நாட்டில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலை மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 111 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் புனே முதலிடத்தைப் பிடித்துள்ளது. நவி மும்பை 2-வது இடத்திலும், பெருநகர் மும்பை 3-வது இடத்திலும் உள்ளன.
சமூக, பொருளாதார நிலை, உள்கட்டமைப்பு வசதிகள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலின் முதல் 10 இடங்களில் மகாராஷ்டிராவிலுள்ள 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மிக முக்கிய நகரங்கள் உள்ளடங்கிய உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு முதல் 10 இடங்களில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
அதேசமயம், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த தலா ஒரு நகரம், பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன. பட்டியலில் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் 7-வது இடத்திலும், மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபால் 10-வது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் திருச்சி 12-வது இடத்திலும், சென்னை 14-வது இடத்திலும் உள்ளன. பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசி 33-வது இடத்தில் உள்ளது. குஜராத்திலுள்ள ஆமதாபாத் 23-வது இடத்திலும், ஐதராபாத் 27-வது இடத்திலும் உள்ளன.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஜம்மு 95-வது இடத்திலும், ஸ்ரீநகர் 100-வது இடத்திலும் உள்ளன. பட்டியலின் கடைசி 10 இடங்களில் பிகார் தலைநகர் பாட்னா, நாகாலாந்து தலைநகர் கொஹிமா, அருணாசலப் பிரதேச மாநில தலைநகர் இடாநகர் உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment