உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்! - Agnipuratchi

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்!

Share This

நடிகரும், பி.ஜே.பி பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்திருந்தார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தி.மு.க. எம்.பி. கனிமொழி என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புக் குரல் தெரிவித்திருந்தனர். அனைத்து அரசியல் கட்சிகளுமே எஸ்.வி.சேகரின் அந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், எஸ்.வி.சேகரைக் கைது செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சென்னை போலீஸார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


இந்த வழக்கில் தன்னைக் கைதுசெய்யாமல் இருக்க எஸ்.வி. சேகர், முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

பத்திரிகையாளர்கள், மாதர் சங்கங்கள், பெண் வக்கீல் சங்கங்கள் போன்றவை அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, முன் ஜாமீன் வழங்காமல் வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, இந்த வழக்கை கோடைகால நீதிபதி விசாரிப்பார் என்று முன் ஜாமீன் மனுவைத் தள்ளி வைத்தார். இந்நிலையில், எஸ்.வி. சேகரின் முன் ஜாமீன் மனு, நீதிபதி எஸ்.ராமதிலகம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. எஸ்.வி.சேகர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரகுநாதன், ``எஸ்.வி.சேகர், ஒரு இன்ஜினீயரிங் முடித்த பட்டதாரி. ஒலிப்பதிவாளர், போட்டோகிராபர், வீடியோ கிராபர், எடிட்டர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பல துறைகளில் இருப்பவர். திருமலை என்பவர் முகநூல் தளத்தில் பதிவிட்டதை அவர் படித்துப் பார்க்காமல், தெரியாமல் வெளியிட்டுவிட்டார். அதற்காக அவர் பகிரங்க மன்னிப்பும் கேட்டுவிட்டார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமதிலகம், எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பில், ``தவறுதலாகச் செய்யும் ஒரு செயலும் குற்றச்செயலும் ஒன்றாகிவிடாது. குழந்தைகள் மட்டுமே தவறு செய்வார்கள். அந்தச் செயலை பெரியவர்கள் செய்தால் அது குற்றம். எஸ்.வி.சேகர், பெண்களுக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்து, வேலைக்குச் செல்லும் பெண்கள் மீது சமூகத்தில் ஒரு சந்தேகப் பார்வையை ஏற்படுத்தும். எஸ்.வி.சேகரின் கருத்து, பெண்களின் எதிர்காலத்தை அழித்துவிடும். எனவே, எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. அவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன். சாதாரண மனிதருக்கு எதிரான வழக்கை போலீஸார் எப்படி விசாரிப்பார்களோ, அதுபோல இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்து தள்ளுபடி செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றம், முன் ஜாமீன் தர மறுத்துவிட்டதால், டெல்லி உச்ச நீதிமன்றத்தை நாடினார் எஸ்.வி.சேகர். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஜூன் 1-ம் தேதிவரை அவரைக் கைது செய்ய தடை விதித்திருந்தது. இந்நிலையில், இன்று அவரது மனு விசாரணைக்கு வந்தது. சேகருக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், விசாரணை நீதிமன்றமான அங்கு, எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, அதன் பிறகே மேல் நடவடிக்கை என்ன? என்பதை முடிவெடுக்கலாம் என்று எஸ்.வி.சேகர் தரப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் ஆஜரானார். இதனிடையே, நெல்லை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது வரும் ஜூலை 12-ம் தேதி ஆஜராகாவிட்டால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என எஸ்.வி.சேகரை நீதிபதி எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages