தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் முதலமைச்சரிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மனு - Agnipuratchi

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் முதலமைச்சரிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மனு

Share This

தருமபுரி மாவட்டத்தில் நிலவும் வறட்சியைப் போக்கி, விவசாயத்தை செழிக்க வைக்கும் வகையில், காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் செல்லும் உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகள் மற்றும் குளங்களில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தக் கோருதல் - தொடர்பாக

தருமபுரி மாவட்டத்தில் நிலவும் வறட்சி, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் மழை அளவு ஆகியவற்றின் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதேநிலை நீடித்தால் அம்மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுத்து, தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இந்த மனுவை தங்கள் பார்வைக்கு அளிக்கிறோம்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர் ஆதாரமான காவிரி ஆற்று தருமபுரி மாவட்டத்தின் வழியாகத் தான் தமிழகத்திற்குள் நுழைகிறது என்றாலும் கூட, தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே வாடுகிறது என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். தருமபுரி மாவட்டம் விவசாயத்துக்காக மழையையே நம்பியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தின் முதன்மைத் தொழிலும், வாழ்வாதாரமும் விவசாயம் தான். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 49,777 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. ஆனாலும், அதில்  ஒரு லட்சத்து 95,740 ஹெக்டேர் நிலங்கள் மட்டும் தான் பாசன வசதி பெற்றவை ஆகும். அதாவது தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொத்த வேளாண் நிலப்பரப்பில் 43.52 விழுக்காடு நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை ஆகும். மீதமுள்ள 56.48% நிலங்களில் மழையை நம்பி தான் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் மழை அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இயல்பான மழை அளவு ஆண்டுக்கு 853.10 மில்லி மீட்டர் ஆகும். ஆனால், கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 53% குறைவாகவே பெய்திருக்கிறது. வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், நடப்பாண்டிலும் வறட்சியின் கொடுமை நீடிக்கிறது.

தருமபுரி மாவட்ட மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். தருமபுரி  மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 10,300 குடும்பங்கள் உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. அவர்களில்  ஒரு லட்சத்து 90 ஆயிரம் குடும்பங்கள் சிறு, குறு விவசாயிகள் என்பதால் அவர்களால் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை ஏற்படுத்த இயலாது. மின்சார மோட்டார்கள் மூலம் நீர் இறைத்து பாசனம் செய்வதற்கான வாய்ப்புகளும் தருமபுரி மாவட்டத்தில் குறைந்து வருவதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டது. அதனால் பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், அரூர் ஆகிய வட்டங்களில் ஆழ்துளைகுழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை,  தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10 அணைகளும் வறண்டு கிடக்கின்றன.

இதே நிலை நீடித்தால் தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை நிரந்தரமாக அழிந்து விடும் ஆபத்து  ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆபத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகவே காவிரி ஆற்றில் ஓகனேக்கல் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை நீரேற்றும் மின் மோட்டார்கள் மூலம் இறைத்து குழாய்கள் மூலம் கொண்டு சென்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்புவதற்கான,   ‘‘தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை’’ செயல்படுத்தலாம் என்ற யோசனையை, மக்கள் நலன் கருதி, தமிழக அரசின் பரிசீலனைக்காக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைக்கிறது.

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தருமபுரி மக்களவை உறுப்பினராகிய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி தருமபுரியில் தொடக்கி வைத்தேன். அக்கோரிக்கையை ஆதரித்து இதுவரை 10 லட்சத்துக்கும் கூடுதலான விவசாயிகளும், பொதுமக்களும் கையெழுத்திட்டுள்ளனர். அதையும் மாண்புமிகு முதலமைச்சரின் பார்வைக்காக தாக்கல் செய்கிறோம்.

தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 10 அணைகள்,  83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகள் உள்ளன. இவை அனைத்தையும் நிரப்புவதன் மூலம்         3 டி.எம்.சி அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தர்மபுரி மாவட்ட பாசனத்திற்கு இது பெரும் துணையாக இருக்கும். ஓகனேக்கல் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தண்ணீர் எடுக்கும் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி தண்ணீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து 1230 நீர்நிலைகளிலும் நிரப்புவது தான் தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் ஆகும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதானது ஆகும். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்  திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்தத் திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். அதுமட்டுமின்றி, அனைத்து நீர்நிலைகளுக்கும் நேரடியாக தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டிய தேவையும் இல்லை. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதால் ஒரு சில ஏரிகளில் நிரப்புவதன் மூலமாக அனைத்து நீர்நிலைகளுக்கும்  தண்ணீரை மிகவும் எளிதாக கொண்டு செல்ல முடியும் என்று நீர்ப்பாசன வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும்.  அதுமட்டுமின்றி, 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இத்திட்டத்திற்காக ரூ.650 கோடி மட்டுமே செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தால் தருமபுரி மாவட்டத்திற்கு கிடைக்கும் பயன்களுடன் ஒப்பிடும்போது,  இதற்காக ஆகும் செலவு பெரிய விஷயமே இல்லை.

இந்தத் திட்டத்திற்காக காவிரியில் இருந்து 3 டி.எம்.சி அளவுக்கு மட்டும் தான் தண்ணீர் எடுக்கப் படும். காவிரியில் கடந்த ஆண்டில் 175 டி.எம்.சிக்கும் கூடுதலான தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.  அத்துடன் ஒப்பிடும்போது இதற்காக எடுக்கப்படும் நீர் ஒரு பொருட்டே அல்ல. இது குடிநீர் திட்டமும்  கூட என்பதால் தருமபுரி காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை.

தருமபுரி மாவட்டத்தில் நிலவும் வறட்சி, அதனால் அழிந்து வரும் விவசாயம், குறைந்து வரும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் சுமார் 5 லட்சம் பேர் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டிய அவல நிலை நிலவுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப் பட்டால் தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செழிப்பதுடன், வேலைவாய்ப்பும் பெருகும். இவற்றைக் கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்கும், அதற்காக நிதியை ஒதுக்குவதற்காகவும் ஆணைகளை பிறப்பிக்கும்படி தங்களை கேட்டுக்கோள்கிறோம்.

                                                          இப்படிக்கு,



                                                (மருத்துவர் அன்புமணி இராமதாஸ்)


                                           மக்களவை உறுப்பினர் & தருமபுரி


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages