உழைப்பின் மகத்துவத்தையும், உழைப்பாளர்களின் ஒற்றுமையையும் உலகிற்கு உணர்த்திய பாட்டாளிகளின் நாளை மே நாளாக கொண்டாடும் உலகத் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14-ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவிலும் அதே நாளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், முதல் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது என்பதும் வரலாறு.
பாட்டாளிகள் தான் நாட்டின் முதுகெலும்பு ஆவர். அவர்கள் தலைநிமிர்ந்து நின்றால் தான் இந்தியாவும் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க முடியும். இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் அரசு நிர்வாகத்தை பின்னணியிலிருந்து இயக்குகின்றன என்பதால், அவர்களுக்கு சாதகமாகவும், தொழிலாளர்களுக்கு பாதகமாகவும் தான் கொள்கைகளும், சட்டங்களும் உருவாக்கப் படுகின்றன. இந்த நிலை மாறி கொள்கை வகுப்பில் பாட்டாளிகளின் குரல் செவிமடுக்கப்பட வேண்டும்.
அதற்கான சூழல் இந்தியாவில் உருவாகி வருவது தான் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். உழைக்கும் மக்களுக்கு உயர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கமும், கொள்கையும் ஆகும். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இதை பா.ம.க. சாத்தியம் ஆக்கியிருக்கிறது. மத்திய அரசின் மூலமாகவும், மாநில அரசின் மூலமாகவும் பாட்டாளிகள் வர்க்கத்திற்கு செய்ய வேண்டிய பணிகளும், வழங்கப்பட வேண்டிய நியாயமான உரிமைகளும் ஏராளமாக உள்ளன.
பாட்டாளிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கூட்டாளிகளின் துணையுடன் நிறைவேற்றிக் கொடுப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முதன்மை இலக்கு ஆகும். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி எடுக்கும். அந்த வகையில் பாட்டாளிகளின் உரிமைகளை வென்றெடுக்கும் பயணத்தின் தொடக்கமாக நடப்பாண்டின் பாட்டாளிகள் நாள் அமையட்டும் என்று கூறிக் கொண்டு மீண்டும் ஒரு முறை மே நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment