ஈகைக்கு இலக்கணம் வகுக்கும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது இரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இது பற்றி இறைவன் அவரது திருமறையில், ‘‘மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு. நோன்பு நோற்றிருக்கும் போது தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என்று இறைவன் கூறும்போது, உண்ணாமல் இருக்கிறார்களே.... இப்பயிற்சி பெற்றவர்களா பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே என்று இறைவன் சொல்லும்போது அதைப் பின்பற்றாமல் இருப்பார்கள்?’’ என்று குறிப்பிடுகிறார். இதேபோல் நோன்பிருக்கும் போது கடைபிடிக்கப்படும் மற்ற வழக்கங்களும் மனிதர்களை மேன்மை படைத்தவர்களாக மாற்றுகின்றன.
கொடைகளுக்கும், நற்குணங்களுக்கும் உதாரணமாக இஸ்லாமியர்கள் திகழுகின்றனர். அன்பு ஒன்றே அனைவரையும் வெற்றி கொள்ளும் சூத்திரம் என்று நபிகள் கூறுகிறார். அதை அவர்கள் நடைமுறையிலும் பின்பற்றுகின்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் மீது இல்லாதவைகளைக் கூறி அவர்களை சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அவை அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும். அதுவே சமூக நல்லிணக்த்தை வலுப்படுத்த வகை செய்யும்.
இறைவன் அருளிய திருமறையில் உள்ள அறிவுரைகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மனித நேயத்திலும், நீதி நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை ஆகும். எனவே, அவற்றை கடைபிடித்து, உலகில் அமைதி, வளம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பெருக்கவும், தீமைகளை ஒழித்து, நன்மைகளை பெருக்கச் செய்யவும் பாடுபட இந்நன்னாளில் அனைத்து மக்களும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment