கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு அரங்கத்திற்காக ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் சொத்துக்களை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோமென தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் வலியுறுத்தல்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்து அறநிலைய துறையின் உத்தரவின் பேரில் சில தனியார் நிறுவனங்களுக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் நிலத்தினை ஏலம் விடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக சென்று அமைச்சர் சேகர்பாபு அவர்களை சந்தித்து ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை சொத்துக்களை விதிமுறைகளுக்கு மாறாக ஒருபோதும் ஏலம் விடக்கூடாது என கேட்டுக்கொண்டதன் பேரில் அன்றைய நாளே ஒருசில மணித் துளிகளுக்குள் அந்த ஏலம் தடுத்து நிறுத்தப்பட்டது. இனி ஆளவந்தார் நாயகர் சொத்துக்களுக்கு ஆபத்தில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த சூழலில் தற்போது கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்காக ஆளவந்தார் நாயகர் சொத்துக்களை கையகப்படுத்தும் பணி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடந்து கொண்டிருப்பதாக அறிகின்ற செய்தி பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆளவந்தார் நாயகர் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு உலகம் முழுக்க வாழுகின்ற வன்னியர்களின் கடும் எதிர்ப்புக்கும் வெறுப்பிற்கும் ஆளாகாமல் இனி எப்போதும் ஆளவந்தார் நாயகர் சொத்துக்களில் கை வைக்க மாட்டோமென அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
The Agnipuratchi WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின் பொழுது "ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்" என பெயரிட்டு ஆளவந்தார் நாயகர் சொத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஏக்கர்களை கையகப்படுத்தும் வேலைகள் நடந்த பொழுது ஆளவந்தார் நாயகர் அவர்களின் உறவினரும், முன்னாள் ஆளவந்தார் அறக்கட்டளை தலைவரும், அன்றைய அதிமுக கட்சியை சேர்ந்தவருமான திரு. "லயன்" வீராசாமி நாயகர் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்பல்கலைக் கழக முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு கலைஞர் கருணாநிதி அவர்களும் தனது ஆட்சி காலத்தில் சென்னை தலைமைச் செயலகத்தை ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் நிலத்தில் கட்டலாம் என முடிவெடுத்த நிலையில் ஐயா "மருத்துவர்" இராமதாசு அவர்கள் கடுமையாக எதிர்த்ததால் அதுவும் கைவிடப்பட்டதாக அதிகாரத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களே சொல்லக் கேட்டிருக்கிறேன். அதே நேரத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக செல்வி ஜெயலலிதா அவர்களின் காலத்திலும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி காலத்திலும் மூன்று கட்டங்களாக ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளுக்கு மேல் செலவிட்டு ஆளவந்தார் நாயகர் சொத்துக்களிலிருந்து 126 ஏக்கர்களை தன்வசப்படுத்தி நம் மக்களின் தாகம் தீர்க்கும் அத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
ஏறக்குறைய ஐம்பதனாயிரம் கோடிகளை தாண்டிய ஆளவந்தார் நாயகர் சொத்துக்களை அபகரிக்க இப்படி ஒவ்வொருவரின் ஆட்சிக் காலத்திலும் பற்பல சூழ்ச்சிகளும் இரட்டடிப்புகளும் நடந்து கொண்டேயிருந்திருக்கின்றன. இதன் பிறகும் அறம் மீறி இந்து அறநிலையத்துறையோ தமிழ்நாடு அரசோ ஆயிரம்காணி ஆளவந்தார் நாயகர் நிலத்தை எத்தகைய காரணம் கொண்டும் அபகரிக்க மாட்டோமென அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்த வேண்டும். தவிரவும் ஆளவந்தார் நாயகர் சொத்துக்கள் அனைத்தும் பரிபோகாமல் பாதுகாப்பதற்கான ஒரே வழி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஐயா ஜெயராமன் அவர்களின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய, தமிழ்நாடு அரசினால் உருவாக்கப்பட்ட "வன்னியர் குல சத்திரிய பொது சொத்து நலவாரியத்திடம்" உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் அந்நிலங்களில் ஆளவந்தார் நாயகர் பெயரில் மருத்துவ, பொறியியல் பல்கலைக்கழகங்கள் உருவாக வேண்டும். மருத்துவ மனைகள் உருவாக வேண்டும். வன்னியர் பிள்ளைகள் மட்டுமல்லாது இம்மண்ணில் பிறந்த அனைத்து பிள்ளைகளும் பயன் பெற்று மாபெரும் ஆளுமைகளாக உருவாக வேண்டும். மாறாக இனியும் அது அனாதை சொத்து என நினைத்து ஆளாளுக்கு "ஆட்டையை" போடும் நிலை தொடர்ந்தால் இதன் பிறகும் சாதாரணமாக வேடிக்கை பார்க்கும் சூழ்நிலை இருக்காது என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment