லண்டனில் மகாத்மா காந்தி வட்டமேசை மாநாடு நடத்திய அரங்கில் நடந்த மாநாட்டுக்கு தலைமையேற்ற அன்புமணி இராமதாஸ்! - Agnipuratchi

லண்டனில் மகாத்மா காந்தி வட்டமேசை மாநாடு நடத்திய அரங்கில் நடந்த மாநாட்டுக்கு தலைமையேற்ற அன்புமணி இராமதாஸ்!

Share This

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் அழைப்பை ஏற்று லண்டன் நகரில் பயணம் மேற்கொண்டார். 10.01.2019 அன்று லண்டன் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அங்கு வாழும் தமிழ் வம்சாவளியினருடன் உரையாடினார்.

லண்டன் தமிழ்ச் சங்கம் தான் இங்கிலாந்து நாட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட தமிழ்ச் சங்கம் ஆகும். காந்தியின் அன்பைப் பெற்றவரும், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சருமான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களால் 1936&ஆம் ஆண்டு இந்த தமிழ்ச் சங்கம் தொடங்கி வைக்கப்பட்டது. மகாத்மா காந்தி  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது லண்டன் தமிழ்ச்சங்கத்திற்கு வந்து தமிழர்களுடன் உரையாடினார். அத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க லண்டன் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

லண்டன் வாழ் தமிழர்களிடையே உரையற்றிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக அதிக அளவில் முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்ட  தமிழர்கள், தங்களுக்கு சொல்ல விரும்பும் அறிவுரை என்ன? எதிர்பார்ப்பு என்ன? என்று வினவினார்கள்.

அதற்கு பதிலளித்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ்,‘‘ லண்டன் வாழ் தமிழர்கள்  தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளில் ஆண்டுக்கு ஒன்றை தத்தெடுத்து  தூர்வாரி பராமரிக்க வேண்டும். அது உங்களின் சொந்த ஊரில் உள்ள ஏரியாகக் கூட இருக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழகத்தில் விவசாயம் தழைக்கும்’’ என்று கூறினார். அவரது இந்த யோசனையை கைத்தட்டி வரவேற்ற லண்டன் வாழ் தமிழர்கள், அது மிகவும் அற்புதமான யோசனை என்றும், அதை நிச்சயம் செயல்படுத்துவோம் என்றும் உறுதியளித்தனர்.

தொடர்ந்து 11.01.2019 அன்று இங்கிலாந்தில் உள்ள Indian Business Network   என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘புதிய வாய்ப்புகளைக் கண்டறிதல்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கலந்து கொண்டார். இந்த மாநாடு லண்டன் தேம்ஸ் ஆற்றங்கரையில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அமைந்துள்ள இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் மக்களவை கூடும் அரங்கத்தில் நடைபெற்றது. இந்திய விடுதலை தொடர்பான வட்டமேசை மாநாடுகளை மகாத்மா காந்தியடிகளும், இங்கிலாந்து ஆட்சியாளர்களும் இந்த அரங்கத்தில் தான் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இந்த மாநாட்டில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு  உரையாற்றினார். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலிமிருந்தும் சுமார் 200 தொழில் முனைவோர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் வம்சாவளியினர் ஆவர். இம்மாநாட்டில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின்  மூத்த உறுப்பினர் மைக் கேப்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் சீமா மல்ஹோத்ரா, இங்கிலாந்து மாநகராட்சியின் தமிழ் வம்சாவளி உறுப்பினர் ரெஹானா அமீர் ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் ரெஹானா அமீர் சென்னை திருவல்லிக்கேணி  பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். லண்டன் மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் மாநகராட்சி உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் சிறப்புரையாற்றிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ்,‘‘ இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களிலும், பிற தொழில்களிலும் முதலீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டனர். அதை இங்கிலாந்துவாழ் தமிழர்களும் ஏற்றுக்கொண்டனர். 


இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அங்கு இந்திய விடுதலைக்காக மகாத்மா காந்தி வட்ட மேசை மாநாடு நடத்திய வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் நடந்த மாநாட்டையும், லண்டன் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியையும் தலைமையேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages