லாவற்றையும் தாண்டி பின்னணி இசையும் கூடவே ஒலிக்கும் வீரப்பனின் குரலும் ஒரு த்ரில்லர் படம் பார்த்த உணர்வை நமக்குக் கடத்துகிறது.
'The Revolutionary' எபிசோடை வீரப்பனின் எழுச்சி என்றே சொல்லலாம். முன்னாள் தமிழ்த் தேசிய போராளி மாறன், கொளத்தூர் மணி, வீரப்பன் கூட்டத்திலிருந்த அன்புராஜ் போன்றோரின் பதிவுகள் அவற்றுக்கு வலு சேர்க்கின்றன. காவல்துறைக்கும் வீரப்பனுக்குமான யுத்தத்தில் வீரப்பன் சாமர்த்தியமாகச் செயல்பட்ட காலகட்டத்தை இது பதிவு செய்திருக்கிறது. அரசியல் ரீதியான தமிழ்த் தேசிய அமைப்பினருடனான தொடர்பு, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தலை வீரப்பன் செயல்படுத்திய விதம், ராஜ்குமாரை பணயக்கைதியாக வைத்து இரு மாநில அரசாங்கங்களிடம் வீரப்பன் வைத்த நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள், பத்திரிகையாளர்களைச் சந்தித்தது, தூதுவர்களைக் காட்டுக்குள் வரவைத்தது, பேரம் படியாதது... என ஒரு த்ரில்லர் சினிமாவின் 'Third Act' போலவே இருக்கிறது. பல இடங்களில் வீரப்பனின் வெகுளித்தனத்தையும் மீறி, வீரப்பனின் புத்திக் கூர்மை இப்பகுதியில் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யத்தைத் தருகிறது.
'The Way Out' என்ற கடைசி எபிசோடு வீரப்பனின் பலம் எது, பலவீனம் எது என நமக்கு விவரிக்கிறது. வீரப்பனின் இறுதி அத்தியாயத்தை எழுதிய, நமக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி முன்னாள் அதிரடிப்படையின் தலைவர் விஜயகுமார் மற்றும் அவரது புத்திசாலித்தனமான 'முகிலன்' என்ற TRAP பற்றியும் அதில் வீரப்பன் மாட்டிக்கொண்ட விதத்தையும் உண்மைக்கு அருகிலிருந்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 'கண் புரை', 'ஆயுதங்கள் மீதிருந்த காதல்' போன்ற இரண்டு விஷயங்களை வைத்து வீரப்பனை எப்படி நம்ப வைத்து காட்டைவிட்டு வெளியே கொண்டு வந்தார்கள் என்பதை வீரப்பன் ஆபரேஷனில் பங்கு கொண்டவர்களே விவரித்திருக்கிறார்கள்.
ராஜ்குமார் குடும்பத்தினரின் சாட்சியங்கள், அதிரடிப்படையிலிருந்த அதிகாரிகளின் சாட்சியங்கள், விஜயகுமாரின் விளக்கம் போன்றவை இந்த ஆவணப்படத்தில் இடம்பெறவில்லை. இதனாலோ ஏனோ இந்த நீண்ட யுத்த கதை, திடீரென முடிந்த உணர்வைத் தருகிறது.
டெக்னிக்கலாக மிகச் சிறப்பான புரொடக்ஷன் டிஸைனிங் செய்திருக்கிறார்கள். காட்டைக் காட்டியவிதம் சிறப்பு. உதித் குரானாவின் ஒளிப்பதிவும், அஜித் கே நாயர் - ஜாக், வெஸ்டன் க்யூரியின் எடிட்டிங், ஜானு சந்தாரின் பின்னணி இசை மற்றும் ஆல்வின் ரீகோ-சஞ்சய் மௌரியாவின் சவுண்ட் டிஸைனிங்கும் இந்த வெப்சீரிஸை ஆற்றல்மிக்க படைப்பாக மாற்றுகிறது.
• JOIN US: https://t.me/agnipuratchi1
அதே சமயம், "அக்கிரமமா எல்லாம் நடந்திருச்சு. யார்தான் என்ன செய்ய முடியும்... அவங்களுக்கு ஒரு சட்டம் இருந்தா நம்மளுக்கும் ஒரு சட்டம் இருக்குது!" என்ற வீரப்பனின் நியாய வாதக் குரலோடும், "அந்த ஆகாய வாணிக்கும், கடவுளுக்கும் நான் கும்புடுற காட்டுத் தேவர்களுக்கும் உண்மை தெரியும். எனக்கு ஒரு பாவமும் தெரியாது!" என்ற வீரப்பனின் பரிதாபக் குரலோடும் இறுதி அத்தியாயம் முடியும்போது இது வீரப்பன் வாழ்க்கையைக் கொண்டாடும் ஒரு படைப்பாக மாறிவிட்டதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. என்னதான் இருந்தாலும் வீரப்பன் ஒரு குற்றவாளி என்ற நடுநிலை உணர்வை இன்னுமே கொடுத்திருக்கலாம்.
அந்தக் குறையைத் தவிர்த்து தமிழில் ஓர் ஆகச்சிறந்த ஆவணப்படத் தொடராக, வீரப்பனின் வரலாற்றைப் பேசும் படைப்பாகக் கவனிக்க வைக்கிறது இந்தத் தொடர்.
நன்றி: விகடன்.
No comments:
Post a Comment