கேட்டது நீதி... கிடைத்தது சிறை: கந்தக பூமியில் வெந்து மீண்ட நாட்கள்!!!- மருத்துவர் இராமதாசு - Agnipuratchi

கேட்டது நீதி... கிடைத்தது சிறை: கந்தக பூமியில் வெந்து மீண்ட நாட்கள்!!!- மருத்துவர் இராமதாசு

Share This
ஏப்ரல் முதல் நாள் முட்டாள்களின் நாள் என்றால், ஏப்ரல் கடைசி நாள் மனிதத்தன்மையற்ற பிசாசுகளின்  நாள் ஆகும். அந்த நாளில் தான் அவர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பழிதீர்த்துக் கொள்வார்கள்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன் (25.04.2013)இத்தகையதொரு நாளில் தான், பாட்டாளி சொந்தங்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட மரக்காணம் வன்முறைகளுக்கு நீதி கேட்டு விழுப்புரத்தில் போராட்டம் நடத்தியதற்காக ஜெயலலிதா அரசால் நான் கைது செய்யப்பட்டேன்.  பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட  பலர் என்னுடன் கைதானார்கள். அதன்பின் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து  அறவழியில் போராடிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட  12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொந்தங்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். 134 பேர் குண்டர் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக மாவீரன் ஜெ. குரு 5 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அநீதிக்கு எதிராக போராடியதற்காக நாம் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. அவற்றை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
சித்திரை முழுநிலவு நாள் நினைவுகள்
சித்திரை முழுநிலவு நாள் என்றாலே மாமல்லபுரத்து கடற்கரையும், அங்குள்ள மணல்களின் எண்ணிக்கையை விஞ்சும் அளவுக்கு கூடியிருக்கும் பாட்டாளி சொந்தங்களின் எண்ணிக்கையும் தான் எனக்கு நினைவுக்கு வரும்.
இன்று காலை எழுந்தது முதல் மனதெல்லாம் சித்திரை முழுநிலவு நாள் கொண்டாட்டங்கள் குறித்த மலரும் நினைவுகள் தான். அந்தக் கொண்டாட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாவீரன் குரு எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்வார்... எங்கெல்லாம் சுற்றித் திரிவார்... ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் கூட்டத்தை  அன்பும், கண்டிப்பும் கலந்த தனது பார்வையால் எப்படியெல்ல்லாம் கட்டுப்படுத்துவார் என்பது குறித்த நினைவுகள் தான் மனதிற்குள் வந்து வந்து செல்கின்றன. இடையிடையே மாவீரன் குருவின் இன்றைய நிலையும் நினைவுக்கு வருவதால் கண்கள் அடிக்கடி குளமாகின்றன.
இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணமும், கிறித்தவர்களுக்கு ஜெருசலேம் பயணமும், இறை நம்பிக்கைக் கொண்ட இந்துக்களுக்கு காசி யாத்திரையும் புனிதமானவை. பாட்டாளிகளைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருநாள் சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரம் கடற்கரை மணற்பரப்பில் கூடுவது தான் புனித யாத்திரை. இந்த ஒரு பயணம் கொடுக்கும் உற்சாகம் பாட்டாளிகளுக்கு அடுத்த ஓராண்டுக்கு சுறுசுறுப்பாக பணியாற்ற வகை செய்யும்.
பிறந்த நாள்....திருமண நாள்....
வரிசையில் ஒவ்வொரு பாட்டாளியும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு நாள் சித்திரை முழுநிலவு நாள் தான்.
உள்ளூர் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து சித்திரை முழுநிலவு நாள் விழாவை வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் குரு ஒருங்கிணைக்கும் அழகே தனி. ‘‘அய்யா அழைக்கிறார்... சொந்தங்களே வாரீர்’’ என்று ஒற்றை வார்த்தைக் கூறினாலே பாட்டாளி சொந்தங்கள் மாமல்லபுரத்தில் குவிந்து விடுவார்கள். ஆனால், மாவீரன் குரு அப்படி அழைப்பு விடுப்பதுடன் நின்று விட மாட்டார்.  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் குறைந்தது இரு மாதங்கள் சுற்றுப்பயணம் செய்வார். அங்குள்ள சொந்தங்களை சந்தித்து பேசுவார்.  அனைவருக்கும் அன்பு அழைப்பு விடுப்பார். அதன் பயன்.... மாமல்லபுரம் கடற்கரையின் தொடக்கமும், முடிவும் தெரியாத அளவுக்கு கூட்டம் கூடியிருக்கும்.

சித்திரை முழுநிலவு நாளில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள் நமது சொந்தங்களை மகிழ வைக்கும்... அரசியல் எதிரிகளை பதற வைக்கும்.... துரோகிகளை நடுங்க வைக்கும். அந்த அளவுக்கு வரலாறு, கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தம்பி குரு ஏற்பாடு செய்வார்.
தமிழகத்தின் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் கூட, பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து சித்திரை முழுநிலவு நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும். அப்படித் தான் பாட்டாளி மக்கள் கட்சியுடன்  கூட்டணி அமைத்திருந்த ஜெயலலிதா 11.05.1998 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மாநாடு தான் மாவீரன் குரு முன்னின்று நடத்திய முதல் சித்திரை முழுநிலவு மாநாடு ஆகும். அதன்பின் தேர்தல் ஆண்டுகள் தவிர, 2013 ஆம் ஆண்டு வரை 10 சித்திரை முழுநிலவு விழாக்களை மாவீரன் குரு தான் நடத்தினார். 1988-ஆம் ஆண்டு முதல் 2013 வரை நடைபெற்ற 20 சித்திரை முழுநிலவு மாநாடுகளில் சரிபாதி மாநாடுகளை  தலைமையேற்று நடத்திய பெருமை அவருக்கு உண்டு. 2013 சித்திரை முழுநிலவு நாள் விழாவை உத்தரப்பிரதேச முதலமைச்சரும்,   சமாஜ்வாதிக்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தான் தொடங்கி வைத்தார்.
ஆனால், 2013-ஆம் ஆண்டு சில சமூகவிரோதிகள் செய்த சதி காரணமாக பாட்டாளி சொந்தங்களுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறையும், கலவரமும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன. அந்த கலவரங்களில் செல்வராஜ், விவேக் ஆகிய இரு சொந்தங்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதன்பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக சித்திரை முழுநிலவு நாளைக் கொண்டாட முடியவில்லை.
சித்திரை முழுநிலவு நாளுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திய மாவீரன் ஜெ. குரு இப்போது உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை தான் நெஞ்சமெல்லாம் கவலையையும், வலியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், தலைசிறந்த மருத்துவர்களின் மருத்துவத்தாலும், சொந்தங்களாகிய  உங்களின் சிறப்பு வழிபாடுகளாலும் மாவீரன் குரு உடல்நலம் பெற்று வருவார். இதுவரை நடத்தப்பட்டவற்றை விட பிரம்மாண்டமான முறையில் சித்திரை முழுநிலவு நாள் விழாவை நடத்துவார் என்பது உறுதி.
அந்த நாளுக்காக உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்!
                
1. நீதிக்கு கிடைத்த அநீதி
ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் அவரது தொண்டர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்பவராக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தக் கட்சி கட்டுக்கோப்பாக, எதிரிகளால் வீழ்த்த முடியாததாக  விளங்கும். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை நிறுவனர், தலைவர், பொதுச் செயலாளர் என நிர்வாக வசதிக்காக பல்வேறு பதவிகள் இருந்தாலும் கூட நடைமுறையில் பாட்டாளிகள் அனைவரும் சொந்தங்கள் தான். எனக்கு ஏதேனும் ஒன்றென்றால் பாட்டாளிகள் துடித்துப்போய் விடுவார்கள். நானும் அப்படித் தான் பாட்டாளிகளுக்கு எந்த பாதிப்பு என்றாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது

.
மரக்காணம் கலவரத்தில் விவேக், செல்வராஜ் ஆகிய இரு சொந்தங்கள் சமூக விரோதிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது என்னை மிகவும் காயப்படுத்தியது. அதிலும் இறந்த இருவரும் அவர்களின் குடும்பங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தேவனாஞ்சேரியை சேர்ந்த விவேக் அப்போது தான் இளமைப்பருவத்தில் அடி எடுத்து வைத்திருந்தான். அவனுக்கு எதிர்காலம் குறித்த ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும். அதேபோல் தான் அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த செல்வராஜும் அவரது குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானவர் ஆவார். அவர் தான் அவரது குடும்பத்திற்கு வாழ்வாதாரம் ஈட்டித்  தருபவராக இருந்தார்.
25.04.2013 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு நாளில் பங்கேற்பதற்காக மற்ற சொந்தங்களுடன் வந்த அவர்கள் இருவரையும் மரக்காணம் என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறித்து தகராறு செய்ததுடன் அவர்களை விரட்டிச் சென்று  கொடூரமாக கொலை செய்தனர்.  சொந்தங்களைக் காண வந்த இரு சொந்தங்கள் உயிரற்ற உடலாக எடுத்துச் செல்லப்படும் கொடுமையின் வலி அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். அந்த வலி எனக்கும் ஏற்பட்டது.
அதைவிட பெரிய வலி என்னவென்றால், மரக்காணத்தில் நடந்த வன்முறைகளை தடுக்கத் தவறிய  காவல்துறை, அந்தக் கலவரத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் காரணம் என்று பொய் வழக்குப் பதிவு செய்தது.  இந்த அநீதிகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் மரக்காணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த விவேக், செல்வராஜ் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்,
பாட்டாளி மக்கள் கட்சியினர்  மீதான பொய்வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று  ஏப்ரல் 28-ஆம் தேதியே நான் அறிவித்திருந்தேன்.
தடையை மீறிப் போராட்டம்!
இந்தப் போராட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அனுமதி அளித்திருந்தார். பின்னர், இப்போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து, தொடர்வண்டி நிலையம் அருகில் மாற்றிக் கொள்ளும்படி பா.ம.க. நிர்வாகிகளிடம் காவல்துறையினர்  கேட்டுக் கொண்டனர். அதன்படி போராட்டமும் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் மாற்றப்பட்டது. போராட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், எங்களின் போராட்டத்திற்கு ஒரு நாள் முன்பாக சட்டப்பேரவையில் மரக்காணம் வன்முறை தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான  விவாதத்திற்குப் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சி மீதும், என் மீதும் ஆத்திரத்தை உமிழ்ந்தார்; அடிப்படை ஆதாரம் இல்லாத அவதூறு குற்றச்சாற்றுகளைக் கூறினார். இதன்மூலம் ஜெயலலிதாவின் மனநிலையைப் புரிந்து கொண்ட விழுப்புரம் மாவட்டக் காவல்துறையினர், அதற்கு அடுத்த நாள் நடைபெறவிருந்த போராட்டத்திற்கான அனுமதியை முந்தைய நாள் நள்ளிரவில் எந்தக் காரணமும் கூறாமல் இரத்து செய்தனர். போராட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், சரியான காரணம் இல்லாமல் அனுமதியை காவல்துறையினர் ரத்து செய்தது உள்நோக்கம் கொண்டதாகும். அதனால் தடையை மீறி 30-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தேன்.


எச்சரிக்கையையும் மீறி...
போராட்டம் நடைபெறவிருந்த 30-ஆம் தேதி அதிகாலையிலிருந்தே எனக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தொலைபேசி அழைப்புகள். அனைவரும் கூறியது ஒரே விஷயம் தான். ‘‘மாமல்லபுரம் மாநாட்டில் அதிமுகவையும், ஜெயலலிதாவையும் மிகக் கடுமையாக விமர்சித்ததால் மேலிடம் உங்கள் மீது கோபமாக இருக்கிறது. தடையை மீறி போராட்டம் நடத்தினால் உங்களை கைது செய்வார்கள். அதனால் இன்று போராட்டம் நடத்துவதை தவிர்த்து விடுங்கள்’’ என்பது தான் அவர்கள் கூறிய செய்தி ஆகும். இவ்வாறு என்னை எச்சரித்தவர்களில் பலர் காவல்துறை உயரதிகாரிகள் ஆவர்.
ஆனால், அதையெல்லாம்  பொருட்படுத்தாமல் தடையை மீறி போராட்டம் நடத்தினேன். உடனடியாக காவல்துறை அதிகாரிகள் என்னை கைது செய்தனர். போராட்டம் நடைபெறவிருந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கான  தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் அவர்களிடையே சில வார்த்தைகள் பேசுவதற்கு கூட காவல்துறை அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு காவல்துறையினர் மூர்க்கம் காட்டினர். அதுமட்டுமின்றி, என்னுடன் போராட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் காவல்துறை கைது செய்தது.
கைதான ஒரே குழு நாங்களே!
இங்கு ஒரு விஷயத்தை உங்களுக்கு கூறியாக வேண்டும். கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தடையை மீறி போராட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று தான். தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யும் காவல்துறையினர் அடுத்த சில மணி நேரங்களிலோ அல்லது அன்று மாலையிலோ விடுதலை செய்து விடுவது வழக்கம். ஆனால், பழிவாங்கும் நோக்கம் காரணமாக என்னையும், என்னுடன் கைது செய்யப்பட்டவர்களையும் சிறையில் அடைத்தது ஜெயலலிதா அரசு. 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று வரை தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உடனடியாக விடுதலை செய்யாமல் சிறையிலடைக்கப்பட்ட ஒரே குழுவினர் நானும், எனது தொண்டர்களும் தான்.
கைது செய்யப்பட்ட என்னையும், மற்றவர்களையும் காற்றோட்டம் இல்லாத திருமண அரங்கம் ஒன்றில் 12 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் அடைத்து வைத்திருந்தனர். பின்னர் நான் உட்பட கைதான அனைவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி ஆணையிட்ட போதும், அதை மதித்து உடனடியாக சிறைக்கு கொண்டு செல்லாமல், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருக்க வைத்தனர். நள்ளிரவு வரை நரக வேதனை தொடர்ந்தது.
ஆட்டுவித்தவர் அங்கே.... ஆடியவர்கள் இங்கே...
இதற்கெல்லாம் காரணம் விழுப்புரம் மாவட்டக் காவல்துறை என்று கூற மாட்டேன். அவர்கள் வெறும் அம்பு தான். அம்புகளை ஏவிய வேடன் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் கே.இராமானுஜம் என்பவர். அவரை இயக்கியவர் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. அதற்கும் காரணங்கள் இருந்தன.
2011 ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவை  பேரவையிலும், பேரவைக்கு வெளியிலும் எதிர்த்துக் கேள்வி கேட்க ஆளில்லை. தமிழகத்தின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக தேமுதிக இருந்தது. அக்கட்சியின் தலைவர்  விஜயகாந்த் பேரவைக்கு செல்வதே அரிதான நிகழ்வாகி விட்டது.
அதேபோல் திமுக தலைவர் கலைஞரும் தமக்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்று அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. ஆனாலும், ஜெயலலிதாவின்  ஊழல்களையும், மக்கள் விரோத செயல்பாடுகளையும் மிகக்கடுமையாக விமர்சித்து வந்த ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். இதனால் பா.ம.க. மீதும், என் மீதும் ஜெயலலிதாவுக்கு தாங்க முடியாத அளவுக்கு கோபம் இருந்தது. வாய்ப்பு கிடக்கும் போது பழிவாங்க காத்துக் கிடந்தார். அதற்காக இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக  என்னை கைது செய்தாலும் கூட மாலையில் விடுதலை செய்திருக்கலாம். சிறையில் அடைப்பது என்று தீர்மானித்திருந்தால் உடனடியாக நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறைக்கு கொண்டு சென்றிருக்கலாம். நேர்மையான அரசு இப்படித் தான்  செய்யும். ஆனால், ஜெயலலிதாவுக்கும், நேர்மைக்கும் தான் தொடர்பு இல்லையாயிற்றே. அதனால் தான் அவர் எனக்கு எதிராக பழிவாங்கல் படலங்களை நிறைவேற்றினார். அவருக்கு கருவியாக இருந்து பழிவாங்கலை செயல்படுத்தியவர் இராமானுஜம். அதற்காக இராமானுஜத்துக்கு கிடைத்த பணி நீட்டிப்புகள், பதவி உயர்வுகள், புதிய பதவிகள் ஏராளம்... ஏராளம்.
இராமானுஜம் கூறியவாறு காவல்துறை அதிகாரிகள் செயல்படவில்லை என்றால் அவர்களும் பழி வாங்கப்படுவார்கள். அதற்கு அஞ்சி தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள். எனினும்,  கொளுத்தும் வெயிலில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரங்கத்தில் பல மணி நேரம் அடைத்து வைத்ததும், சிறையில் அடைக்க நீதிபதி ஆணையிட்ட பிறகும் வாகனத்தில் பல மணி நேரம் காத்துக் கிடக்க வைத்திருந்ததும் மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல்கள் தான்.
ஆனால், இவையெல்லாம் ஒரு கொடுமையே இல்லை என்று கூறும் அளவுக்கு இவற்றை விட பல மடங்கு கொடுமைகள் திருச்சி சிறையில் அரங்கேற்றப்பட்டன.

