சித்திரை முழுநிலவு விழா நடைபெரும் ராமதாஸ் நம்பிக்கை இதை பற்றி அவர் முகநூலில் சித்திரை முழுநிலவு நாள் நினைவுகள் என்று ஒரு பதிவை பதிவு செய்து உள்ளார் அதில் இன்று சித்திரை முழுநிலவு நாள்.
சித்திரை முழுநிலவு நாள் என்றாலே மாமல்லபுரத்து கடற்கரையும், அங்குள்ள மணல்களின் எண்ணிக்கையை விஞ்சும் அளவுக்கு கூடியிருக்கும் பாட்டாளி சொந்தங்களின் எண்ணிக்கையும் தான் எனக்கு நினைவுக்கு வரும்.
இன்று காலை எழுந்தது முதல் மனதெல்லாம் சித்திரை முழுநிலவு நாள் கொண்டாட்டங்கள் குறித்த மலரும் நினைவுகள் தான். அந்தக் கொண்டாட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாவீரன் குழு எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்வார்..எங்கெல்லாம் சுற்றித் திரிவார். ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் கூட்டத்தை அன்பும், கண்டிப்பும் கலந்த தனது பார்வையால் எப்படியெல்ல்லாம் கட்டுப்படுத்துவார் என்பது குறித்த நினைவுகள் தான் மனதிற்குள் வந்து வந்து செல்கின்றன. இடையிடையே மாவீரன் குருவின் இன்றைய நிலையும் நினைவுக்கு வருவதால் கண்கள் அடிக்கடி குளமாகின்றன.
இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணமும், கிறித்தவர்களுக்கு ஜெருசலேம் பயணமும், இறை நம்பிக்கைக் கொண்ட இந்துக்களுக்கு காசி யாத்திரையும் புனிதமானவை. பாட்டாளிகளைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருநாள் சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரம் கடற்கரை மணற்பரப்பில் கூடுவது தான் புனித யாத்திரை. இந்த ஒரு பயணம் கொடுக்கும் உற்சாகம் பாட்டாளிகளுக்கு அடுத்த ஓராண்டுக்கு சுறுசுறுப்பாக பணியாற்ற வகை செய்யும்.பிறந்த நாள்.
திருமண நாள்.வரிசையில் ஒவ்வொரு பாட்டாளியும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு நாள் சித்திரை முழுநிலவு நாள் தான்.
உள்ளூர் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து சித்திரை முழுநிலவு நாள் விழாவை வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் குரு ஒருங்கிணைக்கும் அழகே தனி. ‘‘அய்யா அழைக்கிறார். சொந்தங்களே வாரீர்’’ என்று ஒற்றை வார்த்தைக் கூறினாலே பாட்டாளி சொந்தங்கள் மாமல்லபுரத்தில் குவிந்து விடுவார்கள். ஆனால், மாவீரன் குரு அப்படி அழைப்பு விடுப்பதுடன் நின்று விட மாட்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் குறைந்தது இரு மாதங்கள் சுற்றுப்பயணம் செய்வார். அங்குள்ள சொந்தங்களை சந்தித்து பேசுவார். அனைவருக்கும் அன்பு அழைப்பு விடுப்பார். அதன் பயன் மாமல்லபுரம் கடற்கரையின் தொடக்கமும், முடிவும் தெரியாத அளவுக்கு கூட்டம் கூடியிருக்கும்.
சித்திரை முழுநிலவு நாளில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள் நமது சொந்தங்களை மகிழ வைக்கும்.அரசியல் எதிரிகளை பதற வைக்கும்.துரோகிகளை நடுங்க வைக்கும். அந்த அளவுக்கு வரலாறு, கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தம்பி குரு ஏற்பாடு செய்வார்.
தமிழகத்தின் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் கூட, பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து சித்திரை முழுநிலவு நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும். அப்படித் தான் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த ஜெயலலிதா 11.05.1998 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மாநாடு தான் மாவீரன் குரு முன்னின்று நடத்திய முதல் சித்திரை முழுநிலவு மாநாடு ஆகும். அதன்பின் தேர்தல் ஆண்டுகள் தவிர, 2013 ஆம் ஆண்டு வரை 10 சித்திரை முழுநிலவு விழாக்களை மாவீரன் குரு தான் நடத்தினார். 1988-ஆம் ஆண்டு முதல் 2013 வரை நடைபெற்ற 20 சித்திரை முழுநிலவு மாநாடுகளில் சரிபாதி மாநாடுகளை தலைமையேற்று நடத்திய பெருமை அவருக்கு உண்டு. 2013 சித்திரை முழுநிலவு நாள் விழாவை உத்தரப்பிரதேச முதலமைச்சரும், சமாஜ்வாதிக்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தான் தொடங்கி வைத்தார்.
ஆனால், 2013-ஆம் ஆண்டு சில சமூகவிரோதிகள் செய்த சதி காரணமாக பாட்டாளி சொந்தங்களுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறையும், கலவரமும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன. அந்த கலவரங்களில் செல்வராஜ், விவேக் ஆகிய இரு சொந்தங்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதன்பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக சித்திரை முழுநிலவு நாளைக் கொண்டாட முடியவில்லை.
சித்திரை முழுநிலவு நாளுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திய மாவீரன் குழு இப்போது உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை தான் நெஞ்சமெல்லாம் கவலையையும், வலியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், தலைசிறந்த மருத்துவர்களின் மருத்துவத்தாலும், சொந்தங்களாகிய உங்களின் சிறப்பு வழிபாடுகளாலும் மாவீரன் குரு உடல்நலம் பெற்று வருவார். இதுவரை நடத்தப்பட்டவற்றை விட பிரம்மாண்டமான முறையில் சித்திரை முழுநிலவு நாள் விழாவை நடத்துவார் என்பது உறுதி.
அந்த நாளுக்காக உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்! இவ்வாறு அந்த பதிவில் உருக்கமான வரிகள் இடம் பிடித்து உள்ளது .
No comments:
Post a Comment