நாமக்கல்: விமர்சனத்தை கண்டு கவலைப்படுவதில்லை, ஒரு வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு மாற்றப்படுவது நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படுவதை காட்டுகிறது என நாமக்கல் விழாவில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார். நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், புதிதாக குடும்பநல நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்றம் ஆகியவற்றின் தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்து பேசியதாவது: குடும்ப பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு காணவே, குடும்ப நீதிமன்றங்கள் அமைக்கப்படுகிறது. தற்போது விவாகரத்து வழக்குகள் அதிகம் வருகிறது.
இதை தவிர்க்க தம்பதிகள், பிரச்னைகளை மனம் விட்டு பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.
கோபமான மனநிலையில் இருக்கும் போது நல்ல முடிவை எடுக்க கூடாது. குடும்ப பிரச்னைகளுக்கு, நல்ல தீர்வை நீதிமன்றங்கள் விரைவாக அளிக்க வேண்டும். தாமதமாக தீர்ப்புகள் வழங்கப்பட்டால், அது ஏழை பெண்கள், குழந்தைகளின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். குடும்ப நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களின் பங்கு மிகவும் அவசியம். அவர்கள் தன்னை நாடுபவர்களுக்கு வாதாடுபவர்களாக மட்டும் இல்லாமல், திருமண உறவை பாதுகாப்பவர்களாகசெயல்படவேண்டும். நீதி வழங்கப்படுவதற்கு நீதிபதிகள் மட்டும் காரணமாக இருப்பதில்லை. வழக்கறிஞர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. சிறந்த தீர்ப்புகள் வெளிவர வழக்கறிஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளின் மூலம், நீதி வழங்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு தெரியவேண்டும். சட்டப்படி தான் நீதிபதிகள் தீர்ப்புகளை அளிக்கின்றனர். சமீப காலமாக, நீதிபதிகளின் தீர்ப்புகள் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. இதைப்பார்த்து நாங்கள் கவலைப்படுவதில்லை. மனசாட்சிக்கும், கடவுளுக்கும் கட்டுப்பட்டு தீர்ப்புகளை அளிக்கிறோம். விமர்சனங்களை கண்டு உணர்ச்சி வசப்படாமல், நீதிமன்றத்தின் மாண்புகளை நீதிபதிகள் பாதுகாக்க வேண்டும். ஒரு வழக்கின் விசாரணை, 3வது நீதிபதிக்கு அனுப்பப்படுவது, நீதிமன்றம் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது என்பதை மக்களுக்கு காட்டுகிறது. இவ்வாறு இந்திராபானர்ஜி பேசினார்.
No comments:
Post a Comment