நான் தவித்தேன்... துடித்தேன்.... சொந்தங்கள்....கதறினர்
விழுப்புரம் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்க ஆணையிடப்பட்ட பின்னரும்  திட்டமிட்டு என்னையும், என்னுடன் கைதான பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட சொந்தங்களையும் வேண்டுமென்றே காவல்துறை அலைக்கழித்தது.தொடர்ந்து பல்வேறு அலைக்கழிப்புக்குப் பிறகு மே 1-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு என்னை திருச்சி மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். நான் ஏற்கனவே முதுகுத் தண்டு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட 16 மணி நேரம் அழைக்கழிக்கப்பட்டதால் முதுகு வலி தாங்க முடியாமல் துடித்துப்போனேன்.
பாழடைந்த கட்டிடம்
தொடர்ந்து சிறை வளாகத்தில் சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டனர். சோதனை முடிந்து சிறைக்குள் சென்ற பின்னர் இன்னல்கள் அதிகரித்தன. சிறையில் பாழடைந்த, பயன்பாட்டில் இல்லாத , பாலைவனம் போன்று வெப்பம் தகிக்கக்கூடிய ஓர் கட்டிடத்திற்கு  என்னை அழைத்துச் சென்ற சிறைத் துறையினர், அங்குள்ள 23 செல்களில் ஒன்றில் அடைத்து சிறை வைத்தனர். அந்தக் கட்டிடம் இலங்கை அகதிகளை அடைத்து வைப்பதற்கான சிறப்பு முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இலங்கை அகதிகள் அடிக்கடி மரத்தில் ஏறி போராட்டம் நடத்துவது வழக்கம் என்பதால், அதைத் தடுப்பதற்காக அங்கிருந்த மரங்கள் அனைத்தையும் சிறைத்துறையினர் வெட்டி வீழ்த்தி விட்டனர். இதனால் அந்தப் பகுதி வெப்பம் நிறைந்து, காற்றோட்டம் இல்லாமல் இருந்தது.
தொண்டர்கள் கண்ணீர்
தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவாக திருச்சியில் தான் 105 டிகிரி வெப்பம் பதிவானது என்பதால், அதிகாலை வேளையிலும் கோடையின் வெப்பம் தகித்தது. தமிழகம் முழுவதையும் வாட்டி வதைக்கும் மின்வெட்டு திருச்சியையும் விட்டு வைக்க வில்லை. ஒரு மணி நேரத்திற்கு மின்சாரம் வந்தால் அடுத்த ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப் பட்டது. இதனால் நான் அடைக்கப்பட்டிருந்த அறை இருளில் மூழ்கி விடும். நான் அடைக்கப்பட்டிருந்த அறையில் மின் விசிறி இல்லாததால் வியர்வை மழைபோல் கொட்டத் தொடங்கி விடும். இதனால்,  சொல்ல முடியாத அவதிகளுக்கு உள்ளானேன். உறக்கமின்றி தவித்தேன். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தொண்டர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த போர்வைகளை மடித்து விசிறி  போல விசிறினர். ஆனாலும் வெப்பத்தின் கொடுமையை தாங்க முடியவில்லை. அதனால் மேலாடைகளை களைந்து விட்டு  தரையில் படுத்தேன்; அப்போதும் உறக்கம் வராமல் தவித்தேன்... துடித்தேன்.   என்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர்கள் அனைவரும் இந்தக் காட்சியை பார்த்து கண்ணீர் விட்டு கதறினர். என்னைப்  போலவே என்னுடன் சிறை சென்றவர்களும் சிறையில் அடைக்கப்பட்ட இரவுப் பொழுதில் உறங்கவில்லை.
தாயைக் காப்பது போன்று எனக் காத்த ஜி.கே.மணி
இந்த தருணத்தில் என்னுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜி.கே.மணி எனக்காக துடித்த துடிப்புகளையும், செய்த செயல்களையும் நினைவு கூறியாக வேண்டும்.  ஒரு தாய் வேதனையில் துடிக்கும் போது மகன் அல்லது மகள் எப்படி வேதனைப்படுவார்களோ அதேபோல் ஜி.கே. மணி துடித்துப் போனார். சிறை அதிகாரிகளுடன் சண்டையிட்டு எனக்கு குறைந்தபட்ச வசதிகளாவது செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார். சொந்தங்களுடன் சொந்தமாக இணைந்து  எனது அவதிகளைக் குறைப்பதற்கான செயல்களில் ஈடுபட்டார். அப்போது நடந்த நிகழ்வுகளையெல்லாம் இப்போது அசை போட்டு பார்க்கும் போது, ஆட்சியாளர்கள் இழைத்த கொடுமைகள் கோபத்தை ஏற்படுத்தினாலும் ஜி.கே.மணி மற்றும் அவரைப் போன்ற பாட்டாளிகளை சொந்தங்களாகப் பெற்றது  மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இவர்கள் தான் எனது பலம்.... எனது வரம்.
ஜி.கே. மணிக்கு அடுத்தபடியாக நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது எனது உதவியாளர் தண்டபாணியைப் பற்றித் தான். சிறையில் நான் பட்ட அவதிகளைக் குறைத்தவர் அவன் தான். சிறையில் எனது அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் அவன் தான் கவனித்துக் கொண்டான். அவனை எனது உதவியாளராக பெற்றதில் நான் எப்போதும் பெருமிதம் கொள்வேன்.
46 பேர் இடத்தில் 567 பேர் அடைப்பு
நான் அடைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் மொத்தம் 23 செல்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் இருவர் வீதம் மொத்தம் 46 பேரை மட்டுமே அங்கு அடைக்க முடியும். ஆனாலும், சிறைத்துறையினர் மேலிடத்து உத்தரவின்படி வேண்டுமென்றே ஒரு செல்லுக்கு 20 முதல் 25 பேர் வீதம் மொத்தம் 567 பேரை அடைத்து வைத்தனர். இதனால் நானும்,  பாட்டாளித் தொண்டர்களும்  அறைக்குள் உறங்கவோ அமரவோ முடியாமல் தவித்தனர். சிறையில் குடிக்கவோ, குளிக்கவோ போதிய தண்ணீர் இல்லாததால் எங்களின் அவதி அளவிட முடியாத அளவுக்கு அதிகரித்தது. சிறை அறையில் அனைவரும் குளிக்க முடியாது என்பதால் திறந்த வெளியில் தான் குளிக்க வேண்டியிருக்கிறது. மே-1 ஆம் தேதி காலையில் மற்ற சிறைவாசிகள் பயன்படுத்திய கழிப்பிடத்தையும், குளியலறையையுமே நானும் பயன்படுத்தினேன். இவையெல்லாம் உடல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தினாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு பாட்டாளித் தொண்டர்களுடன் ஒன்றாகக் கழித்தது மனதுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது.
16 மணி நேரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்டதாலும், சிறைக்கு வந்த பிறகும் உறங்க முடியாததாலும்  மே-1 ஆம் தேதி காலையில் எனது  முதுகுவலி  உச்சகட்டத்தை அடைந்தது. எனக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தாலும் புதன்கிழமை மதியம் வரை முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. முதுகுவலியால் நான் துடித்ததை தாங்கிக்கொள்ள முடியாத தொண்டர்கள் சிறை நிர்வாகத்தை வலியுறுத்தியதைத் தொடர்ந்து மே1 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு எனது அறையில் ஓர் இரும்பு கட்டில் போடப்பட்டது.
மூச்சுத் திணறல்
நான்  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் எனக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால், திருச்சி சிறை நிர்வாகமோ மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அதே உணவையே எனக்கும் வழங்கியது. நீரிழிவு நோய் காரணமாக அடிக்கடி பசி எடுக்கும்போதெல்லாம் கையுடன் எடுத்துச் சென்றிருந்த மாரி பிஸ்கட்டை சாப்பிட்டு சமாளித்துக் கொண்டேன். மதியத்திலும், இரவிலும் எனக்கும், மற்றவர்களுக்கும் பட்டை சோறு தான் வழங்கப்பட்டது. அதுவும்  போதிய அளவில் வழங்கப்படாததாலும், குடிப்பதற்கு தண்ணீர் கூட தரப்படாததாலும் என்னுடன் வந்தவர்கள் இன்னலுக்குள்ளானார்கள். நீரிழிவு நோய் காரணமாக அதிகாலையிலேயே பசி எடுக்கும் என்பதால் முதல் நாள் இரவு வழங்கப்பட்ட உணவில்  தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் காலையில் கஞ்சியாக கரைத்து குடித்து வந்தேன். ஆட்சியாளர்களின் ஆணைக்கிணங்க காவல்துறையினரும், சிறைத்துறையினரும் பலவகையான அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியதாலும், சிறைக்குள்  அனைத்து வகையான நெருக்கடிகளும்  தரப்பட்டதாலும்  உடல் அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், மனதளவில் தளர்வடையாமல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராட உறுதி ஏற்றேன்.
மறுபுறம் சிறைக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன.  சிறையில் கடுமையான வெயில் காரணமாக என்னால் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெரிதும் அவதிக்குள்ளானேன். ஒரு கட்டத்தில் எனக்குத் தனி செல் ஒதுக்கப்பட்டது. பகலில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் அறையின் தரையில், தண்ணீர் செல்லும் துளையை அடைத்து விட்டு 4 அங்குலம் அளவுக்கு தேங்கி நிற்கும் அளவுக்கு தண்ணீரை  ஊற்றி தேக்கி வைப்போம். அதன்மீது இரும்புக் கட்டிலைப் போட்டு அதன்மீது படுத்திருப்பேன். அப்போதும் வெயில் கொடுமையை தாங்க முடியாது. அதனால் மொத்தமான துண்டை தண்ணீரில் நனைத்து தலை மீது சுற்றிக் கொள்வேன். அந்த துண்டு காயக்காய தண்ணீரில் நனைத்துக் கட்டிக் கொள்வேன். அதேபோல் தரையில் தண்ணீரின் அளவு குறைந்தாலும் நிரப்பிக் கொள்வோம். அந்த அளவுக்கு வெயிலின் கொடுமையால் பாதிக்கப்பட்டேன்.
குடிநீருக்குத் தடை
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த எனக்கு அங்கு வழங்கப்பட்ட அசுத்தமான குடிநீர் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் வீட்டிலிருந்து குடிநீரைக் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்று  சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதை சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமின்றி, என்னை சந்திப்பதற்காக யாரெல்லாம் வருகிறார்கள் என்பதை கண்காணிப்பதற்காக எனது செல்லுக்கு வெளியில் உளவுத்துறை காவலர்கள் 3 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். இப்படியாக  கொடுமைகள் தொடர்ந்தன. மறுபுறம் அவற்றுக்கு எதிரான சட்டப் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன.
பிணை, கைது .... பிணை, கைது .... பிணை, கைது!
யானையும், பாம்பும் தான் பழிவாங்குவதற்கு பெயர் பெற்றவை என்று நூல்களில் படித்திருக்கிறேன். ஆனால், அவை இரண்டும் பழிவாங்குவதில் ஜெயலலிதாவிடம் பிச்சை எடுக்க வேண்டும். பாம்பும், யானையும் கூட அவற்றுக்கு தீமை செய்தவர்களை மட்டும் தான் பழிவாங்கும். ஆனால், ஜெயலலிதாவோ அவரது ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களைக் கூட பழிவாங்கத் துடிப்பார். எனது  விவகாரத்திலும் அது தான் நடந்தது.
மரக்காணம் கலவரத்தில் அப்பாவி சொந்தங்கள் இருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதற்கு  நீதி கேட்டு போராடியதற்காக என்னை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.  ஆனால்,  என்னை அவ்வளவு எளிதில் வெளியில் அனுப்பிவிடக் கூடாது என்பதில் ஜெயலலிதாவும், காவல்துறையும், உறுதியாக இருந்தனர். தடையை மீறிப் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட நானும், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் பா.ம.க. நிர்வாகிகளும் விழுப்புரம் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தோம்.
பிணை மனுக்களை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம்,  அனைவரையும் பிணையில் விடுதலை செய்து 03.05.2013 அன்று ஆணையிட்டது. விழுப்புரம் வழக்கு என்பது தடையை மீறி போராட்டம் நடத்திவிடக் கூடாது என்பதற்காக  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது தொடர்பானது ஆகும். கைது செய்யப்பட்ட எவரும், எந்த குற்றமும் செய்யாதவர்கள் ஆவர். இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு தான் அனைவருக்கும் பிணை வழங்கியுள்ளது.
நிரந்தரமாக சிறை வைக்க சதி
மிகமிகச் சாதாரணமான இந்த வழக்கில் கூட எனக்கு பிணை வழங்கப்பட்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அதற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பொதுவாக இதுபோன்ற அரசியல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவிப்பதற்கு முன்பாக அரசே விடுதலை செய்வது தான் வழக்கம் ஆகும். ஆனால், இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சி மீது ஆளுங்கட்சி எவ்வளவு காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, இந்த வழக்கில் எனக்கும், மற்றவர்களுக்கும் வழங்கப்பட்ட பிணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டதாக இந்த வழக்கை கையாளும் விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வாய்மொழியாக  தகவல் அளித்ததால் 300-க்கும் மேற்பட்டோர் பிணையில் விடுதலை ஆக முடியவில்லை. உண்மையில் அப்படி எந்த உத்தரவையும் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. பா.ம.க.வினர் விடுதலை ஆவதைத் தடுக்க காவல்துறை எத்தகைய மோசடிகளை கையாளுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
  அதுமட்டுமின்றி, நான் விடுதலையாவதை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்பதற்காக பழைய வழக்குகளை எல்லாம் தூசு தட்டி எடுத்தது அரசு. மாமல்லபுரம் மாநாடு தொடர்பான 2 வழக்குகள், மதுரை வழக்கு, கூடங்குளம் அணு உலையை எதிராக பேசிய வழக்கு என மேலும்  4 வழக்குகளில் என்னை கைது செய்தது.
மதுரை வழக்கும் அலைக்கழிப்பும்!
விழுப்புரம் வழக்கிலும், மாமல்லபுரம் வழக்குகளிலும்  எங்களுக்கு பிணை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மே 4&ஆம் தேதி நானும் மற்றவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால், என்னை விடுதலை செய்ய விரும்பாத காவல்துறையினர் என் மீது பல ஆண்டுகளுக்கு முன் மதுரையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை தூசு தட்டி எடுத்து அதில் சிறையில் அடைக்க முயன்றது. ஆனால், அவ்வழக்கில் மதுரை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் என்னை நேர்நிறுத்தியோ அல்லது  காணொலி கலந்தாய்வு மூலமோ நீதிமன்றக் காவலில் அடைக்க ஆணை பெற்றால் மட்டும் தான்  தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க முடியும்.
தொண்டர்கள் போராட்டம்!
எனவே, மே 4-ஆம் தேதி மாலை வாக்கில் என்னை மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர். முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டவாறு நான் கடுமையாக முதுகுவலியாலும், உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வந்தேன். அதைப்பொருட்படுத்தாமல் என்னை மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அலைக்கழிக்க ஏற்பாடு நடப்பதை அறிந்து பா.ம.க. தொண்டர்கள் கொந்தளித்தனர். அங்கிருந்த வேப்பமரம் ஒன்றில் ஏறிய அவர்கள் என்னை மதுரை நீதிமன்றத்திற்கு  அழைத்துச் செல்லக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். அவர்களில் ஒருவர் அவருக்கு வழங்கப்பட்டிருந்த போர்வையை கிழித்து கயிறாக திரித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை நாங்கள் சமாதானப்படுத்தி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினோம்.
இந்த போராட்டத்திற்கு பணிந்த அதிகாரிகள், என்னை மதுரைக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டனர். அதற்கு பதிலாக காணொலி கலந்தாய்வு முறையில் மதுரை நீதிபதி மூலம் என்னை நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கான ஆணை பெற காவல்துறையினர் முடிவு செய்தனர். அதற்காக என்னை நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து காணொலி கலந்தாய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 3 மணி நேரம் என்னை காக்க வைத்து கொடுமைப்படுத்தினர். ஆனால், காணொலி கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. ஒரு கட்டத்தில் மதுரை நீதிபதி நீதிமன்றக் காவலுக்கு ஆணையிட முடியாது என்று மறுத்து வெளியேறி விட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனால் எனது காவல் நீட்டிக்கப்படாத நிலையில் என்னை சட்டவிரோதக் காவலில் அடைத்தனர். அப்போது இரவு 11.00 மணி.
நள்ளிரவில் எழுப்பி விசாரணை
அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து சிறைக்காவலர்கள் வந்து என்னை எழுப்பினார்கள். அப்போது  நள்ளிரவு 12.00 மணியைத் தாண்டி விட்டது. எதற்காக எழுப்பினீர்கள்? என்று கேட்டபோது, மதுரை வழக்கில் என்னை நீதிமன்றக் காவலில் அடைக்க ஆணையிடுவதற்காக திருச்சி நீதிபதி வந்திருப்பதாகக் கூறினார்கள். பின்னர் நீதிபதி முன்னிலையில் நேர்நிறுத்தப்பட்டேன். அங்கு ஆஜரான மதுரை காவல்துறை அதிகாரி ஒருவர், மதுரை வழக்கில் நான் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதாகக் கூறி, என்னைக் காவலில் வைக்க ஆணையிடும்படி கோரினார்.
தலைகுனிந்த நீதிபதி
அதைக்கேட்ட நான், ‘‘கடந்த 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதாக காவல்துறை அதிகாரி  கூறுகிறார். கடந்த 9 மாதங்களில் பலமுறை நான் மதுரை சென்றுள்ளேன். அப்போதெல்லாம் காவல்துறை அதிகாரிகள் தான் எனக்கு பாதுகாப்பு அளித்தனர். அவ்வாறு இருக்கும்போது எப்படி நான் தலைமறைவாக இருக்க முடியும்’’ என்று நீதிபதியிடம் கேட்டேன். அதைக்கேட்ட நீதிபதி தலையை  குனிந்து கொண்டார். அவரிடமிருந்து பதில் வரவில்லை. அவரது தர்மசங்கடமான நிலையைப் பார்த்த நான்,‘‘ நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம்... உங்கள் கடமையை செய்யுங்கள்’’ என்று கூறினேன். அவரும் என்னை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க ஆணையிட்டுவிட்டு அங்கிருந்து சென்றார். தொடர்ந்து அந்த வழக்கில் நான் சிறையில் அடைக்கப்பட்டேன்.
திருக்கழுக்குன்றத்துக்கு!
இந்த நேரத்தில் இன்னொரு கொடுமையையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மே 3&ஆம் தேதி மாமல்லபுரம் மாநாட்டு வழக்கு தொடர்பாக திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் என்னை நேர்நிறுத்த சிறைத்துறை திட்டமிட்டிருந்தது.  ஆனால், நான் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தேன். என்னை அழைத்துச் செல்வதற்காக பழைய வேன் ஒன்று கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தது. அதில் 300 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்வது சாத்தியமற்ற ஒன்று. அதனால் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்திற்கு என்னால் நேரில் வர இயலாது என்று கூறினேன்.
ஆனால், நீதிமன்றத்திற்கு நான் வந்தாக வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். எனது உடல்நிலை குறித்து விளக்கிய நான்,‘‘ஏற்கனவே எனது உடல்நிலை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு மயக்கமாக உள்ளது. இந்த சூழலில் அவ்வளவு தூரம் என்னால் பயணம் செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு மருத்துவரை அழைத்து வாருங்கள். பயணம் செய்யும் அளவுக்கு  எனது உடல்நிலை வலிமையாக இருப்பதாக அவர் கூறினால் என்னை அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள்’’ என்று கூறினேன். அதன்படி எனது உடல்நிலையை ஆய்வு செய்த சிறை மருத்துவர் பயணம் செய்யும் அளவுக்கு எனது உடல்நிலை இல்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து திருக்கழுக்குன்றத்துக்கு என்னை அழைத்துச் செல்லும் திட்டத்தைக் கைவிட்ட சிறைத்துறையினர், அதற்கு பதிலாக உள்ளூர் நீதிபதி ஒருவரை அழைத்து வந்து காவல் ஆணையை பெற்றனர். இதைவிடக் கொடுமை கூடங்குளம் வழக்குகளில் காவல்துறை கடைபிடித்த முன்னுக்குப்பின் முரணான நிலைப்பாடு தான்.
அன்புமணி வரை  நீண்ட அதிகாரத் திமிர்!
நாளை எழுதுகிறேன்.
அன்புமணி வரை நீண்ட அதிகாரத் திமிர்!
சட்டப்படி செயல்படுபவர்களுக்கு மட்டும் தான் விதிகளும், தர்மங்களும். சட்டத்தின்படி செயல்படும்  காவலராக இருந்தால் அவர் யாரையும் தாக்கவோ, தண்டிக்கவோ முடியாது. விதிகளின்படி மட்டுமே நடக்க முடியும். அதுவே சட்டத்தை மதிக்காத போக்கிலியாக இருந்தால் அவரது செயல்பாடுகளுக்கு எந்த வரையரையும் கிடையாது. அவர் யாரையும் வேண்டுமானாலும் தாக்கலாம்.... தூக்கலாம் அல்லவா?  அதுபோல் தான் பாட்டாளி மக்கள் கட்சியை பழிதீர்க்கும் விஷயத்திலும் நடந்தது. எதிரிகளை பழி தீர்ப்பதில், மேற்குறிப்பிட்ட இரு வகைகளில் ஜெயலலிதா இரண்டாவது ரகம் ஆவார். அதனால் சட்டத்தை மதிக்காமல் கண்மூடித்தனமாக ஆடினார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான முதலமைச்சர் ஜெயலலிதாவின் பழிவாங்கும் வெறி என்னுடன் அடங்கிவிடவில்லை. எனது கைதுக்குப் பிறகும் அ.தி.மு.க. அரசின் பழிவாங்கல் தொடர்ந்தது. நானும் பாட்டாளி மக்கள் கட்சியின் மற்ற முன்னணித் தலைவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முன்னெடுத்துச் சென்றார்.

நான் கைது செய்யப்பட்டதற்கு அடுத்த நாளான 01.05.2013 அன்று  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கைது செய்யப்பட்டது எந்த வகையில் நியாயம் என்றும், பா.ம.க.வுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா பதில் கூறியே ஆகவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருந்தார்.
3 வழக்குகளில் கைது
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக அரசு, அடுத்த 2 ஆவது நாளே அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. மாமல்லபுரம் மாநாட்டில் அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து பேசியதுதான் அவர் செய்த தவறாகும். இந்த வழக்கில் பிணை கிடைத்தாலும் மருத்துவர் அன்புமணி இராமதாசு விடுதலையாகிவிடக் கூடாது என்பதற்காக அவர் மேலும் 2 பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.
மருத்துவர் அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டது, முழுக்க முழுக்க பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் காட்ட முடியும். அவர் மே 3 ஆம் தேதி முதன் முதலில் கைது செய்யப்பட்டது, கடந்த 05.05.2012 அன்று நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னியப் பெருவிழாவில் காலம் கடந்து பேசியது தொடர்பான வழக்கில்தான். இந்த விழா தொடர்பாக என் மீது தொடரப்பட்ட வழக்கு குறித்த விவரங்கள் ஓராண்டிற்கும் மேலாக எப்படி எனக்குத் தெரிவிக்கப்படாமல் இருந்தனவோ, அதேபோல்தான் மருத்துவர் அன்புமணி இராமதாசு மீதான வழக்கின் விவரங்களும் அவருக்கு தெரிவிக்கப்படவே இல்லை. மருத்துவர் அன்புமணி இராமதாசைக் கைது செய்யவேண்டும் என்ற எண்ணம் அரசுக்குத் தோன்றியதும், கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கை அவர்கள் தூசுத் தட்டி எடுத்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் மே 6 ஆம் தேதி அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அன்றே அவர் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2013 ஆம் ஆண்டு சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் காலம் கடந்து பேசியது தொடர்பான இன்னொரு வழக்கில் அன்றே அவர் கைது செய்யப்பட்டார். மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாக்கள் தொடர்பாக, என்மீதும், ஜி.கே.மணி, குரு, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் மீது தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த இரண்டு வழக்குகளிலுமே நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் பிணை பெற்றோம்.
அதிக நாட்கள் சிறையில் அடைக்க சதி
ஆனால், மருத்துவர் அன்புமணி இராமதாசு மட்டும் இந்த இரு வழக்குகளிலும் தனித்தனியாக கைது செய்யப்பட்டார். இதற்குக் காரணம் இரு வழக்குகளிலும் ஒன்றாகக் கைது செய்யப்பட்டால், உடனடியாக பிணை பெற்று விடுதலையாகி விடுவார் என்ற எண்ணம்தான். தனித்தனியாக கைது செய்தால், இருவழக்குகளிலும் தனித்தனியாக பிணை பெறுவதற்கு இன்னும் சில நாட்கள் கூடுதலாக ஆகும். அந்த நாட்களிலும் அவரைச் சிறையில் அடைக்கலாம் என்ற எண்ணத்தில்தான் தமிழக அரசு இவ்வாறு செய்தது. இந்த வழக்கிலும் அவருக்கு உடனடியாக பிணை கிடைத்துவிடக்கூடும் என்பதை உணர்ந்த காவல்துறையினர், அவரை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கும் நோக்குடன், மூன்றாவது வழக்கைப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மிகவும் விசித்திரமானது. நானும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், 01.05.2013 அன்று சென்னையில் விடுதி ஒன்றில் மருத்துவர் அன்புமணி இராமதாசு செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
சென்னையில் பேச்சு; பிரம்மதேசத்தில் வழக்கு
மாமல்லபுரம் மாநாட்டில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும்விட, அதிக நேரம் பேசியதற்காக மாமல்லபுரம் நீதிமன்றத்தில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், சென்னை எழும்பூரில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அளித்த நேர் காணலில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்திருந்தால், அதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில்தான் வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால் மருத்துவர் அன்புமணி இராமதாசு நேர்காணல் வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்ததாகக்கூறி, விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க திண்டிவனம் நீதிமன்றம் ஆணையிட்டது. நீதித்துறை வரலாற்றில் சென்னையில் அளிக்கப்பட்ட நேர்காணலுக்காக 125 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ஒரு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது இதுவே முதல்முறையாக இருக்கும். ஒருவரை பழிதீர்க்கவேண்டும் என்று நினைத்துவிட்டால், அதற்காக தமிழக அரசும் காவல்துறையினரும் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இதுவொரு உதாரணமாகும்.
பிணையில் விடுதலை
மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்த திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் எளிதில் பிணையில் வெளிவரமுடியாத அளவுக்கு அடுத்தடுத்து பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய செயல்வீரர்கள் அனைவரையும் ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்து, சிறையில் அடைக்கவேண்டும் என்று தமிழக அரசும், காவல்துறையினரும் துடித்ததற்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சியை முடக்கவேண்டும் என்பதுதான்.
தமிழக அரசு மற்றும் காவல்துறையின் பழிவாங்கலுக்கு எதிராக கடுமையான சட்டப் போராட்டம் நடத்திய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அடுத்தடுத்து 3 வழக்குகளில் பிணை பெற்றார். இதையடுத்து மே 9 ஆம் தேதி மாலை சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அன்புமணி இராமதாஸ் மீது போடப்பட்ட வழக்குகளாக இருந்தாலும், என் மீது போடப்பட்ட வழக்குகளாக இருந்தாலும், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளாக இருந்தாலும் சரி... இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த வழக்குகளின் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கவில்லை. காரணம்... அந்த வழக்குகளில் எந்த உண்மையும் இல்லை; அவை எங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்குகள் என்பது தான்.
ஐெ. குருவின் இன்றைய நிலைக்குக் காரணமான அன்றைய அடக்குமுறை!
பாட்டாளி மக்கள் கட்சி மீது ஏவப்பட்டது திட்டமிட்ட அடக்குமுறை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் வன்னிய சங்கத் தலைவரும், அப்போதைய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவருமான மாவீரன் குரு மீது அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படியான கைது நடவடிக்கைகள் தான்.
நீதிகேட்டு போராட்டம் நடத்தியதற்காக நான் சிறையில் வாடிய நாட்களை விட வன்னியர் சங்கத் தலைவர் குரு முதல் சாதாரண தொண்டன் வரை மொத்தம் 134 பாட்டாளி சொந்தங்கள் குண்டர் சட்டத்திலும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தான் என்னை மிகவும் வாட்டியது. இவர்களில் அதிகபட்சமாக ஜெ.குரு 219 நாட்கள் கொடூரமான முறையில் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். அப்போது சிறையில் அவர் அனுபவித்தக் கொடுமைகள் தான் இப்போது அவரது நுரையீரலை மிகக்கடுமையாக பாதித்து மருத்துவமனையில் சேர்க்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளன.
விழுப்புரத்தில் தடையை மீறிப் போராட்டம் நடத்தியதற்காக நானும், ஜி.கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டதை சரியான நடவடிக்கை என்று கூறுபவர்களால் கூட அதன்பின்னர் நடைபெற்ற கைது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காமல், சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு காரணமே கூறப்படாமல், நான் கைது செய்யப்பட்ட நாளான 30.04.2013 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


அப்பட்டமான பொய்யும், அநீதியான கைதும்!
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த தாழம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பனங்காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் கடந்த 03.09.2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த 30.04.2013 அன்று அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் எதையும் குருவிடம் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த 10.04.2013 அன்று இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறையினர், வழக்கு விவரங்கள் அவருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அவர் தலைமறைவாகி விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெறப்பட்ட பிடி ஆணையின்படி காவல்துறையினர் கைது செய்தனர். பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும்கூட, குரு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றபோது, அவருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் இவ்வளவையும் மறைத்துவிட்டு, அவர் தலைமறைவாகிவிட்டதாக பொய்யானத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து, பிடி ஆணை பெற்று கைது செய்தனர்.
பிணையைத் தடுக்க அடுத்தடுத்து கைது
இந்த வழக்கில் அவர் பிணை பெற்று விடுதலையாகி விடக்கூடாது என்பதற்காக அடுத்தடுத்து மேலும் 4 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட 5 வழக்குகளின் விவரம் வருமாறு:
1. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தாழம்பூர் காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு.
2. 05.05.2012 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக மாமல்லபுரம் காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு.
3. 05.05.2012 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பேசியதாக மாமல்லபுரம் காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு.
4. 25.04.2013 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பேசியதாக மாமல்லபுரம் காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு.
5. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக திட்டக்குடி காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு.
இந்த வழக்குகளில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட குரு,  ஒவ்வொரு வழக்காக பிணை பெற்று வந்த நிலையில், அவரை முடக்கும் நோக்குடன்  மே மாதம் 10 ஆம் தேதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து  தமிழக அரசு ஆணையிட்டது.
135 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது
மாவீரன் குருவைத் தொடர்ந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் என 34 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும், 101 குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற தடுப்புக்காவல் சட்டங்களில் ஒருவரைக் கைது செய்வதற்குச் சில வரைமுறைகள் உள்ளன. அதன்படிதான் இச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் ஜெயலலிதாவோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சட்டத்தையும் விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தடுப்புக் காவல் சட்டங்களை விருப்பம்போல பயன்படுத்தினார்.
தேசியப்பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து
ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 34 பேரில் முதல்கட்டமாக 28 பேர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையீடு அளிக்கப்பட்டது. முறையீட்டு மனுக்களை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒருவரை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 11 விதிமுறைகளில் ஒன்றுகூட பாட்டாளி மக்கள் கட்சியினர் விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை என்று கூறி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட 20 பேர் மீதான  தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து ஆணையிட்டது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் 14 (1) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
மத்திய அரசை மதிக்காத ஜெயலலிதா
தேசியப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, மத்திய அரசுதான் அதிகபட்ச அதிகாரம் கொண்டதா-கும். இதுதொடர்பான விவகாரங்களில் மத்திய அரசு முடிவுதான் இறுதியானதாகும். எனவே, மத்திய அரசின் உத்தரவை மதித்து ஜெ. குரு உள்ளிட்ட  20 பேரையும் ஜெயலலிதா விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசின் உத்தரவை மதிக்காத தமிழக அரசு ஜெ.குரு உள்ளிட்ட 14 பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும், இருவரை குண்டர் சட்டத்திலும் கைது செய்தது. மீதமுள்ள 4 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டனர்.
இரண்டாம் கட்டமாக 6 பேர் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் விசாரித்த மத்திய உள்துறை அமைச்சகம், அவர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் ரத்து செய்தது. ஆனால், அதையும் மதிக்காத ஜெயலலிதா அவர்களை  மீண்டும் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தார். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னிய சங்கத்தினரும் விடுதலையாகிவிடக் கூடாது என்பதுதான் ஜெயலலிதாவின் எண்ணம் ஆகும். அதனால்தான் அவர் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், மத்திய அரசை எதிர்க்கத் துணிந்தார். இதுதான் ஜெயலலிதாவின் பழிவாங்கும் வெறியாகும்.
உயர் நீதிமன்றம் கண்டனம்
தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை இரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மதிக்காமல், தங்கள் மீது இரண்டாவது முறையாக தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி, மாரி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தனபாலன், சி.டி. செல்வம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் தாக்கல் செய்த பதில் மனுவில், “பழனி, மாரி ஆகியோர் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் தன்னிச்சையாக இரத்து செய்துள்ளது. அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கள விசாரணை நடத்தாமலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அவர்கள் இருவரையும் மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டேன்” என்று கூறியிருந்தார்.
மத்திய அரசைவிட மாநில அரசு பெரிதா?
இதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். “மாநில அரசைவிட, மத்திய அரசு அதிக அதிகாரம் கொண்டது ஆகும். மாவட்ட ஆட்சியரான உங்களது உத்தரவை இரத்து செய்து மத்திய உள்துறை செயலாளர் ஆணையிட்டால் அதை நீங்கள் மதித்து நடக்க வேண்டும். அவ்வாறு நடக்காமல் மத்திய அரசுக்கு சவால்விடும் வகையிலும், கட்டளையிடும் வகையிலும் நடந்துகொள்வது முறையல்ல” என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரசேனனை நீதிபதிகள் எச்சரித்தனர். அதுமட்டுமின்றி, அடுத்த ஒரு வாரத்தில் இந்த வழக்கின் மீதான விசாரணையை நடத்தி முடித்த நீதிபதிகள், பழனி, மாரி ஆகிய இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட இவர் பின்னாளில் மணல் கொள்ளை ஊழலில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐெ. குரு மீது மீண்டும் மீண்டும் வழக்கு
தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் வன்னியர் சங்கத்தலைவர் ஜெ. குரு  தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த நிலையில், அவர் மீது மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஜெயலலிதா பாய்ச்சினார். குருவுக்கு எதிராக மட்டும் மொத்தம் 4 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இதனால், மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், குரு விடுதலையாக முடியாத சூழல் உருவானது. குருவின் விடுதலைக்கு எதிராக அ.தி.மு.க. அரசு பல்வேறு சதிகளை செய்தது.
மருத்துவ சிகிச்சை மறுப்பு
கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட குருவு-க்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டன. கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக, அவரது கால்கள் மரத்துப்போயின. இதற்காக மருத்துவம் அளிக்கவேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் முறையீடு அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு மருத்துவம் வழங்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பின்னர், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம் குருவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி தமிழக அரசுக்கும், சிறைத் துறைக்கும் ஆணையிட்டது. ஆனால், இறுதிவரை குருவுக்கு மருத்துவம் அளிக்க சிறைத்துறை முன்வரவில்லை. மாறாக, அவரை காவல் நீட்டிப்பு என்ற பெயரில் சென்னையில் இருந்து திருக்கழுக்குன்றம், அரியலூர், திட்டக்குடி என பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் கொடுமைப்படுத்தினர். இதனால் குரு கடுமையான உடல்நலக் குறைவுக்கு ஆளானார்.
மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்தது தான் மாவீரன் குருவின் உடல்நிலையை மிகக்கடுமையாக பாதித்தது. மாவீரன் குருவின் இன்றைய நிலைக்கு ஜெயலலிதாவின் அடக்குமுறையும், பழிவாங்கலும் தான் காரணமாகும்.
219 நாட்களுக்குப் பிறகு குரு விடுதலை
மத்திய அரசும், உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்தாலும் திமிர்பிடித்த ஜெயலலிதா அரசு திருந்தவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. ஆனால், அவற்றை முறியடித்து தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 135 பேரில் மாவீரன் குரு தவிர மற்ற 134 பேருக்கு அடுத்த ஒரு சில மாதங்களில் விடுதலை பெறப்பட்டது. ஆனால், மாவீரன் மீது அடுத்தடுத்து 4 முறை தேசியப்பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததால் அவரது விடுதலை மட்டும் சிறிது காலம் தாமதமானது.
எனினும், தமிழக அரசின் அடக்குமுறைகளை முறியடித்து, குரு மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை செல்லாது என்று 04.12.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்திடம் தீர்ப்பு பெற்றோம். இதைத்தொடர்ந்து, 219 நாட்களுக்குப் பிறகு வன்னியர் சங்கத் தலைவர் குரு விடுதலையானார். இந்த செய்திதான் என் இதயத்தை வாட்டிய வலியைப் போக்கியது.
பாட்டாளிகள் மீதான மனித உரிமை மீறல்!
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பழிவாங்கும் வெறி என்னுடனோ, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியுடனோ, மருத்துவர் அன்புமணி இராமதாசுடனோ, ஜெ.குருவுடனோ அடங்கிவிடவில்லை. பா.ம.க.  தொண்டர்கள் மீதும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
நீதிகேட்டு போராட்டம் நடத்தியதற்காக அநியாயமாக நான் கைது செய்யப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாத பா.ம.க. தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் உள்ளிட்ட அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.  2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று ஒரு நாள் நடைபெற்ற போராட்டங்களில் மட்டும்  9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் மேலும் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டன.  ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் பாட்டாளிகளை கைது செய்து சிறைகளில் அடைத்தார் ஜெயலலிதா.
இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு பிறகு....
1987&ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு பிறகு இந்த அளவுக்கு ஒரு கட்சியின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதில்லை. திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தியபோது கூட கைது செய்து விடுவிப்பது தான் வழக்கமாக இருந்ததே தவிர, சிறையில் அடைப்பது வழக்கம் அல்ல. ஆனால், பா.ம.க.வுக்கு எதிராக ஜெயலலிதா கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறையின் காரணமாக எங்களின் கைதுக்கு எதிராக நீதி கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் தொடர்ந்து கைது வேட்டையாடப்பட்டனர்.
பா.ம.க.வின் அறவழிப்போராட்டத்தை முறியடிக்கவேண்டும் என்பதற்காக, காவல்துறையினர் இரவு நேரங்களில் வன்னிய மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இரவு நேரங்களில் விசாரணை என்ற பெயரில் வீடுகளுக்குள் செல்லும் காவல்துறையினர், அத்துமீறி நடப்பது, விசாரணை என்ற பெயரில் ஆண்களை அழைத்துச் சென்று கொடுமைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதற்கு பயந்து, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களில் உள்ள ஆண்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் திட்டமிட்டு வன்முறைகளை நடத்தினார்கள் என்று குற்றஞ்சாற்றியது அபத்தத்திலும் அபத்தமானது என்றால் அது மிகையல்ல.
உண்மையில் காவல்துறையினர் தான் திட்டமிட்டு வன்முறைகளையும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டனர். இன்னும் கேட்டால் தமிழகம் முழுவதும் நிலவிய பதற்றமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டனர். ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்று காவல்துறையினரின் அத்துமீறல்களுக்கு ஒரே ஒரு உதாரணத்தை கூறுகிறேன்.
பணம் பறித்த காவல்துறை
பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் துரத்தி துரத்தி கைது செய்யப்பட்ட நிலையில்,   ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை காவல்நிலையத்திற்கு அழைத்த காவல்துறை அதிகாரிகள், “உங்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. மேலிடத்தை சமாளித்து உங்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றால், நீங்கள் ரூ.50 ஆயிரம் பணம் தரவேண்டும்” என்று மிரட்டி பணம் பறித்தனர். தொடக்கத்தில் 20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் மட்டுமே வாங்கிய காவல்துறையினர், ஒரு கட்டத்தில் ஒரு லட்ச ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி பறித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திப்பம்பட்டியைச் சேர்ந்த குமரேசன் என்பவரது குடும்பம் காவல்துறையினரின் பணம் பறிக்கும் வேட்டையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குமரேசன் குடும்பத்தில், குமரேசன், சரவணன், கார்த்திக், கணேசன் என 4 சகோதரர்கள். எந்தவித வம்பு தும்புக்கும் செல்லாத இவர்கள், சொந்தமாகத் தொழில்செய்து பிழைத்து வருகின்றனர். பாட்டாளி  மக்கள் கட்சியைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்த தமிழக அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களான குமரேசனையும், அவரது சகோதரர் சரவணனையும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.
2 லட்சம் கேட்டு மிரட்டல்
குடும்பத்தின் 2 முக்கிய உறுப்பினர்களைச் சிறைக்கு அனுப்பிவிட்ட துயரத்தில், அக்குடும்பம் தவித்துக்கொண்டிருந்த வேளையில், காவல்துறையினர் அக்குடும்பத்திடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டனர். இதற்காக, அக்குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக்கையும், கணேசனையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்போவதாகக் காவல்துறையினர் மிரட்டினர். ஊத்தங்கரை காவல்நிலைய ஆய்வாளர் சிவலிங்கம், சார்பு ஆய்வாளர் அண்ணாமலை, தலைமைக்காவலர் சேட்டு, நுண்ணறிவுப்பிரிவு காவலர் சுப்பிரமணி, ஆய்வாளரின் ஓட்டுநர் சரவணன் ஆகியோர் தொடர்ந்து இரவு நேரங்களில் இவர்களின் வீடுகளுக்குச் சென்று, “உங்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எங்களின் உயரதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். உங்கள் குடும்பத்தில் ஏற்கெனவே 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், நீங்களும் கைது செய்யப்பட்டால், குடும்பம் முடங்கிவிடும். எனவே, உங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் தப்ப வைக்க விரும்புகிறோம். இதற்காக, ஆளுக்கு ஒரு லட்சம் வீதம் 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால், உங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் விட்டுவிடுகிறோம். இல்லாவிட்டால், உங்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறி மிரட்டியிருக்கிறார்கள்.
இரு சக்கர ஊர்தி பறிப்பு
இதனால், அச்சமடைந்த கார்த்திக், கணேசன் ஆகியோரின் குடும்பத்தினர் தங்களது குடும்ப நகைகளை அரூரில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்து, ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, கார்த்திக்கின் உறவினர் குடும்பத்திற்குச் சொந்தமான யமாஹா கிரக்ஸ் வகையைச் சேர்ந்த இருசக்கர ஊர்தி ஒன்றையும் காவல்துறையினர் எடுத்துச் சென்றுவிட்டனர். ஆனால், இது போதாது என்று மேலும் ஒரு லட்ச ரூபாயை உடனடியாக தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் குண்டர் சட்டம் பாயும் என்றும் கூறி தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் இது குறித்த தகவல் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசின் கவனத்திற்கு வந்தது. இத்தகைய மிரட்டல்கள் தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு எச்சரிக்கை விடுத்த பிறகுதான், காவல்துறையினரின் மிரட்டல் முடிவுக்கு வந்தது.
என் மனவேதனை
நான்  சிறையில் அனுபவித்த கொடுமைகளைக் காட்டிலும் என் மனதை வேதனைப்படுத்திய விஷயம் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 134 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதுதான். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான், முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தபோதிலும், என் எண்ணமெல்லாம் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவிக்கும் சொந்தங்களை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதில்தான் இருந்தது. அதன்படியே சட்டப்போராட்டம் நடத்தி  அனைவரையும் மீட்டெடுத்தோம்.
பாதிக்கப்பட்டோருக்கு உதவி!
சிறைச் சென்றவர்களின் குடும்பங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும், ரூ. 10,000 நிதியுதவியும் வழங்கும்படி பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆகியோரை நான் கேட்டுக்கொண்டேன்.
அதன்படியே அவர்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டன.  மற்றொரு புறம், கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதற்கான சட்டரீதியான பணிகளை மேற்கொள்ளும்படி பா.ம.க. வழக்கறிஞர்களை முடுக்கிவிட்டேன். அதன்பயனாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெரும்பாலானவர்கள் விடுதலை ஆனார்கள். கடைசியாக குரு 2013-ஆம் ஆண்டு திசம்பர் 4 ஆம் தேதி விடுதலை ஆனார்.  அதைத்தொடர்ந்து, சிறைச் சென்ற தியாகிகளுக்கு 03.01.2014 அன்று சென்னையில் பாராட்டு விழா நடத்தினேன்.


1987-ஆம் ஆண்டுக்கு பிறகு பாட்டாளிகள் அனுபவித்த மிகக்கொடுமையான அடக்குமுறை இதுவாகும்.  இயக்கத்துக்காக எந்த அடக்குமுறையையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் இவர்களை தொண்டர்களாக.... இல்லை.... சொந்தங்களாக பெற்றதை விட  எனக்கு வேறு என்ன பேறு வேண்டும்?
கே. இராமானுஜம் எனும் ஜெயலலிதாவின்
ஏவல்படைத் தலைவர்!
வரலாறு நமக்கு சொல்லித்தரும் பாடம் என்பது சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள், சதிகாரர்கள்  ஆகியோரை விட அவர்களின் ஏவலாட்கள் மிகவும் கொடியவர்களாக இருந்திருக்கின்றனர். ஹிட்லரின்  இரண்டாம் நிலை தளபதி ஜோசப் மெங்கேலே, இடி அமீனின் தளபதி ஐசக் மலியமுங்கு, இராஜபக்சேவின் படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தங்களின் தலைவனைவிட மிகவும் கொடியவர்களாகவே இருந்தனர். எதிரியை வெட்டிக் கொல்ல வேண்டும் என்று தலைவன் ஆனையிட்டால், எதிரியை கொன்று ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பது சில தளபதிகளின் வழக்கம். இந்த வரிசையில் தமிழகத்தின் கொடுங்கோலராக திகழ்ந்த ஜெயலலிதாவின் தளபதியாக விளங்கியவர் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் கே.இராமானுஜம்.
கூனி, சகுனி, கே.ராமானுஜம்
இராமாயணத்தில் கூனி, மகாபாரதத்தில் சகுனி போன்று பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட அத்தியாயத்தின் வில்லன் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் கே.இராமானுஜம் தான். கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்று தம்மைப் பற்றி ஒரு தோற்றத்தை திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்ட இராமானுஜம் அழுக்கு நிறைந்த இதயத்துக்கு சொந்தக்காரர். பாட்டாளி மக்கள் கட்சி மீதும், வன்னியர்கள் மீதும் இனம் புரியாத வன்மத்தை ஏற்படுத்திக்  கொண்ட இவர் அவர்களை பழிவாங்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். இதே தருணத்திற்காகத் தான் ஜெயலலிதாவும் காத்திருந்தார். மான்களை வேட்டையாடுவதை நோக்கமாகக் கொண்ட குள்ளநரியும், ஓநாயும் ஒன்று சேர்ந்தது போல பாட்டாளிகளை வேட்டையாட ராமானுஜமும், ஜெயலலிதாவும் ஒன்று சேர்ந்தனர்.
ஜெயலலிதா காலால் இட்ட வேலைகளை ராமானுஜம் தலையால் செய்து முடித்ததற்கு காரணம் இருந்தது. 2011&ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, அதுவரை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த இராமானுஜத்தை உளவுத்துறை தலைமை இயக்குனராக நியமித்தார். அதுமட்டுமின்றி,  சட்டம் &ஒழுங்கு பிரிவின் தலைமை இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக வழங்கினார். 2012 ஆம் ஆண்டு  நவம்பர் மாதத்தில் அவர் ஓய்வுபெறுவதற்கு 3 வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில் அவரை நிரந்தர தலைமை இயக்குனராக நியமித்து இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பும் வழங்கினார். அதற்கு நன்றிக் கடனாகத் தான் ஜெயலலிதாவுக்கு அவ்வளவு விசுவாசமாக நடந்து கொண்டார்.
குண்டர் சட்ட கைதுகள்
ஜெயலலிதாவின் பழிவாங்கும் மனநிலையை புரிந்து கொண்ட இராமானுஜம் தமக்கு கீழ் பணியாற்றிய  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; எவ்வளவு பேரை  தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; எவ்வளவு பேரை சாதாரண வழக்குகளில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் தான்  12,000 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். 134 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
10 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஆணையிட்டால் 25 பேரௌ குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பார் ராமானுஜம். ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளை கேள்விப்பட்டிருப்போம். ஜெயலலிதாவை மிஞ்சிய ஜெயலலிதா விசுவாசியும், ஜெயலலிதாவை மிஞ்சிய கொடுங்கோலரும் இராமானுஜம் தான்.
காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொள்வது இயல்பு தான் என்றாலும் கூட அவர்களும் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் அல்லவா? ஆனால், இராமானுஜம் காக்கிச் சட்டை போட்ட தாதாவைப் போல மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தார். ஜெயலலிதாவை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 135 பேரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கச் செய்தார் இராமானுஜம்.
மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல்
அதுமட்டுமின்றி, இந்திய தண்டனைச் சட்டப்படி, ஒருவர் எவ்வளவு கடுமையான குற்றங்களைச் செய்திருந்தாலும், அவரால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனும்போது, அவர்களைத் தடுப்புக் காவல் சட்டத்தின்படி கைது செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. மிகக்கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களுக்கே இத்தகைய அளவுகோல்களைக் கடைபிடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், எந்தக் குற்றத்தையுமே செய்யாத அப்பாவி பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, குண்டர் சட்டத்திலும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்து சிறையில் அடைத்தது மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் ஆகும்.
இந்தியாவில் பயங்கரவாதம் தலைவிரித்தாடும் காஷ்மீர் மாநிலத்தில் கூட ஒரே மாதத்தில், ஒரே கட்சியைச் சேர்ந்த 134 பேர் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ச்சப்பட்டதில்லை. ஆனால், தமிழகத்தில் எந்தக் குற்றமும் இழைக்காத  134 பேர் பேர் மீது தடுப்புக் காவல் சட்டம் பாய்ச்சப்பட்டதில் இருந்தே பா.ம.க. மீது  எந்த அளவுக்கு பழிவாங்கும் உணர்வுடன்  ஜெயலலிதா இருந்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
பாண்டியன் தற்கொலை
தடுப்புக்காவல் சட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் முடுக்கிவிடப்பட்ட நிலையில், மறுபுறம் நீதி கேட்டு போராடியதற்காக நானும், மருத்துவர் அன்புமணி இராமதாசும் கைது செய்யப்பட்டதை அறிந்து மனம் உடைந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற இளைஞர் 04.05.2013 அன்று இரவு தீக்குளித்தார். சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி  அடுத்த நாள் மாலை காலமானார். அவரது மறைவு செய்தி  பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உயிர்த்தியாகம் செய்த பாண்டியனின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் கீழ் செட்டிப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. எனது உத்தரவின் பேரில் அவரது இறுதிச் சடங்கில் பா.ம.க.வின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இராமானுஜத்திற்கு பரிசுகள்

இராமானுஜத்தின் இந்த துரோகப்பணிக்கு பரிசாக அவர் ஓய்வு பெற்றவுடன் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்பின் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றார். 60 வயதில் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய இராமானுஜத்தின் அரசுப்பணி 65 வயது வரை நீடித்தது. காவல்துறை தலைமை இயக்குனர் என்ற முறையில் ஒரே ஒரு ஓய்வூதியம் பெற வேண்டிய இராமானுஜம் இப்போது 3 ஓய்வூதியங்களைப் பெற்று வசதியாக வாழ்கிறார். இது பாட்டாளி மக்கள் கட்சியினரை கொடுமைப்படுத்தியதற்கு ஜெயலலிதா வழங்கிய பரிசு ஆகும்.
அடுத்தவர் பெயர் எழுதப்பட்ட அரிசியை நாம் பறித்து உண்பதே பெரும் பாவம் எனும் போது அடுத்தவர் ரத்தத்தை உறிஞ்சி தமது உடலை வளர்ப்பது எவ்வளவு பெரிய பாவம்? அந்த பாவத்தை  தான் கொடுங்கோலர் ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஏவலாளி இராமானுஜம் செய்திருக்கிறார்.  மொத்தத்தில் ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் இராமானுஜம் ஆவார்.
விடுதலையும், உயிர்ப்போராட்டமும்!
அனைத்துக்கும் ஒரு முடிவு உண்டு அல்லவா? அதேபோல் தான் எனக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையிலான அடக்குமுறையும் 12 நாட்களில் முடிவுக்கு வந்தன. திருச்சி மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டது, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் என்னை திருக்கழுகுன்றம் நீதிமன்றத்திற்கும், மதுரை நீதிமன்றத்திற்கும் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல முயன்றது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அதற்கு நான் மறுத்தது, இறுதியாக இரு வழக்குகள் தொடர்பாகவும் உள்ளூர் நீதிபதிகள் இருவரை அழைத்து வந்து காவல் நீட்டிப்பு வழங்கியது  ஆகியவை குறித்து மூன்றாவது அத்தியாயத்தில் விரிவாக விளக்கியிருந்தேன். மீதமுள்ள கூடங்குளம் வழக்கு தொடர்பாக நடந்த கூத்துகளை இந்த அத்தியாத்தில் பார்ப்போம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி நடவடிக்கை
மதுரை வழக்கைத் தொடர்ந்து கூடங்குளம் போராட்ட வழக்கில் என்னை கைது செய்ய நடவடிக்கைகள் தொடங்கின. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் என்னை கைது செய்ய வேண்டும் என்பதற்காக  உச்சநீதிமன்றத்தின் உத்தரவையே மதிக்காமல் தமிழக அரசு செயல்பட்டது தான். கூடங்குளம் வழக்கில் நான் கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாள் தான் மிக முக்கியமான உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது. கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்று ஆணையிடக் கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அம்மனுக்களைத் தள்ளுபடி செய்ததுடன், கூடங்குளம் அணு உலையை உரிய சோதனைகளுக்குப் பிறகு தொடங்கலாம் என்றும் ஆணையிட்டது.
அதுமட்டுமின்றி, கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதற்காகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்பட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர். இதுதொடர்பான செய்திகள் தி ஹிந்து, தினத்தந்தி, தினமணி உள்ளிட்ட அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தன. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்த வழக்கில் என்னை கைது செய்வதாக தமிழகக் காவல்துறை அறிவித்தது.
இரு நீதிபதிகள்...
இரு தீர்ப்புகள்! 
இதைத்தொடர்ந்து  என்னை நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கான அனுமதியை பெறுவதற்காக இன்னொரு நீதிபதி சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம்  என் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பாலு,‘‘ கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆனையிட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது மருத்துவர் அய்யாவுக்கு எப்படி நீதிமன்றக் காவல் வழங்குவீர்கள்?’’ என்று கேட்டார்.  உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலையும் நீதிபதியிடம் அவர் கொடுத்தார். ஆனால், வழக்குகளை திரும்பப் பெறும் விஷயத்தில் தமிழக அரசு ஆணையிடாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறி  என்னை 15 நாள் காவலில் வைக்க ஆணையிட்டார். இதில் கொடுமை என்னவென்றால், கூடங்குளம் வழக்கில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியையும் காவலில் வைப்பதற்காக மே 6&ஆம் தேதி இன்னொரு நீதிபதி அழைத்து வரப்பட்டார். வழக்கு ஆவணங்களை பார்த்த அவர், வழக்குகளை திரும்பப்பெறும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பதால் ஜி.கே. மணியை காவலில் வைக்க ஆணையிட முடியாது என்று  கூறி வெளியேறிவிட்டார். என்னைப் பழிவாங்குவதற்கான திட்டத்தின்படி இப்படியெல்லாம்  நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன்.
சிறையிலிருந்து விடுதலை

தமிழக அரசு போட்ட தொடர் வழக்குகளையெல்லாம் முறியடித்து 12 நாள் சிறை வாசத்திற்குப் பிறகு மே 11 ஆம் தேதி திருச்சி சிறையில் இருந்து நான் வெளி வந்தேன். என்னைப் போலவே என்னுடன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மீதும் பல்வேறு பொய் வழக்குகள் தூசுதட்டி எடுக்கப்பட்டன. இதற்காகத் திருச்சி சிறையில் இருந்து கடலூர், திருக்கழுக்குன்றம் என பல்வேறு இடங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டார். ஒவ்வொரு வழக்கிலும் அவருக்கு பிணை கிடைத்தவுடன் இன்னொரு வழக்கில் அவரை கைது செய்வதை தமிழக அரசு வழக்கமாக வைத்திருந்தது. நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு அவரும் மே 11 ஆம் தேதிதான் திருச்சி சிறையில் இருந்து என்னுடன் விடுதலையாகி வெளிவந்தார். ஏராளமான பா.ம.க. தொண்டர்களும் என்னுடன் தான்  விடுதலை ஆனார்கள்.
பத்திரிகையாளர் சந்திப்பு

ஏற்கனவே சுட்டிக்காட்டியதைப் போன்று சிறைக்கொடுமை சகித்துக்கொள்ள முடியாததாக இருந்ததால்  எனது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 12 நாட்களாக பெரும் துயரத்தை அனுபவித்த நான், உயிருடன் வெளியில் வந்து மக்களை சந்திப்பேனா என்ற ஐயம் என்னை வாட்டியது. எனினும், மன உறுதி காரணமாகவே சிறையில் இருந்து உயிருடன் வெளியே வரமுடிந்தது.

சிறைக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் என்னை சூழ்ந்து பேட்டி கண்டனர். அவர்களிடம் பேசிய நான்,‘‘ உயிருடன் வெளியே வந்து உங்களையெல்லாம் சந்தித்து பேசுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சிறைக்கு உள்ளேயே இறந்து விடுவேன் என்று தான் நான் நிபைத்தேன், அந்த அளவுக்கு சிறையில் கொடுமைகளை அனுபவித்தேன். அதற்குப் பிறகும் உங்களை சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது’’ என்று கூறினேன்.
மூச்சுத் திணறல்:
உயிருக்குப் போராட்டம்
12 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு மே 11ம் தேதி திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நான், மரக்காணம் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட அரியலூர் செல்வராஜ், கும்பகோணம் விவேக் ஆகியோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினேன். ஆனால், அதற்குக்கூட அனுமதியளிக்க மறுத்துவிட்ட காவல்துறையினர், தஞ்சாவூர் மாவட்டத்திலும், அரியலூர் மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.
பின்னர் நேரடியாக தைலாபுரம் திரும்பிய எனக்கு அடுத்த சில மணி நேரங்களில் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் எனது வருகைக்காக காத்திருந்த எனது துணைவியார், மகன் அன்புமணி இராமதாஸ், மகள்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியும் கவலையும் அடைத்தனர். எனது மகன் அன்புமணி இராமதாஸ் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் என்னை  சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். உடனடியாக சிகிச்சை அளித்து எனது மூச்சுத் திணறலை சரிசெய்த இதயநோய் மருத்துவ வல்லுனர் ஜி.செங்கோட்டு வேலு, பின்னர் ஆஞ்சியோ உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போதுதான் சிறைக் கொடுமைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும், சிறையில் போதிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படாததாலும் எனது இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
மருத்துவர் செங்கோட்டுவேலுவின் அக்கறை

எனது இதயத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்பை சரி செய்ய உடனடியாக பை&பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தனர். அதன்படியே, மே 20ம் தேதி எனக்கு அப்பல்லோ மருத்துவமனையில் இதய பை&பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதய அறுவை சிகிச்சை வல்லுநர் கிரிநாத் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் 6 மணிநேரம் போராடி என்னைக் காப்பாற்றினர். இதய பை&பாஸ் அறுவை சிகிச்சைக்காக  ஆபரேஷன் தியேட்டருக்கு என்னை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லும் போது, தியேட்டருக்கு வெளியில் எனது துணைவியார், மகன் அன்புமணி இராமதாஸ், மகள்கள் மற்றும் குடும்பத்தினர் கண்கலங்கி நின்றனர். அப்போது எனது மகன் அன்புமணி இராமதாசை அழைத்த நான்,‘‘ தேசியப் பாதுகாப்பு சட்டம் குண்டர்கள் சட்டம் ஆகிய தடுப்புக்காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டேன்.
அப்பல்லோ மருத்துவமனையில் எனக்கு மருத்துவம் அளித்த மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு , அன்று முதல் இன்று வரை தனது தந்தையைக் கவனிப்பது போல என்னையும் கவனித்து வருகிறார். என் மீது மிகுந்த அக்கறை கொண்டு எனது உடல் நலம் குறித்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களில் இதய நோய் மருத்துவ வல்லுனர் ஜி. செங்கோட்டுவேலு மிகவும் முக்கியமானவர் ஆவார்.
சிறைவாசமே காரணம்
நீதி கேட்டு போராட்டம் நடத்தியதற்காக சிறையில் அடைக்கப்படுவதற்கு 15 நாட்கள் முன்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இதயநோய் மருத்துவ வல்லுனர் பாலச்சந்தரிடம் வழக்கமான மருத்துவ ஆய்வுகளை செய்து கொண்டேன். அந்த சோதனைகளின் முடிவில் உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஒரு மாதம் முன்பாக மருத்துவர் செங்கோட்டு வேலுவிடம் மருத்துவ ஆய்வு செய்து கொண்டேன். அதிலும் எனது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர் செங்கோட்டுவேலு தெரிவித்தார். சிறையில் இழைக்கப்பட்ட கொடுமையினால் தான் எனது இதயம்  பாதிக்கப்பட்டது என்பதற்கு இவை தான் முக்கிய ஆதாரங்கள் ஆகும்.
உதவியாளர் தண்டபாணியின் கவனிப்பு
பை&பாஸ் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நான் இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆயின. இந்த இடத்தில் என்னை மிகச்சிறப்பாக கவனித்துக் கொண்ட எனது  உதவியாளர் தண்டபாணியைப் பற்றி சில விஷயங்களை நான் பகிர்ந்து கொண்டாக வேண்டும். ஏற்கனவே, இரண்டாவது அத்தியாயத்தில் தண்டபாணி எனக்கு செய்த சேவைகள் குறித்து விரிவாக விளக்கியிருந்தேன். அவனது சேவைகள் குறித்து எத்தனை அத்தியாயத்தில் எழுதினாலும் அதற்கு அவன் தகுதியானவன் தான்.
திருச்சி சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் சென்னையில் தங்கி ஓய்வெடுத்து வந்தேன். அப்போது என்னுடன் முழுக்க முழுக்க இருந்து கவனித்துக் கொண்டவன் தண்டபாணி தான். ஒரு தந்தையை பிள்ளை கவனித்துக் கொள்வதைப் போல என்னை அவன் பார்த்துக் கொண்டான். காலையில் குளிப்பாட்டுவதில் தொடங்கி எனது அனைத்து தேவைகளையும் அவன் தான் நிறைவேற்றினான். எழுபிறவி எடுத்தாலும் சிலருக்கு பட்ட கடனை அடைக்க முடியாது என்பார்கள். எழுபிறவிகள் இருக்கின்றனவோ, இல்லையோ, அத்தனை பிறவிகள் தாங்கும் அளவுக்கு அவனுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன் என்பது மட்டும் உண்மை.
திருச்சி சிறையில் இருந்து விடுதலையான என்னை, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்திருக்காவிட்டாலோ அல்லது மேலும் சில நாட்கள் திருச்சி மத்திய சிறையில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலோ என்னால்  இந்தக் கட்டுரையை எழுதி இருக்க முடியும் என்று தோன்றவில்லை. மறு பிறவி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், திருச்சி மத்திய சிறையில் சொல்லமுடியாத அளவுக்கு கொடுமைகளை அனுபவித்து, உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நான் இப்போது உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன் என்றால், அதை மறு பிறவியாகவே நான் கருதுகிறேன்.
                          (நிறைந்தது)
                            ************

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages