இயற்கையை போற்றும் தன்னலமற்ற இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்! - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுதலை நாள் வாழ்த்து.
உலகிற்கே வழிகாட்டும் ஜனநாயக நாடான இந்தியா அதன் 77&ஆம் விடுதலை நாளை கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வரம் என்பது விடுதலை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 400 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா 76 ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட போது ஒட்டுமொத்த இந்திய மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விடுதலை என்ற அந்த ஒற்றை வார்த்தையின் மூலமாகத் தான் ஆங்கிலேயர்களின் பொருளாதார, சமூக, கல்விச் சுரண்டல்களில் இருந்து நாம் தப்பித்து வந்தோம். அந்த வகையில் ஒவ்வொரு விடுதலை நாளும் பெருமகிழ்ச்சி அளிக்கும் நாள் தான் என்பதில் ஐயமில்லை.
ஆனால், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் நிலையில் நாம் இல்லை என்பது தான் இந்த மகிழ்ச்சியான நாளில் வருத்தமான உண்மை. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையடைந்த நாம், இப்போது பேராசை மனிதர்களிடமும், நிறுவனங்களிடமும் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். உள்ளூர் முதல் உலகம் வரை அவர்கள் அரங்கேற்றும் அத்துமீறல்களால் ஒட்டுமொத்த உலகமுமே அமைதியையும், விடுதலையையும் இழந்து பேரழிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதைப் பற்றி நமக்கு கவலையில்லை.
எதை அழித்தாவது வருவாய் ஈட்ட வேண்டும் என்ற அறமற்ற கொள்கை நிலைப்பாடு தான் அனைத்து பேரழிவுகளுக்கும் காரணம். நிலங்களைப் பறிப்பது, வளங்களை அழிப்பது, அதன் மூலம் உழவர்களை ஆதரவும், ஆதாரமும் அற்றவர்களாக மாற்றுவது, இயற்கையை அழிப்பதன் மூலம் புவிவெப்பமயமாதலை விரைவுபடுத்தும் மடமை, நெய்வேலியில் தொடங்கி உலகின் அனைத்து மூலைகளிலும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க இன்னொரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தாக வேண்டும்.
சுதந்திரம் என்பது ஒற்றை வார்த்தை அல்ல. அமைதி, வளம், சமத்துவம், வாழ்வுரிமை, சமூகநீதி, கவுரமான வாழ்க்கை உள்ளிட்ட மனித உரிமைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு தான் விடுதலை ஆகும். இத்தகைய சிறப்புமிக்க விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்றால், அவ்வாறு உறுதி செய்யப்பட்ட உலகில் நாம் வாழ வேண்டும் என்றால் இயற்கை நமக்கு அளித்த அனைத்து வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய விடுதலைக்கு இணையான இந்தத் தேவையை நிறைவேற்றி, பேராசை இல்லாத இந்தியாவை உருவாக்கம் செய்யவும், போதை, மது, சூது ஆகிய மூன்று சமூகக் கேடுகளையும் முற்றிலுமாக ஒழிக்கவும் இந்த நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்க வேண்டும் என்று கூறி மீண்டும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment