பிரபஞ்சத்தின் மிகப்பெரிய புதிராக உள்ள சூரியனை 60 லட்சம் கிலோ மீட்டர் என்கிற நெருங்கிய தொலைவில் இருந்து ஆய்வு செய்யும் பார்கர் விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. சூரியனின் மேற்பரப்பைக் காட்டிலும் கொரோனா எனப்படும் சுற்று வட்டத்தில் வெப்பம் அதிகமாக இருக்கக் காரணம் என்ன? சூரியப் புயல் எவ்வாறு தோன்றுகிறது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தேட முற்படுகிறது நாசாவின் பார்கர் விண்கலம். ஃபுளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளி தளத்தில் இருந்து ஞாயிறன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணி அளவில் இந்த விண்கலத்தை சுமந்து கொண்டு டெல்டா 4 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
685 கிலோ எடை கொண்ட பார்கர் விண்கலம் நொடிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அதாவது மணிக்கு 6 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மீட்டர் வேகம். பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் பார்கர் தயாரிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக உயிருடன் உள்ள ஒரு ஆராய்ச்சியாளரின் பெயரை நாசா இதற்கு சூட்டியுள்ளது. 60 லட்சம் கிலோ மீட்டர் என்கிற நெருங்கிய தொலைவில் சூரியனை பார்கர் அணுகவுள்ளது.
இதற்கு முன் எந்த ஒரு விண்கலமும் இவ்வளவு அருகில் சூரியனை நெருங்கியதில்லை. 1976ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஹீலியஸ் 2 விண்கலம் கூட 4 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி தான் சூரியனை ஆய்வு செய்தது. 1,500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே கொரொனாவில் இருந்தபடி சூரியனை ஆராய்ச்சி செய்ய எந்த ஒரு சிக்கலும் எழாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஏழு ஆண்டுகளில் 24 முறை சூரியனை பார்கர் சுற்றி வரவுள்ளது.
No comments:
Post a Comment