நீட் எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்னதாக, இன்று பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை இன்று காலை அறிவித்தது
இதனிடையே நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. மனுவை அவசர வழக்காக விசாரிக்க இருந்த நிலையில், பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுவதாக இருந்த நீட் தேர்வு முடிவுகள், நன்பகல் 12.30 மணிக்கே வெளியிடப்பட்டது. நீட் தேர்வின் போது அலைக்கழிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வுகளுக்கான தேதியையும் இந்திய மருத்துவ கழகம் வெளியிட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு 12 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடை பெறுவதாகவும், 2 ஆம் கட்ட கலந்தாய்வு ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதிவரை நடைபெறுவதாகவும் அறிவித்துள்ளது. மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 25 ஆம் தேதிலியிருந்து 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீட்தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சங்கல்ப் அமைப்பின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment