திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் பகுதியில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில், வனத்துறையின் ஒரு அங்கமான தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் சார்பில் அரசுக்கு வருவாய் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் இயற்கை காடுகளாக இருந்த வனப்பகுதிகளை காப்பு காடுகளாக மாற்றி அதில் தைல மரங்களை நடவு செய்து வருகின்றனர். இந்த தைல மரங்கள் அனைத்தும் வளர்ந்தவுடன் அதனை அறுவடை செய்து அந்த தொகையினை அரசு கஜானாவிற்கு சேர்க்கின்றனர். வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிரான தைல மரங்களை நடவு செய்யும் போதே வனப்பகுதியில் எந்த ஒரு தாவரங்களும் புல்பூண்டுகளும் வளர்வதில்லை.
மாறாக தைலமரங்கள் அடங்கிய காப்புக்காட்டில் பூமியின் ஈரப்பதம் உறிஞ்சப்படுவதுடன், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி வருகிறது. இதனால் வனப்பகுதியில் ஏற்கனவே இருந்த மான், மயில், முயல், குரங்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவு, தண்ணீர் ஆகியவை வனப்பகுதியில் கிடைக்காமல் அவை ஊருக்குள்ளும், நிலப்பகுதிகளுக்கும் வருகிறது. இவ்வாறு நிலப்பகுதிகளுக்கு வரும் போது வனப்பகுதியை யொட்டியுள்ள நிலங்களில் உள்ள நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களின் ஓரங்களில் மின்வேலி அமைப்பதினால் அவை மின்வேலியில் சிக்கி உயிரிழக்கின்ற சம்பவமும், மான், முயல், காட்டுப்பன்றிகளின் இறைச்சிக்காக வேட்டையாடும் கும்பல்களிடம் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதோடு தண்ணீர் தேடி வரும் சமயங்களில் அவை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழக்கின்றன. ஆனால் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடினாலோ அல்லது திருடினாலோ இயற்கையாக இறந்தாலோ வனத்துறையினர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கின்றனர். அவை உயிருடன் வாழ்வதற்கு போதிய தண்ணீர் வசதியோ அல்லது உணவுக்கான தாவரங்களையோ ஏற்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மொத்தமுள்ள காப்பு காட்டில் 10 சதவிகிதமாவது இயற்கை காடுகளை அமைத்தால் வனப்பகுதியில் உள்ள வன உயிரினங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் போதிய அளவு கிடைக்கும். வனப்பகுதியின் ஒட்டு மொத்த நிலப்பரப்பையும் செயற்கை காடுகளாகவே மாற்றி விட்டதினால் வனவிலங்குகள் அழிந்து கொண்டே இருக்கின்றன. வன விலங்குகள், விவசாயிகள் மீதும் அக்கறை கொண்டு வனப்பகுதியை இயற்கை காடுகளாக மாற்றவும், அங்குள்ள குளங்களை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் வனத்தோட்ட கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment