இனியாவது திருந்துங்கள் பினாமி அரசு மீது மருத்துவர் ராமதாஸ் காட்டம் - Agnipuratchi

இனியாவது திருந்துங்கள் பினாமி அரசு மீது மருத்துவர் ராமதாஸ் காட்டம்

Share This

இனியாவது திருந்துங்கள்... உச்சநீதிமன்ற
ஆணைப்படி லோக் அயுக்தா அமையுங்கள்!
                         ---அறிக்கை---
தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஜூலை 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பு அமைக்கப்படாதது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் லோக் அயுக்தா அமைக்காததற்காக தமிழக அரசு சார்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்றும், தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பு உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  கூறியுள்ளது. இதேகருத்தைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த இரு ஆண்டுகளாக கூறிவருகிறது.

இதே வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மே 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து  2 வாரங்களுக்குள் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் விளக்கமளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதுதொடர்பாக பா.ம.க. வெளியிட்ட அறிக்கையில்,‘‘தமிழ்நாட்டில் லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதற்காக மறைந்த ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிச்சாமி வரை அனைவரும் கூறும் காரணம் என்னவென்றால் லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை செய்யவுள்ளது; திருத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது தான். இது ஏற்றுக் கொள்ள முடியாத மிகவும் அபத்தமான வாதம்.

லோக்பால் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்கள் என்னென்ன? என்பதை மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது. அவை தொழில்நுட்பம் சார்ந்தவையே தவிர, லோக்பால் சட்டத்தின் அடிப்படையை மாற்றும் தன்மை கொண்டவை அல்ல. நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாத நிலையில்,  லோக்பால் தேர்வுக்குழுவின் உறுப்பினராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு பதிலாக மக்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பெரியக் கட்சியின் தலைவர் என்று மாற்றுவதற்காக   லோக்பால் சட்டத்தின் 4(1)(சி) பிரிவிலும், அரசு ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிப்பதற்காக 44-ஆவது பிரிவிலும்  மட்டுமே திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.  மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அதைக் காரணம் காட்டி தாமதப்படுத்துவதை ஏற்கமுடியாது’’ என்று கூறப்பட்டிருந்தது. இப்போது உச்சநீதிமன்றமும் இதே கருத்தைக்  கூறி, தமிழகத்தில் விரைவாக லோக் அயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியாவது திருந்த வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து, உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages