மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாஜக - அதிமுக இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் முதல்வர் பழனிசாமியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். அதே நேரத்தில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தியதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் வேலுமணி கூறும்போது, ‘‘கூட்டணி குறித்து முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முடிவு செய்வார்கள்’’ என்றார்.
அதிமுகவுடன் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையும் சேர்த்து கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால், தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்களையும் மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்களுடன் விவாதித்திருக்கலாம் என்று தெரிகிறது. இதே வேளையில் முதல்வர் கே.பழனிசாமியை அவரது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் நேற்று சந்தித்துப் பேசினார். இருவரும் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசியுள்ளனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், கூட்டணி குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.
No comments:
Post a Comment