தினத்தந்தி நிருபருக்ககு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸசு அளித்தார் பேட்டி.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- வட மாவட்டங்களில் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்கும் பா.ம.க., தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்கவில்லையே? இந்த மாவட்டங்களில் பா.ம.க.வை வலுப்படுத்த என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறீர்கள்?
பதில்:- பா.ம.க. வட மாவட்டங்களைப் போலவே மேற்கு மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் வலிமையாக உள்ளது. தென் மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு வலிமை இல்லை என்பது ஒரு காலத்தில் உண்மைதான். ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் பா.ம.க. கணிசமான வாக்குகளை வாங்கியிருக்கிறது. பா.ம.க. நிறுவனராகிய எனக்கு அடுத்தபடியாக அதிகாரம் பெற்ற 3 பதவிகள் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள்தான். இவற்றில் பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய இரு பதவிகளிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பா.ம.க.வுக்கு தென் மாவட்டங்களிலும் செல்வாக்கு உள்ளது என்பதை வரும் தேர்தல்கள் நிரூபிக்கும்.
கேள்வி:- பா.ம.க.வின் முக்கிய குறிக்கோள் என்ன?
பதில்:- சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தான் பா.ம.க.வின் கொள்கைகள். இந்த நான்கு தத்துவங்களையும் அனைத்து நிலைகளிலும் உறுதி செய்வது தான் பா.ம.க.வின் குறிக்கோள் ஆகும். உதாரணமாக சமூக நீதி என்றால் அனைத்து சமுதாயங்களுக்கும் அவற்றின் மக்கள் தொகை அடிப்படையில் தனி இட ஒதுக்கீடு. சமத்துவம் என்றால் அனைவருக்கும், அனைத்தும் கிடைக்கச் செய்தல். அம்பானியின் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதே தரத்திலான கல்வி சாதாரண ஏழைக் குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். அதற்காகத் தான் சமச்சீர் கல்வியை கொண்டுவர வேண்டும் என்று போராடினேன்.
ஆனால், சமரசக்கல்வி தான் முந்தைய ஆட்சிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பா.ம.க.வின் தொடர் வலியுறுத்தலால் இப்போது பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், இது போதாது. அனைவருக்கும் தரமானக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும். அதேபோல், ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவம் சாதாரண குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக பதவியேற்ற போது இப்படி ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்று நான் அவருக்கு அறிவுறுத்தினேன்.
அதற்காகத் தான் அவர் தேசிய ஊரக சுகாதார இயக்கம் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தினார். ஆனாலும், இப்போது நிலைமை மாறிவிட்டது. அறுவை சிகிச்சை போன்ற பெரிய அளவிலான மருத்துவ சேவைகள் இலவசமாக கிடைக்காததால், கடன் வாங்கி செலவு செய்தவர்களில் 5.5 கோடி பேர் கடந்த ஆண்டில் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுதல் ஆகியவையே பா.ம.க.வின் குறிக்கோள்.
கேள்வி:- பா.ம.க. தொடங்கி 30 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 30 ஆண்டுகளில் மக்களுக்காக பா.ம.க. ஆற்றிய பணிகள் என்ன?
பதில்:- தமிழ்நாட்டை கடந்த 51 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் இரு திராவிடக் கட்சிகளும் தமிழக மக்களுக்கு ஆற்றிய பணிகளை விட, அதிக பணிகளை ஆட்சிக்கு வராமலேயே பா.ம.க. செய்துள்ளது. பா.ம.க.வின் முதன்மைக்கொள்கை சமூகநீதி என்று கூறினேன். அதை உறுதி செய்யும் வகையில் மொத்தம் 3 வகையான இட ஒதுக்கீடுகளை பா.ம.க. பெற்றுக்கொடுத்துள்ளது. தமிழகத்தில் 21 உயிர்களை தியாகம் செய்து 108 சமுதாயங்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு நீண்ட நாட்களாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், 2006-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கூட்டத்தில் சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்களிடம் நான் தான் ஒரு நாள் முழுவதும் சண்டையிட்டு அதை நடைமுறைப்படுத்த வைத்தேன். மத்திய அரசின் மருத்துவக்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு முறையே 15 சதவீதம், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கியது அன்புமணி ராமதாஸ் தான்.
தமிழ்நாட்டில் ஊரக மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர தடையாக இருந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்ய காரணமாக இருந்தது, சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்தது, மது அரக்கனுக்கு எதிராக 34 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி, மதுவுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது, மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 16 மணியிலிருந்து 12 மணி நேரமாக குறைக்க வைத்தது, உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து முதல்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த 604 மதுக்கடைகளையும், இரண்டாம் கட்டமாக 3,321 மதுக்கடைகளையும் மூட வைத்தது ஆகியவை குறிப்பிடத்தக்க பணிகளில் சில.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் மூலம் ரூ.25,000 கோடி மதிப்புள்ள சுகாதாரத் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தது, சேலத்தில் உயர்சிறப்பு மருத்துவமனை கொண்டு வந்தது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டியது, தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மருந்து ஆய்வகம் அமைத்தது, சென்னையில் ரூ.100 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதிஉயர் சிறப்பு மையம் அமைத்தது, சென்னையில் ரூ.250 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம் மற்றும் 112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வு மையம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கியது, செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா, காஞ்சீபுரத்தில் ரூ.45 கோடியில் மண்டல புற்றுநோய் மையம், வேலூர் வாலாஜா, சேலம் ஓமலூர், மதுரை மேலூர், கடலூர், தாம்பரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 இடங்களில் சாலை விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விபத்துக்காய சிகிச்சை மையங்கள் ஆகியவற்றை அமைத்ததும் பா.ம.க.வின் சாதனைகள் தான்.
பா.ம.க.வை சேர்ந்தவர்கள் மத்திய ரெயில்வே இணை மந்திரிகளாக இருந்த காலத்தில் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன. சேலம் ரெயில்வே கோட்டம் அமைக்கப்பட்டதும், தமிழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் ரெயில்வே திட்டங்கள் கொண்டுவரப்பட்டதும் பா.ம.க.வின் சாதனைகளே. அறிவுசார் துறையில் இதுவரை 27 நிழல் நிதிநிலை அறிக்கை ஆவணங்கள் உள்பட மொத்தம் 38 ஆவணங்களை பா.ம.க. வெளியிட்டிருக்கிறது. மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதை எதிர்த்து பா.ம.க. போராட்டம் நடத்தினால் தீர்வு கிடைக்கும் என்று மக்கள் நம்புவதே எங்களுக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறோம்.
கேள்வி:- பா.ம.க. 30-வது ஆண்டு விழா உங்களின் 80-வது பிறந்தநாள் ஆண்டு. இதையொட்டி தமிழக மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
பதில்:- பா.ம.க. கடந்த 30 ஆண்டுகளாகவே தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறது. மக்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. இதற்காக தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து அரசியல், சமூக மாற்றங்களிலும் பா.ம.க.வின் பங்களிப்பு உள்ளது. மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளில் பா.ம.க. போராடி வெற்றி பெற்று கொடுத்திருக்கிறது.
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் எந்தப் பிரச்சினைக்காகவும் யாரும் போராட வேண்டியிருக்காது. எனவே, ஒருமுறை எங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திப் பாருங்கள். அதன்பிறகு தமிழகம் ஒளிமயமாக இருக்கும் என்பது தான் பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி மக்களுக்கு நான் விடுக்கும் செய்தி. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment