கொங்கு மண்டலமும் திமுக மோசடி அரசியலும் பாமக துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் வெளியிடும் விளக்கம் - Agnipuratchi

கொங்கு மண்டலமும் திமுக மோசடி அரசியலும் பாமக துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் வெளியிடும் விளக்கம்

Share This

திமுக சாதியை ஒழிக்க,சமூக நீதியை நிலைநாட்ட உருவான கொள்கை சார்ந்த கட்சி என்று மக்களை  நம்ப வைத்து வந்த நிலையில் ஈரோட்டில் நடந்த கொங்கு மண்டல மாநாட்டில் அப்பட்டமாக சாதி சங்கங்களை விட இறங்கி கொங்கு வேளாளர்களை தன் பக்கம் இழுக்க சமுதாய தலைவர் அய்யா கோவை செழியன் பிறந்த மண் என்று பெருமை பொங்க தலைவர்கள் பேசினார்கள்.

கோவை செழியன் மீது திமுகவுக்கு திடீர் கரிசனம் ஏன்?
ஈரோட்டில்  கடந்த 24 .25  தேதிகளில்  நடைபெற்ற  திமுக கொங்கு மண்டல மாநாட்டில் கொங்கு நாட்டுத் தலைவர் கோவை செழியன் அவர்களின் படத்தை திறந்து வைத்து கோவை செழியன் பிறந்த மண் என்று திமுக கொண்டாடியதின் நோக்கம் என்ன? இதுவரை கோவை செழியனைப் பற்றிக் கவலையே படாத திமுகவுக்கு இப்போது அக்கறை வந்தது எப்படி?
பாமக நிறுவனர் எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் கோவை செழியனின் படத்தை திறந்து வைத்ததும் திமுகவுக்கும் அந்த கரிசனம் வந்துவிட்டதோ? என்னவோ? பாமக எதை செய்தாலும் அதை அப்படியே காப்பி அடிப்பதுடன் திமுகவின் அரசியல் என்பது தொடருகிறது.
பாமக நிறுவனர் சமூக நீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் 1996ல் உருவாக்கப்பட்ட திமுக - அதிமுக அல்லாத கட்சிகள் அடங்கிய ஊழல் ஒழிப்பு -சமூக நீதி கூட்டணியில் அங்கம் வகித்தவர் கோவை செழியன். கொங்கு சமுதாய மக்களின் நலனுக்காக கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையை உருவாக்கியவர் கோவை செழியன். கோவை செழியனுக்கு திமுக மரியாதை செலுத்துவது உண்மை எனில் சாதி அமைப்புகள் தேவை என்பதை
திமுக ஏற்றுக் கொள்வதாக அறிவிக்குமா?  அல்லது ஏற்றுக் கொண்டதாக எடுத்துக் கொள்ளலாமா? சாதி  ஒழிப்பே தங்களது கொள்கை என முழங்கிய திமுக சாதிகளிடையே சண்டைகளை உருவாக்கி குளிர் காய்ந்ததை மறந்து விட்டு கொங்கு சமுதாயத்தலைவர் கோவை செழியன் மீது ஈரோட்டில் வந்து அக்கறை காட்டுவது ஏன்? தேர்தல் அரசியலுக்காக கோவை செழியன் மீது பரிவு காட்டி கொங்கு சமுதாய மக்களை வளைத்துப் போடும் திட்டமா ?

தேர்தலுக்காக அல்லாமல்
சமூக நீதியை நிலை நாட்ட மருத்துவர் அய்யாவோடு கரம் கோர்த்துப் பணியாற்றியவரான கோவை செழியன் தமிழ் தேசியக் கட்சியை தொடங்கிய போது திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தேர்தலில் தொகுதி எதையும் ஒதுக்காமல் இதயத்தில் மட்டுமே இடம் கொடுத்து தொடர்ந்து அவமானப் படுத்தினார். பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது அவரையே அழைத்து  ''கொங்கு வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் ''என்ற கோரிக்கையோடு சாதியின் மாநாடாக இல்லாமல் உழவர் மாநாடு என்ற பெயரில் பல்லடத்தில் நடத்தி வலியுறுத்தியவர் கோவை செழியன்.
ஈரோடு மற்றும் மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ வான அய்யா மு.சின்னசாமி கவுண்டரும்,  ஒட்டன் சத்திரம் நாச்சிமுத்து கவுண்டர், கோவை செழியன் ஆகிய எம்.எல். ஏக்களும், திருச்செங்கோடு எம்.பி. டி.எம்.காளியண்ண கவுண்டர் போன்றவர்களும் நீண்ட காலமாககொங்கு சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தொடர்ந்து போராடியும் 
,கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளாத கருணாநிதிக்கு கொங்கு வேளாளர்களை மிகவும் அக்கறையோடு பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தாரா என்பதை இப்போதைய தலைமுறைக்கு தெரியாது.கொங்கு சமுதாயத்தின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் கோவை செழியன் பேசும்போதெல்லாம்  பெரிய சமுதாயங்களிடையே மோதலை உருவாக்கி பகைமையை வளர்த்தவர் கருணாநிதி.
கொங்கு சமுதாயத்தை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோவை செழியன் சட்டசபையில் பேசும் போதெல்லாம் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்களை அதற்க்கு எதிராகப் பேச வைத்து வன்னியர்-கொங்கு வேளாளர் சமூக வேற்றுமையை உருவாக்கியவர் கருணாநிதி.
ஆனால் நீண்டகாலத்துக்கு பிறகு கருணாநிதியின் நரி தந்திரத்தை 
உணர்ந்து கொண்ட கோவை செழியனும் -மருத்துவர் அய்யாவும் கரம் கோர்த்து நீண்ட அறிக்கையை தருமபுரி மாவட்டத்தில் இருந்து வெளியிட்டு வன்னியர்-கொங்கு வேளாளர் ஒற்றுமையை  உருவாக்கி ஒருதாய் மக்களாக இன்று வரை வாழ வழிவகுத்தார்கள் என்பது  வரலாறு.

1972ல் எம். ஜி. ஆர். அதிமுகவை தொடங்கிய போது காங்கயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வாக இருந்த கோவை செழியன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில்
சேர்ந்தார். அதோடு எம்.ஜி.ஆரை அழைத்து வந்து தாராபுரத்தில் மாநாடு நடத்தி கொங்கு சமுதாயத்திற்கு கருணாநிதி செய்த துரோகங்களை பட்டியலிட்டார். அந்த மாநாட்டில் பேசிய எம்.ஜி. ஆர். அதிமுக ஆட்சிக்கு வந்தால் கொங்கு சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பேன் என்று அறிவித்தார்.
திமுகவில் உள்ள பெரும்பாலான  கொங்கு சமுதாய எம்.எல்.ஏக்கள் அதிமுகவின் பக்கம் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் உறைந்து போன கருணாநிதி கோவை செழியனின் வல்லமையை நன்றாக உணர்ந்தே இருந்ததால் அரசியல் நெருக்கடி ஏற்படுவதை தடுக்க திட்டமிட்டார்.
மேலும் எம்.ஜி.ஆரை மலையாளி,கோமாளி என்று விமர்சனம் செய்து  வந்த திமுகவினரை   குலை நடுங்க செய்யும் வகையில் எம்.ஜி.ஆர் மலையாளி அல்ல தமிழரே.அதுவும் பொள்ளாச்சி கேரளா எல்லையை பூர்வீகமாக கொண்ட மன்னாடியார் என்ற கொங்கு வேளாளர் பிரிவை சேர்ந்தவர் என்று அண்ணா நாளிதழில் கட்டுரையும் எழுதி கோவை செழியன் பரபரப்பை ஏற்படுத்தினார்.அந்த நேரத்தில் விவசாயிகள்  போராட்டம் வலுவடைந்து 1970 ஜூன் 19  இல் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் ஆயிக்கவுண்டர்,மாரப்ப கவுண்டர்,ராமசாமி கவுண்டர்
ஆகிய மூன்று விவசாயிகளை சுட்டுக் கொன்று கொங்கு  மண்டலமே கொதித்துப் போயிருந்த நேரம்.
பின்னர் 1972 ஜூலை  5  ஆம் நாள் 15  க்கும் மேற்பட்ட விவசாயிகளை கருணாநிதி அரசு சுட்டுக் கொன்றும்,எம்.ஜி.ஆர் அதிருப்தியில் இருந்த நேரமும்  கூட.மொத்தத்தில் கொங்கு மண்டலத்தில் திமுக பெரும் பின்னடைவில் இருந்த நேரம்.
இதனால் அச்சமடைந்த
முதல்வராக இருந்த கருணாநிதி தனக்கே உரிய ராஜதந்திரத்தை கையாள 1974 ல் அப்போதைய ஈரோடு தொகுதி திமுக எம்.எல்.ஏ மு.சி.(எ) மு.சின்னசாமி கவுண்டரை அழைத்து அப்போது இருந்த கொங்கு வேளாளர் சமுதாய எம்.எல். ஏ க்ககள் அனைவரையும் ஒருங்கிணைத்து அனைவரிடமும் கையெழுத்துப் பெற்று கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மனு கொடுக்க உத்தரவிட்டார். அதோடு அதிமுகவை சேர்ந்தவரான காங்கயம் எம்.எல்.ஏ கோவை செழியனை மட்டும் புறக்கணித்து விட்டு மற்ற கொங்கு எம்.எல். ஏக்களை வைத்து  கொங்கு வேளாளர் சமுதாயத்தில் பிளவை உருவாக்கி அரசியல் செய்து  அதன் மூலம் குளிர் காய நினைந்தார்.திட்டமிட்டு கோவை செழியனுக்கு எதிராக கொங்கு மக்களை திசை திருப்ப 
நாடகமாட முனைந்தார் கருணாநிதி. ஆனால் திமுக எம்.எல். ஏ க்களான நேர்மையாளர்களான மு.சின்னசாமி கவுண்டரும், ஒட்டன் சத்திரம் நாச்சிமுத்து கவுண்டரும் கோவை செழியனை சந்தித்து கருணாநிதியின் திட்டத்தை விளக்கி  உண்மையை சொல்லி விட ''அரசியல் ரீதியாக தனக்கும் கருணாநிதிக்கும் போட்டி இருப்பினும் கொங்கு சமுதாயத்துக்கு நம்மை கிடைப்பதை  அரசியலாக்க விரும்பவில்லை எனக் கூறி முதல்வருக்கு சரியான விவரங்களுடன் மனுவை கோவை செழியனே தயாரித்துக் கொடுத்து விட்டு இதை கருணாநிதியிடம் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறி விட்டார்.கோவை செழியன் சில புள்ளி விவரங்களுடன் மனுவை தயாரித்துக் கொடுத்ததும் கொங்கு சமுதாயத்தை சேர்ந்த அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் மேலவை உறுப்பினர்களிடமும் கையெழுத்துப் பெறப்பட்டது.கொங்கு சமுதாயத்தை சேர்ந்த  பொதுவுடமைக் கட்சியினர்  மட்டும் கையெழுத்து போட மறுத்து விட்டார்கள்.
மு.சின்னசாமி,கோவை செழியன், அமைச்சர் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்ட 23  பேர் 
கையெழுத்திட்டு அந்த மனு முதல்வர் கருணாநிதியிடம் நேரடியாக அளிக்கப்பட்டது.அரசியல் நெருக்கடிக்குப் பயந்தும்,கோவை செழியனுக்கு எதிராக அதிமுகவை வீழ்த்தவும் கொங்கு வேளாளர்களை
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதி அறிவிக்க கோவை செழியனே முதல் ஆளாக வரவேற்றார்.
அதன் பிறகு திமுக ஆட்சியை இழந்து எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்த பிறகு கோவை செழியன் அதிமுகவில் இருந்து வெளியேறினார்.
வரலாறு இவ்வாறு இருக்க கொங்கு வேளாளர்களை 
பிற்படுத்தப் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதி என்றும் கொங்கு வேளாளர்கள் அனைவரும் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றும் மாநாட்டில் பேசி
மோசடி அரசியலை செய்துள்ளார்கள்.
கொங்கு நாட்டின் மன்னன் என்று ஸ்டாலினை அழைத்தும் கொங்கு சீமை,கொங்கு மண்,கொங்கு மண்டலம் என்று  விழித்தும் கொங்கு வேளாளர்கள் மனது வைத்தால் திமுக ஆட்சி அமையும் என்று ஜாதியை பகிரங்கமாக வெளிப்படுத்திய திமுக சாதிய சந்தர்ப்பவாதக் கட்சி என்று எந்த ஊடகங்களும் அழைக்கவில்லையே ஏன்?
சாதியை ஒழித்து விட்டதாகவும்,சமூக நீதியை நிலை நாட்டி விட்டதாகவும் கூறிக் கொள்ளும் திமுக சாதியின் பெயரால் ஆதரவும் வாக்கும்  கேட்டது பச்சை அயோக்கியத்தனம். ஜாதியை ஒழித்து விட்டதாக கூறும் திமுக கொங்கு மண்டலத்தில் ஒரு மாவட்டத்தில் கூட தாழ்த்தப்பட்டவர்களை மாவட்ட செயலாளராக நியமிக்காதது  ஏன்?
பாமக கொங்கு மண்டலத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த வி.கே.பிரதீப் குமாரை அமர்த்தியுள்ளோம்.
திமுகவும் அருந்ததியரை மாவட்ட செயலாளராக்காதது ஏன்? அருந்ததியரின் வாக்குகளை பெற நினைக்கும் திமுக அதிகாரத்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணிலாவது அளிக்கலாமே? மேடையில் அருந்ததியரைப்  பற்றி பேசிவிட்டு அதிகாரம் அளிப்பது
என்றால் அச்சப்படும் திமுக சமூக நீதிக் கட்சியா?

கொங்கு நாட்டு தலைவர்
கோவைச்செழியனின் நெருங்கிய நண்பரான பாமக நிறுவனர் சமூக நீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 11  ஆம் தேதி கோவை  மாவட்டம் சூலூரில் நடைபெற்ற ஐம்பெரும் விழா மாநாட்டில் கோவை செழியனின் உருவப்படத்தை திறந்து வைத்தும்,உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி  நாயுடு அய்யாவின் 93  ஆவது பிறந்த நாளை தொடங்கி வைத்துப் பெருமை சேர்த்தார்கள்.கொங்கு சீமையில் உள்ள இளைஞர்கள் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வராக்க வேண்டும் என்று எழுச்சியோடு கூறி வருவதை தடுக்கும் திமுகவின் முயற்சி நிறைவேறாது.
மருத்துவர் அய்யா அவர்கள் கொங்கு நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரன் தீரன் சின்னமலைக்கு பெருமை சேர்க்க ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் மணி மண்டபம் அமைய காரணமாக இருந்தவர்.கொங்கு சீமையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
தமிழ்நாட்டின் பிரதான சமுதாயங்களான வன்னியர் கொங்கு வேளாளர்-தாழ்த்தப் பட்டோர் உள்ளிட்ட சமூகங்கள் 
சமூக நீதியை அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப  இணைந்து பெற்றிட
இந்த நாட்டை ஆள வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருபவர்.
மாறாக 0 .1  சதம் கூட இல்லாத கருணாநிதியும்,ஜெயலலிதாவும் நம்மை ஆட்சி செய்ததன் பயனை கடந்த 50   ஆண்டுகளில் அனுபவித்து விட்டோம்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.கிராமங்களின் பொருளாதாரம்,தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு,நீராதாரம்,விவசாயம்,கல்வி,மருத்துவம் என அனைத்து துறைகளை பற்றிய முழு அனுபவத்தையும் உள்வாங்கி கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று துடிப்பவர்.
ஆனால் தேர்தல் நேரத்தில் பாமகவை வன்னியர் கட்சி என்ற முத்திரையுடன் பிரித்தாளும் சூழ்ச்சியை திட்டமிட்டு மேற்கொண்ட திமுகவே இப்போது கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர்களுக்கான கட்சி திமுக தான் என்று சாதியை முன்னிறுத்துகிறது.
ஆனால் அதை தட்டிக் கேட்க  ஊடகங்கள் தயாரில்லை என்பது தான் வேதனை.
மிகவும் சிறுபான்மை சமூகமான ஸ்டாலின் தலைமையில் இப்போது உள்ள திமுக
தமிழகத்தை ஆண்டதின் விளைவு அனைத்து சமூக மக்களையும் பிளவு படுத்தியதும்,மோத வைத்ததும் தான்.
எனவே இனியும் நம் ஏமாறக் கூடாது.கொங்கு மண்டலத்தில் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்று ஈவு இரக்கமே இல்லாத கருணாநிதி ''இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்''என்று கொக்கரித்தாரே? 18  விவசாயிகளை  சுட்டுக் கொன்று விவசாயிகளை பழிவாங்கினரே கருணாநிதி.
கொங்கு மண்டல மக்கள் கருணாநிதியையும்,திமுகவையும் இன்றுவரை வெறுக்க இதுவே தானே காரணம்.திமுகவுக்கு தைரியம் இருந்தால் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மாநாடு நடத்தட்டும்.
பெருமாநல்லூரில் மாநாடு நடத்திய கொங்கு கட்சி ஒன்று திமுகவை ஆதரித்து ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்கிறது.
அதே பெருமாநல்லூரில் தான் 3  கொங்கு வேளாள இளைஞர்களை ஒரு பைசா மின்கட்டணம் குறைப்புக்கு போராடிய போது சுட்டுக் கொன்றது திமுக.
பச்சைத்துண்டை அணிகிற எந்த ஒரு விவசாயியும்,விவசாயக் குடும்பத்தில் பிறந்தவனும் திமுக-அதிமுகவுக்கு ஓட்டுப் போட  மாட்டான்.இந்த
வரலாற்றை திரித்தும்,மறைத்தும் சாதியை சொல்லி மாநாட்டில் ஆதரவு கேட்கும் திமுகவுக்கு வெட்கமாக இல்லையா?
சுயமரியாதை,தன்மானம்  என்று கொள்கை பேசிய திமுகவுக்கு அடிப்படையில் அவை இருப்பதாக மக்கள் இனியும் நம்புவார்களா?
ஈரோடு திமுக மாநாட்டுக்கு மிரட்டி 15  கோடி வசூலித்து அதில் 
ரூபாய் 200  500  ம் கொடுத்து சாராயத்தை வாங்கி கொடுத்து கூட்டம் சேர்த்து அந்தக் கூட்டத்தில் ஜாதியைப்பேசி,வார்த்தை ஜாலங்களை மட்டுமே கைகளை உயர்த்தியும் ஆட்டியும் பேசி கொங்கு மண்டல மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுகவின் உண்மை சுயரூபத்தை உலகறிய செய்வோம்.ஊடகங்கள் அதை இருட்டடிப்பு செய்வதும் வேதனையளிக்கிறது.
பாமக மாநாட்டில் ஒரு முறை தப்பி தவறி வன்னியர் என்று யாராவது பேசிவிட்டால்போதும் கட்டம் கட்டி வன்னியர் அரசியல் எழுதுவார்கள்.
ஆனால் அப்பட்டமாக கொங்கு சீமையில் திமுகவுக்கு கொங்கு வேளாளர்களையும்,அருந்ததியர் மக்களையும் வாக்களிக்க சொல்லி திமுக தலைவர்கள் பேசிய போதும் பத்திரிக்கைகளும்,ஊடகங்களும்
வாய்மூடி மவுனிப்பது ஏன் என்பது புரியவில்லை?
இனியும் கொங்கு மண்டலம் ஏமாறாது சமூக நீதியை முன்வைத்து தமிழக மக்களுக்காவே வாழ்ந்து தன்னை மெழுகுவர்த்தியாக உருக்கிக் கொண்ட சமூக ஒற்றுமைப் போராளி மருத்துவர் அய்யா அவர்கள் தான்  சார்ந்த சமுகத்தை விட தாழ்த்தப்பட்டவர்களையும்
கொங்கு வேளாளர்களையும் சட்டமன்றத்துக்கு அனுப்பி பெருமை படுத்தியவர்.
கொங்கு மண்டலத்தின் நீராதார பிரச்சனைகள்,விவசாய பிரச்சனைகள்,தொழில் துறையினரின் பிரச்சனைகள்,உட்கட்டமைப்பு வசதிகள் என்று தொடர்ந்து பாமக குரல் கொடுத்து போராடி வருகிறது.
ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது  திமுக கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர்களின் அசுர வளர்ச்சியை தடுக்க அனைத்து வகையிலும் திட்டமிட்டது.மருத்துவர்  அன்புமணி முதல்வரானால்
கொங்கு மண்டல  மக்களே முதல்வராவது  போன்றதே என்பதை நிரூபிக்கும் வகையில் கொங்கு மண்டலத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து காட்டுவோம்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொங்கு மண்டலத்தில் இருந்து கொங்கு வேளாளர்களும்,அருந்ததியரும் அதிக அளவில் சட்டமன்றத்தில் இடம் பெரும் காலம் நெருங்கி விட்டது.
எனவே திமுக ஒருபோதும் கொங்கு மண்டலத்தில் மக்களை ஏமாற்றி விட முடியாது என்பதை நிருபிக்கும் வகையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை கொங்கு நாட்டு மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
பொங்கலூர் இரா.மணிகண்டன்
துணைத்தலைவர் -பாமக

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages