வண்ண ஒளிகளின் விழாவான தீபஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.
தீபஒளித் திருநாளுக்கான மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமானால், அதற்கான அடிப்படைக் கூறுகள் அனைத்தும் வலிமையாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும். குறிப்பாக அனைவருக்கும் உணவு படைக்கும் வேளாண்மைத் தொழிலும், கிராமப்புற பொருளாதாரத்தை வலுவாக்கும் சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்களும் தழைத்தோங்க வேண்டும். அப்போது தான் தீப ஒளி என்பது ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் பண்டிகையாக மட்டும் இல்லாமல், அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கும் திருவிழாவாகவும் திகழும்.
தீபஒளித் திருநாள் மத்தாப்புகளால் ஏற்படுத்தப்படும் வண்ணங்களையும், ஒளிகளையும் மட்டும் கொண்டதாக இருக்கக் கூடாது; மாறாக, மக்களின் வாழ்க்கையில் இல்லாமையை விலக்கி, இன்பத்தைப் பெருக்கி வளமும், நலமும் கொண்டதாக மாற வேண்டும். அத்தகைய ஒளிமயமான இலக்கை நோக்கி உழைக்க நாம் அனைவரும் ஒளிகளின் விழாவான இந்த நன்னாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment