பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டம் நடுணரசின் திட்டம் என்றும், அத்திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தித் தருவது மட்டும் தான் மாநில அரசின் பணி என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், இந்த திட்டத்தை நடுவண் அரசிடம் போராடி பெற்றிருக்கின்றோம்; எத்தனை எதிர்ப்பு வந்தாலும் இந் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று கூறியிருந்தார். ஆனால், இத்திட்டத்திற்காக நிலம் எடுத்துத் தருவதை தவிர மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று இப்போது கூறுகிறார். மக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்திருந்தால் வரவேற்கத்தக்கதே.
நடுவண் அரசின் திட்டம் தமிழகத்திற்கு வரும் போது, அதை மக்களின் நிலையிலிருந்துதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணுகியிருக்க வேண்டும். இச்சாலைக்காக 7 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்படவிருப்பதால் 7 ஆயிரம் 500 உழவர்கள் நிலங்களை இழப்பர்; 15 ஆயிரத்துக்கும்¢ மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்பன உள்ளிட்ட உண்மைகளை தமிழக அரசு கருத்தில் கொண்டிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறதா என்பதில்¢ எடப்பாடி பழனிச்சாமிக்கு குழப்பம் இருந்தால், அதுகுறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தியிருக்கலாம். மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அம்பானி குழுமத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு எழுந்த போது பொதுவாக்கெடுப்பு நடத்தி அத்திட்டத்தை மராட்டிய மாநில அரசு ரத்து செய்தது. சுற்றுசூழலுக்கும், விவசாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கோக் ஆலைக்கு பிளாச்சிமடா மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஆலையை மூட கேரள அரசு தீர்மானித்தது. ஆனால், பசுமைச்சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை நடுவண் அரசின் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடும் முகவராகத் தான் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டாரே தவிர, மக்கள் பிரதிநிதியாக செயல்படவில்லை.
சென்னையிலிருந்து சேலம் செல்லும் இரு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும் தொலைநோக்குப் பார்வையுடன் புதிய சாலை அமைக்கப்படுவதாகவும் முதலமைச்சர் கூறுகிறார். அவரது கூற்றுப்படியே பார்த்தாலும் இரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் சராசரியாக நாள்தோறும் 35 ஆயிரத்து 205 ஊர்திகள் மட்டுமே செல்கின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையப் புள்ளிவிவரப்படி 29 ஆயிரத்து 502 பயணியர் ஊர்திகள் மட்டுமே செல்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகும் கூட இது 44 ஆயிரத்து 794 என்ற அளவில் தான் இருக்கும். அவ்வாறு இருக்கும் போது இப்போது புதிய சாலை அமைக்க வேண்டும் என்பது தேவையற்ற, பணத்தை வீணடிக்கும் செயல். புதிய சாலை அமைக்கப்படுவதற்கான நோக்கங்களில் நெடுஞ்சாலை விபத்துகளை குறைப்பதும் ஒன்று என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது நகைச்சுவை. விபத்துகளை தடுக்க வேண்டும் என்பதற்காக பாமக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் சாலையோரங்களில் இருந்த 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளை மூடியது. ஆனால், அடுத்த சில வாரங்களில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சாலைகளில் அவசரமாக மதுக்கடைகளை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விபத்துகளை குறைப்பது குறித்தெல்லாம் பேசுவது கேலிக்கூத்தின் உச்சம். ஆட்சி அதிகாரமும், காவல்துறையும் கைகளில் இருக்கும் அகந்தையில் மக்களை அடக்கி, இந்த சாலைத் திட்டத்தை செயல்படுத்தி விடலாம் என எடப்பாடி நினைத்தால் தோல்விதான் கிடைக்கும். மேற்கு வங்கத்தில் சிங்கூர் மற்றும் நந்திகிராமத்தில் அடக்குமுறை மூலம் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கத் துடித்ததால் ஆட்சிக் கட்டிலில் இருந்து இடதுசாரிகள் தூக்கி வீசப்பட்டனர். மக்கள் நலனில் பழனிச்சாமி அரசுக்கு அக்கறை இருந்தால் 8 வழிச் சாலைத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று நடுவண் அரசிடம தெரிவித்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment