கர்நாடக முதலமைச்சராக எச்.டி.குமாரசாமி பதவியேற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியேற்ற எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாது என்ற அச்சம் காரணமாக பதவி விலகினார். இதையடுத்து உதயமான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி சார்பில் எச்.டி.குமார சாமி முதலமைச்சர் பதவியேற்கிறார். இதையொட்டி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பதவியேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பதவிப்பகிர்வு மற்றும் அமைச்சரவையில் இடம் உள்ளிட்டவை குறித்து காங்கிரசுடன் பேரம் நடத்தப்போவதில்லை என்றார். அதேநேரத்தில் பெங்களூரில் இன்று காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர்கள் இடையே நடைபெறவுள்ள ஆலோசனையில் அமைச்சரவை பங்கீடு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதனிடையே, கர்நாடகா முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதில், வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு ஆட்சி அமைப்பதற்கு முன்பு புதிய கூட்டணி அமைப்பது சட்டவிரோதம் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment