மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவும், பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான அருள்திரு. பங்காரு அடிகளார் அவர்கள் 19.10.2023vஇன்று மாலை மாரடைப்பால் முக்தி அடைந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்.
பங்காரு அடிகளார் அவர்கள் என் மீது தனிப்பாசம் கொண்டவர். எனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். கடந்த சில வாரங்களுக்கு முன் பங்காரு அடிகளார் அவர்களை எனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். என்னையும், குடும்பத்தினரையும் வாழ்த்தி அனுப்பிய அவர், இவ்வளவு விரைவாக நம்மை விட்டு பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை; அவரது மறைவு செய்தியை நம்ப முடியவில்லை. அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு ஆகும்.
பங்காரு அடிகளாருக்கு ஆயிரம் சிறப்புகள் உண்டு. அவற்றில் முதன்மையானதாக நான் கருதுவது அவர் மேற்கொண்ட ஆன்மிகப் புரட்சி தான். கருவறைக்குள் சாதாரணமானவர்கள் நுழையக்கூடாது; சில நாட்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையவே கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு இருந்த காலத்தில், 45 ஆண்டுகளுக்கு முன்பே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை நிறுவி, அதில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம்; அவர்கள் கருவறைக்கே சென்று வழிபாடு செய்யலாம் என்ற நடைமுறையை ஏற்படுத்தியவர். தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் ஆதிபராசக்தி மன்றங்களை நிறுவி, அவற்றின் தலைவர்களாக பெண்களை அமர்த்தி, அவர்களை தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வந்து அழகு பார்த்தவர் பங்காரு அடிகளார் அவர்கள்.
பங்காரு அடிகளார் அவர்களுக்கு உலகில் 25&க்கும் கூடுதலான நாடுகளில் பக்தர்கள் உள்ளனர். ஆன்மிகவாதி என்பதைக் கடந்து பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, கிராமப் புற மக்களுக்கும் கல்வி வழங்கியவர் அவர். ஏழைகளுக்கு உதவி, இயற்கைப் பாதுகாப்பு என பல்வேறு வழிகளில் சமுதாயத் தொண்டுகளையும் செய்து வந்தவர் பங்காரு அடிகளார் அவர்கள்.
பங்காரு என்றால் தங்கம் என்று பொருள். தமது பெயரின் பொருளுக்கு ஏற்ப தமது வாழ்நாளில் தங்கமான மனிதராகவே வாழ்ந்து மறைந்தவர் அவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தைச் சேர்ந்தவர்கள், அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள், உலகெங்கும் உள்ள பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment