ஆசிரியர் தினம் ஆளுநர், முதல்வர், ஸ்டாலின் . மருத்துவர் இராமதாசு வாழ்த்து - Agnipuratchi

ஆசிரியர் தினம் ஆளுநர், முதல்வர், ஸ்டாலின் . மருத்துவர் இராமதாசு வாழ்த்து

Share This

ஆசிரியர் தினம் புதன்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவர் இராமதாசு  உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் புரோஹித்:

 முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதியன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சிறந்த, மிகப் பெரிய ஆண் மற்றும் பெண்ணின் குணாதிசயங்கள், தொலைநோக்குப் பார்வை போன்றவை அவர்களின் ஆசிரியர்கள் அளிக்கும் கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல்களில் இருந்தே கிடைக்கிறது.

முதல்வர் பழனிசாமி: மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் விதைத்து, அவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் மகத்தான பணியை நல்லாசிரியர்கள் ஆற்றி வருகிறார்கள். அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மு.க.ஸ்டாலின் (திமுக): கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி, நாட்டின் முன்னேற்றத்துக்கு வித்திடும் அறிவுசார்ந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு திமுக சார்பில் நல் வாழ்த்துகள். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வியை வழங்கிட தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அறிவு மணிகளைக் கோர்த்தெடுத்து வருங்கால தலைமுறையை உருவாக்கும் மாமணிகளாகத் திகழும் தியாக உணர்வுமிக்க ஆசிரியர்களை இந்த நாடே ஓரணியில் நின்று மனமார வாழ்த்துகிறது. ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக திமுக என்றும் துணை நிற்கும்.

மாணவர்களை கரை சேர்க்கும் படகாகத் திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.  ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும்,  தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும்  உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சமூகக் கடமை உள்ளது. தமிழக பாடத்திட்டம் சிறப்பானதாக மாற்றப்பட்டுள்ள போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் பல பிரச்சினைகள் உள்ளன. 11 வகுப்புக்கான காலாண்டுத் தேர்வு அடுத்தவாரம் நடைபெறவுள்ள நிலையில் 11-ஆம் வகுப்புக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கான தமிழ் தவிர்த்த பிற  மொழிப்பாட நூல்கள் இதுவரை வினியோகிக்கப்படவில்லை. புதியப் பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு இன்னும் முழுமையான பயிற்சி அளிக்கப்படவில்லை. இவை உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தை தாங்க  முடியாததால்  11-ஆம் வகுப்பு  மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சமூகத்திற்கு ஏற்றம் தரும் ஏணியாக திகழும் ஆசிரியர்களின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஏழாவது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்த பிறகும் ஊதிய முரண்பாடுகள்  களையப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட ஆசிரியர்களின் நலனுக்கான வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் காற்றில் பறக்கவிட்டு விட்டனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடிய ஆசிரியர்கள் மீது பொய் வழக்குகளும், கைது நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து  விடப்பட்டன.

இந்த நிலை மாற்றப்பட்டு தமிழகத்தில் தரமான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படுவதும், ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்குவதுடன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப் படுவதும் அவசியம் ஆகும். இவற்றை செய்து முடிப்பதுடன்,ஆசிரியர்களின் உதவியுடன் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை வழங்கவும் இந்த நல்ல நாளில் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages