சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 25.11.2019 திறந்து வைத்தார்" உடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அமைப்புக்கள் சி.வி. சண்முகம் சம்பத் அன்பழகன் வீரமணி வளர்மதி பா.ம.க தலைவர் ஜி.கே. மணி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்தகொண்டனர்
1918ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி பிறந்த சிவ சிதம்பர ராமசாமி படையாட்சிரை மக்கள் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் என அழைத்தனர். சுதந்திரப் போராட்ட வீரரான இவர், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை 1951ஆம் ஆண்டில் தோற்றுவித்தார். 1952ஆம் ஆண்டில் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் இவரது தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சட்டப் பேரவையில் 19 இடங்களிலும், நாடாளுமன்ற மக்களவையில் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. ராமசாமி படையாட்சியார் சட்டமன்ற உறுப்பினரானார்.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 152 பேரவை இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் ஆதரவால்தான் காங்கிரசின் ராஜாஜி தமிழக முதல்வரானார். பின்னர் 1954ஆம் ஆண்டில் கர்மவீரர் காமராசரின் அமைச்சரவையில் ராமசாமி படையாட்சியாருக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு அளிக்கப்பட்டது.
பின்னர் 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும் ராமசாமிப் படையாட்சியார் மக்களால் அனுப்பப்பட்டார். இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற இவர், கடந்த 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி மறைந்தார். அந்நிலையில் 1993ஆம் ஆண்டில் தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரத்தைத் தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவான போது அது, ‘விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம்’ - என்றுதான் பெயரிடப்பட்டது. பின்னரே அது ‘விழுப்புரம் மாவட்டம்’ - என்று மாறியது.
தமிழக அரசியலில் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராமசாமிப் படையாட்சியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அத்தோடு கடலூரில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் கட்டத் திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் நாட்டப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகத் தமிழக சட்டப் பேரவையில் சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் திருவுருவப் படம் திறக்கப்பட்டது. இன்று (25.11.2019) நடைபெறும் விழாவில் ராமசாமிப் படையாட்சியார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து அவரது புகழுக்கு மேலும் அணி சேர்க்கவுள்ளார்.
---------------------------------------
"ராமசாமி படையாட்சியார் - தமிழினத்தின் பெரும் தலைவர்!"
தமிழகத்தின் தலைவர்களில் முதன்மையானவர் ராமசாமி படையாச்சியார் ஆகும். மறைமலையடிகள், காமராஜர், முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட தலைவர்களை எல்லா தமிழர்களும் கொண்டாடுவது போன்று, ராமசாமி படையாச்சியாரும் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்பட வேண்டிய பெருந்தலைவர் ஆகும்.
இந்திய நாடு விடுதலை அடைந்து, இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி கொண்டாடப்பட்ட காலத்தில், இந்தியா சந்தித்த முதல் தேர்தலிலேயே - அக்கட்சியை தோற்கடித்து, சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முடியாமல் செய்தவர்.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் நாசக்கார கம்யூனிஸ்டுகளின் ஆட்சி உருவாகும் சூழலை முறியடித்து, தங்களது ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடக்க வழிவகுத்த இரு தலைவர்களில் ஒருவர் ராமசாமி படையாட்சியார் (மற்றொருவர் காமன்வீல் கட்சியின் மாணிக்கவேலு நாயகர்).
இன்று பலராலும் புகழப்படும் காமராஜர் ஆட்சியை உருவாக்கியவர் ராமசாமி படையாட்சியார் தான். அவர் இல்லாவிட்டால் தமிழ்நாட்டிற்கு காமராஜர் எனும் முதலமைச்சர் கிடைத்திருக்க மாட்டார் என்பது தான் வரலாறு.
------------------------------------------
"ராமசாமி படையாச்சியார்: சமூகநீதி காத்த பெருந்தலைவர்! "
ராமசாமி படையாச்சியாரின் மிகப்பெரிய பங்களிப்பு என அவர் சமூகநீயை காப்பாற்ற ஆற்றிய பங்களிப்பை குறிப்பிடலாம்.
தமிழ்நாட்டின் மீது திணிக்கப்பட்ட மிக மோசமான சனாதன - மனுதர்ம கோட்பாட்டை தோற்கடித்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்றிய பெருமகனார் அவர் தான்.
'அப்பன் தொழிலை தான் பிள்ளையும் செய்ய வேண்டும்' என்கிற மிகமோசமான குலக்கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி கொண்டுவந்தார். மிக பலமான தலைவராக இருந்த ராஜாஜியின் இத்திட்டத்தை எவரும் தடுக்க முடியாது என்று எல்லோரும் நம்பிய சூழலில், அந்த குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக கொடுக்கூர் விஸ்வநாதன் எனும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மூலம் தீர்மானம் கொண்டுவந்தார் ராமசாமி படையாச்சியார்.
அந்த தீர்மானம் தோற்கும் என்று கருதப்பட்ட சூழலில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக கொடுக்கூர் விஸ்வநாதன் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையும், ராமசாமி படையாச்சியாரின் ராஜதந்திரத்தாலும் - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆதரவையும் பெற்று, எதிர்ப்பு தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்த வரலாற்று நிகழ்வு தான் - தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து சமூகநீதியை நிலைநாட்டியது.
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த கொடுக்கூர் விஸ்வநாதன் அவர்களின் தீர்மானம் வெற்றி பெற்றதால் தான் ராஜாஜி பதவி விலகினார்.
ராஜாஜி பதவி விலகிய காரணத்தினால் தான் - காமராசர் முதலமைச்சர் ஆனார்.
அதே நேரத்தில், சமூகநீதிக்கு எதிரான ராஜாஜி அமைச்சரவையில் சேராமல் இருந்த ராமசாமி படையாச்சியார், பின்னர் காமராஜர் முதலமைச்சர் ஆனபோது அமைச்சரவையில் இணைந்தார்.
எல்லோராலும் போற்றப்படும் சத்துணவு திட்டத்தை இந்தியாவிற்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவரும் ராமசாமி படையாச்சியார் தான்.
எனவே, ராமசாமி படையாச்சியார் வன்னியர்களின் அடையாளமாக இருந்தாலும், அவர் ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவர் ஆகும்.
No comments:
Post a Comment