ஊட்டியை புரட்டி போட்டு வரும் அதி கனமழை! - Agnipuratchi

ஊட்டியை புரட்டி போட்டு வரும் அதி கனமழை!

Share This

ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக, பல இடங்களில் மரம் விழுந்து, வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. நீலகிரி மாவட்டத்தில், சில நாட்களாக, பலத்த காற்றுடன், மழை பெய்து வருகிறது. இரு நாட்களாக, மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது.பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் விழுந்ததால், பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

5 பேர் தப்பினர்!

நேற்று முன்தினம் நள்ளிரவில், பலத்த மழையுடன், காற்று வீசியது. ஊட்டி ராஜ்பவன் போலீஸ் குடியிருப்பின் மீது, பெரிய மரம் விழுந்ததில், வீட்டின் சுவர் இடிந்தது.வீட்டில் இருந்த ஐந்து பேர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும், உடமைகள் சேதமடைந்தன.ஊட்டி தாஸ்பிரகாஷ் பகுதியில், ஒரு வீட்டின் மீது மரம் விழுந்து, கூரை சேதம் அடைந்தது.

மேரீஸ் ஹில் பகுதியில் மரம் விழுந்ததில், தனியார் பள்ளி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, நான்கு கார்கள், கற்கள் மற்றும் மண் விழுந்து சேதமடைந்தன.பாதிக்கப்பட்ட பகுதிகளை, வருவாய்த் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். தீயணைப்பு துறையினர், மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டம் முழுவதும், ஆறு பேரிடர் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள், 24 மணி நேரமும் நடக்கிறது.பேரிடர் பாதிப்புகள் இருந்தால், நிவாரண மையங்களுக்கு, மக்கள் எந்த நேரமும் வரலாம்' என்றனர்.

மூணாறில் நிலச்சரிவு:

கேரளா, மூணாறில், தென்மேற்கு பருவமழையால், ஜூலை, 8 முதல் கனமழை பெய்து வருகிறது. 15ம் தேதி அதிகபட்சமாக, 24 செ.மீ., கொட்டித் தீர்த்தது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 12.30 செ.மீ., மழை பதிவானது. மழை சற்று குறைந்ததால், தண்ணீர் சூழ்ந்த பகுதிகள் வடிய துவங்கின.

மூணாறில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின், புற வழிச்சாலையில், நேற்று முன்தினம் மிகப் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதை அகற்றும் பணி, நேற்று நடந்த போது, மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவு தொடர்வதால், விபத்து அபாயம் உள்ளது.மூணாறு அருகே, கன்னிமலை எஸ்டேட், டாப் டிவிஷனில் தேயிலைத் தோட்டத்திற்குள் மண் சரிந்து, தேயிலைச் செடிகள் நாசமாகின. கன மழை, மண் சரிவால் மக்கள்அச்சத்தில் உள்ளனர்.

சுற்றுலா மையங்கள் வெறிச் :

நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில் மழை குறைந்தாலும், மூன்று நாட்களாக, பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், சிம்ஸ் பூங்கா மற்றும் வெலிங்டன், எம்.ஆர்.சி., படகு இல்லங்களில், அடிக்கடி படகு சவாரி ரத்து செய்யப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.இதேபோல, 'லேம்ஸ் ராக், டால்பின் நோஸ்' போன்ற காட்சி முனைகளில், கடும் மேக மூட்டமுடன் மழையும் தொடர்வதால், சுற்றுலா பயணியர், அங்கு சென்று, இயற்கை காட்சிகளை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.'நீலகிரியில், சில நாட்கள் மழை தொடரும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், சுற்றுலா வியாபாரத்தை நம்பி உள்ள, உள்ளூர்மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages