பா.ம.க 30ஆம் ஆண்டை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றி விழா நடத்திக் கொண்டாடுங்கள்! -பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு - Agnipuratchi

பா.ம.க 30ஆம் ஆண்டை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றி விழா நடத்திக் கொண்டாடுங்கள்! -பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

Share This

பாட்டாளி சொந்தங்களே....!

பாட்டாளி மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப் பட்ட பாட்டாளி மக்கள் கட்சி வரும் 16&ஆம் தேதி 29 ஆண்டுகளை நிறைவு செய்து 30&ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஐம்பதாண்டுகளையும், நூற்றாண்டையும் கடந்த அரசியல் இயக்கங்களை விட, மக்களுக்கு அதிக சேவை செய்தது பாட்டாளி மக்கள் கட்சி என்பது தான் நமக்கு பெருமையாகும்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள், ஒரு கட்சியில் நிலவிய அதிகாரப் போட்டி காரணமாக பிரிந்து வந்து தொடங்கப்பட்டவையாக இருக்கும். வேறு சில கட்சிகள் எந்த கொள்கையும் இல்லாமல் திரையுலகில் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக தொடங்கப்பட்டவையாக இருக்கும். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், உழவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்காகவும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வளர்ச்சிக்கு தேவையான துறைகளில் புரட்சி செய்வதற்காகவும் தொடங்கப்பட்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். இது பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

கொள்கைகளும், நோக்கங்களும், செயல்திட்டங்களும் செம்மையாக இருப்பதால் தான், கடந்த 30 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பல கட்சிகள் இப்போது அடையாளம் இல்லாமல் போய்விட்ட நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து வருகிறது. சென்னைக் கடற்கரை சீரணி அரங்கில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டத்  தொண்டர்கள் கூடியிருந்த வரலாற்று நிகழ்வில் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டு அரசியல் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களுக்கு சேவை செய்வது தான் அரசியல் கட்சிகளின் நோக்கம்  என்றாலும், ஓர் கட்சி எத்தனை முறை ஆட்சி செய்தது என்பதை விட, மக்கள் நலனுக்காக எத்தனைத் திட்டங்களைச் செயல்படுத்தக் காரணமாக விளங்கியது என்பது தான் மிகவும் முக்கியம் ஆகும். அந்த வகையில் பார்த்தால் கடந்த 29 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைக்காக பாட்டாளி மக்கள் கட்சி எத்தனையோ போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் அனைத்து  சீரழிவுகளுக்கும் காரணமான மதுவுக்கு எதிராக போராடி வரும் பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளைக் குவித்திருக்கிறது. தமிழகத்திலிருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை இப்போது பாதிக்கும் கீழாக குறைந்ததற்கு பா.ம.க மட்டுமே  காரணமாகும்.

தமிழக அரசியல் இப்போது கடினமான காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டியது ஆளுங்கட்சியின் பணியாகும். அதில் ஏதேனும் தவறு நடந்தால் அதை அம்பலப்படுத்தி, ஆட்சியாளர்களின் தவறுகளை திருத்த வேண்டியது எதிர்க்கட்சியின் பணியாகும். ஆனால், தமிழக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களின் கடமைகளை செய்யவில்லை என்பது தான் உண்மை. அதனால் தான் மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க பா.ம.க.வைத் தேடி வருகின்றனர். பாட்டாளிகளின் பணிக்கு இதை விட சிறந்த அங்கீகாரம் எதுவும் தேவையில்லை.

தமிழகத்திற்கு சிறிதும் தேவையில்லாத 8 வழி சாலைத் திட்டத்தை, பெரு நிறுவனத்தின் நலனுக்காக  பினாமி எடப்பாடி அரசு  மக்கள் மீது திணிக்கிறது. இதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பறிக்கிறது. இதற்காக குரல் கொடுத்து உழவர்களின் வாழ்வாதாரங்களை காப்பாற்ற வேண்டிய எதிர்க்கட்சி, எதற்கோ அஞ்சி ஆளுங்கட்சியை எதிர்த்துப் போராடத் தயங்குகிறது. பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். அவர்களுக்காக இந்த விவகாரத்தில் பா.ம.க. களமிறங்கி மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. அடுத்தக்கட்டமாக மக்கள் போராட்டங்களை நடத்த தீர்மானித்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பு பாட்டாளி மக்கள் கட்சி அளித்து வந்த தொடர் அழுத்தம் காரணமாக அமைக்கப்படவிருக்கிறது. பாடத்திட்ட மாற்றம்,  தேர்வு சீர்திருத்தம் ஆகியவற்றுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தான் காரணமாகும். பா.ம.க. ஆட்சியில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்... ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனைகள் தான் திட்டங்களாகவும், சட்டங்களாகவும் மாறுகின்றன என்பது உண்மை. இதை எதிர்க்கட்சிகளால் கூட மறுக்க முடியாது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு,  மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து, சமச்சீர்க் கல்வித் திட்டம்,  நதிநீர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கானப் போராட்டங்கள் என அதிகாரத்தில் இல்லாமலேயே பா.ம.க. படைத்த சாதனைகளின் பட்டியல் நீளமானது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து அறிமுகப்படுத்திய தேசிய ஊரக சுகாதார இயக்கம், 108 அவசர ஊர்திச் சேவை, பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, குட்கா உள்ளிட்ட போதைப்பாக்குகளுக்குத் தடை, தமிழகத்திற்கு கொண்டு வந்த சுமார் ரூ.20,000 கோடி மதிப்புள்ள மருத்துவத் திட்டங்கள் உள்ளிட்ட சாதனைகளை சொல்லி மாளாது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக இருந்த போது தான் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன. இப்படியாக பா.ம.க.வின் மணிமகுடத்தை ஏராளமான சாதனை வைரங்கள் அலங்கரிக்கின்றன.

எனினும் இவை மட்டுமே போதுமானவையல்ல... இவை அனைத்தும் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே சாத்தியமாயின. இவற்றை மட்டுமே நினைத்து நாம் திருப்தியடைந்துவிட முடியாது. மக்களுக்கு நன்மை பயக்கும் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த முதல் தேவை ஆட்சி அதிகாரம் தான். அந்த இலக்கை நோக்கி நாம் வேகமாகவும், விவேகமாகவும் பயணிக்க வேண்டும். அதன் தொடக்கமாக பாமகவின் 30-ஆம் ஆண்டு விழாவை இதுவரையில்லாத வகையில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.


கட்சியின் ஆண்டு விழாவையொட்டி அனைத்து கிராமங்களிலும், நகரம் மற்றும் பேரூர்களில் அனைத்து வட்டங்களிலும் கட்சிக் கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் தலா ஓர் இடத்திலாவது பொதுக்கூட்டம் நடத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 30-ஆம் ஆண்டு விழா குறித்து நான் கடிதம் எழுதுவதற்கு முன்பாகவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பாட்டாளி சொந்தங்கள் கொண்டாட்டங்களைத் தொடங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கொண்டாட்டங்கள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்; மக்களின் உள்ளங்களை வென்றெடுக்க வேண்டும்; பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுத் தளத்தை விரிவுப் படுத்த வேண்டும். மொத்தத்தில்  30&ஆவது ஆண்டின் தொடக்கம் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி மக்களுக்கு நன்மைகளை செய்வதற்கான புனிதப் பயணத்தின் தொடக்கமாக அமைய வேண்டும். இப்பயணத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும்,  இலக்கை எட்ட கடுமையாக உழைக்கவும் பாட்டாளி  மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடக்க நாளில் உறுதியேற்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages