திருவாசகத்துக்கு உருகாதோர்
ஒரு வாசகத்துக்கும் உருகார்’’
என்ற மூதுரை வாசகங்களே நாயன்மார்கள் தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் செய்த தொண்டுகளை உலகுக்கு சொல்லும்.
தமிழ் வளர்ச்சிக்கு பக்தி இலக்கியங்களின் மூலம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் செய்த பணி அளப்பரியது. ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர். நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். இதிலும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்). அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. அவரது மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடினார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அவர்களை பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா சடையனார், அம்மா இசைஞானியார் ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.
ஆழ்வார்கள் பெருமாளை வணங்குபவர்கள். நாயன்மார்கள் சிவ பெருமானை வழிபடுபவர்கள். ஆழ்வார்களுக்கும், நாயன்மார்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்பது ஆழ்வார்கள் அனைவருமே பெருமாளைப் போற்றும் பாசுரங்களை இயற்றி தமிழுக்கு தொண்டு செய்துள்ளனர். ஆனால், ஆழ்வார்களைப் போல நாயன்மார்கள் அனைவரும் பாடல்களைப் பாடியதில்லை. நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மீதமுள்ள அனைவரும் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே.
பன்னிரு திருமுறை
நாயன்மார்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சிவனைப் போற்றி பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்றழைக்கப்படுகின்றன. 1, 2, 3ம் திருமுறைகள் திருஞானசம்பந்தரால் (சம்பந்தர்) பாடப்பட்டவை ஆகும். இதில் மொத்தம் 4146 பாடல்கள் உள்ளது. முதல் திருமுறையில் 1469 பாடல்களும், இரண்டாம் திருமுறையில் 1331 பாடல்களும், மூன்றாம் திருமுறையில் 1346 பாடல்களும் அடங்கியுள்ளன. 4, 5, 6ம் திருமுறைகள் திருநாவுக்கரசரால் (அப்பர்)பாடப்பட்டவை ஆகும். இதில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளன. நான்காம் திருமுறையில் 1069 பாடல்களும், ஐந்தாம் திருமுறையில் 1015 பாடல்களும், ஆறாம் திருமுறையில் 980 பாடல்களும் அடங்கியுள்ளன. 7ம் திருமுறை சுந்தரரால் பாடப்பட்டவை ஆகும். இதில் மொத்தம் 1026 பாடல்கள் உள்ளன. இந்த 7 திருமுறைகளும் சேர்ந்தது தான் தேவாரம் ஆகும்.
மாணிக்கவாசகரால் பாடப்பட்ட எட்டாவது திருமுறை திருவாசகம், திருக்கோவையார் ஆகிய இரு பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. திருவாசகம் 656 பாடல்களும், திருக்கோவையார் 400 பாடல்களுமாக எட்டாவது திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளன. 9ம் திருமுறையில், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருளஷாத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது.
திருமூலரின் திருமந்திரம்
பத்தாம் திருமுறை திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம் ஆகும். இதில் மொத்தம் 3047 பாடல்கள் உள்ளது. 11ம் திருமுறையில் திருவாலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது. 12ம் திருமுறை சேக்கிழாரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணம் ஆகும். இதில் 4286 பாடல்கள் உள்ளது. பன்னிரு திருமுறைகளிலும் சேர்த்து 18,820 பாடல்கள் உள்ளன.
பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்களில் மாணிக்கவாசகர், பட்டினத்தார், சேக்கிழார் உள்ளிட்ட பலர் நாயன்மார்கள் அல்லர். ஆனால், மாணிக்கவாசகர் தேவாரத்தைப் பாடிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஆகியோருடன் சேர்த்து சைவ சமயக் குரவர்கள் என்றழைக்கப்படுகிறார்.
ஆழ்வார்களின் நாலாயிர திவ்விய பிரபந்தத்தைப் போலவே நாயன்மார்களின் பன்னிரு திருமுறையும் இசையுடன் இணைந்த பாடல்கள் ஆகும். பன்னிரு திருமுறைகளில் உள்ள 18.820 பாடல்களுமே இசைப் பாடல்கள் ஆகும். அவை அனைத்துமே சிவனைப் போற்றிப் பாடப்பட்டவை என்றாலும் கூட , அவற்றில் பக்திக்கு இணையாக இலக்கிய செழுமையும் நிறைந்து கிடப்பது தான் அவற்றின் சிறப்பு ஆகும்.
தேவாரம் முதல்பாடல்
உதாரணமாக பன்னிரு திருமுறையின் முதல் திருமுறையான தேவாரத்தின் தொடக்கப்பாடலைப் பார்ப்போம்.
‘‘தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே’’
‘‘தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!’’ என்பது தான் இந்தப் பாடலின் பொருள் ஆகும்.
சிவபெருமான் குறித்து 10 பக்கங்களில் எழுத வேண்டிய பெருமைகளை நான்கு வரிகளில் சிறப்பாக வர்ணித்திருக்கிறார் சம்பந்தர். சிவபெருமான் தோடு அணிந்திருப்பான், தமக்கு இணையாக உமையாளை இடப்பக்கம் நிறுத்தி சமத்துவத்தை போற்றியவன், தூய்மைக்கு அடையாளமாக வெண்மையான பிறையை தலையில் சூடி, உடல் முழுவதும் திருநீரைப் பூசிக் கொண்டிருப்பவன் என சிவனை சம்பந்தர் வர்ணித்திருக்கிறார். இத்துடன் இசையும் சேரும் போது தேவாரத்தைக் கேட்பதை விட சுகமான அனுபவம் எதுவும் இருக்க முடியாது.
திருவாசகத்தின் சிறப்பு
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் வரிகள் இன்னும் சிறப்பானவை. அதன் முதல் செய்யுளே அதன் முழுமையான சிறப்பை விளக்கும். அந்த செய்யுளின் முதல் 10 வரிகளில் உள்ள இலக்கிய வனப்பைப் பாருங்கள்...
‘‘நமசிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க’’
‘‘நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க. கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க. தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க. ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.
என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும். பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும் தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும். கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும். தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்’’என்பது தான் இதன் பொருளாகும்.
கல்லையும் கனியவைக்கும்
திருவாசகம் கல்லையும் கனியவைக்கும் பெருமை கொண்டது ஆகும். தேவாரமும், திருவாசகமும் தமிழை மட்டும் வளர்க்கவில்லை. தமிழ் பண்ணிசையையும் வளர்க்க உதவின என்பது தான் உண்மை ஆகும். இதற்கு என்னால் தொடங்கப்பட்ட பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் பணிகள் தான் ஆதாரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பண்ணிசை விழாவில் இசைக்கப்படும் தேவாரம் மற்றும் திருவாசகப் பாடல்களுக்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் கரவொலியே அப்பாடல்களுக்கு உள்ள வரவேற்பை உணர்த்தும்.
தேவாரப்பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராச இராசசோழன் தொடங்கி பல தமிழரசர்கள் தமிழகத்தின் கோவில்களில் இவற்றை முறைப்படி இசையுடன் பாட ஓதுவார்கள் என்னும் இசைக்கலைஞர்களை நியமித்தனர். இவ்வோதுவார்களின் பணி இன்றும் தமிழகக் கோவில்களில் தொடர்கிறது.
இயல்பாகவே பக்தி இலக்கியங்கள் குறுகிய எல்லைகளைக் கடந்தவவை. அதிலும் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பாடிய பாடல்கள் இசையுடன் கலந்தவை என்பதால் அவை தமிழை தாங்கிச் சென்று உலகம் முழுவதும் பரப்பின. பக்திப் பாடல்கள் மூலம் தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு சென்று வளர்த்ததில் நாயன்மார்களும், சைவ சமயக் குரவர்களுக்கும் ஆற்றிய பணி மகத்தானது.
No comments:
Post a Comment