தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நடுவண் புலனாய்வுத்துறை விசாரணைக்கு ஆணையிடக் கோரும் மனு, அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு, வழக்குரைஞர் சூரியபிரகாசம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நடுவண் புலனாய்வுத்துறை விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும், உயிரிழப்புகள் குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 3 மாவட்டங்களில், இணையதளத்தை துண்டித்து நடுவண் அரசு வெளியிட்டுள்ள ஆணையை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் முறையிட்டார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசுத் தரப்பு வழக்குரைஞர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்கு ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் இருப்பதை சுட்டிக் காட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்குரைஞர் சூரியபிரகாசத்தின் முறையீட்டு மனு, இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார். இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையமே குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என ஆணையிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
No comments:
Post a Comment