மகனை இழந்து தவிக்கும் இராயபுரம் இராதாகிருஷ்ணன் இன்னும் எத்தனை வலிகளை இந்த இதயம் தாங்கும்? - மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், பலருக்கும் வாரிக் கொடுக்கும் வள்ளலாகவும் திகழ்பவருமான இராயபுரம் இராதாகிருஷ்ணன் அவரது ஒற்றை செல்ல மகன் கோகுலை இருசக்கர வாகன விபத்தில் இழந்து ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்வதற்கு கூட நம்மிடம் வார்த்தைகள் இல்லை. காரணம் அந்த வலி நம்மையும் தாக்கியிருக்கிறது.
நேற்றிரவு இது குறித்த சிந்தனையிலும், அது தந்த துயரத்திலும் இருந்ததால் பாதியில் உறக்கம் கலைந்தது. பல மணி நேர தவிப்புக்கு பிறகே மாத்திரைகளின் உதவியுடன் மீண்டும் உறங்க முடிந்தது.
ஏற்கனவே, நமது குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் இராதாகிருஷ்ணனின் புதல்வரும், மருத்துவக் கல்லூரி மாணவருமான அர்ஜுன் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து திரும்பியிருக்கிறார்.
இந்த இரு நிகழ்வுகள் தவிர ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இத்தகைய விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை குறித்த செய்திகளைக் கேள்விப்படும் போதெல்லாம் மலர வேண்டிய மொட்டுகள் கருகுகின்றனவே.... விட்டில் பூச்சிகள் வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு விளக்கில் விழுந்து மடிவதைப் போல, பருவ வயதில் பரபரப்புக்கும், சாகச உணர்வுக்கும் அடிமையாகி இரு சக்கர ஊர்தி விபத்துகளில் சிக்கி இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் சரிகின்றனவே என்ற கவலையும், வேதனையும் தான் என் மனதை வாட்டுகின்றன.
அரசியல், சமூகம் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு கேட்கிறேன்....
இத்தகைய சோகங்கள் தொடர வேண்டுமா?
இத்தகைய நிகழ்வுகள் பெற்றோருக்கு எவ்வளவு சோகத்தையும், வலிகளையும், இழப்புகளையும் அளிக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அதனால் தான் பருவ வயது பிள்ளைகளுக்கு இரு சக்கர ஊர்திகளை வாங்கித் தராதீர்கள், யாராக இருந்தாலும் இரு சக்கர ஊர்திகளை ஓட்டும் போதும் பயணிக்கும் போதும் தலைக்கவசம் அணியுங்கள், மகிழுந்தில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டைகளை அணிவதை அனிச்சை செயலாக்கிக் கொள்ளுங்கள் என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக கூறி வருகிறேன்.
இதுவரை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
இனியாவது நமது விலைமதிப்பற்ற செல்வங்களைக் காப்போம்.
நமது பிள்ளைகள் மழலைகளாக இருக்கும் போது அவர்களுக்கு பொம்மைகளை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவோம். அதேபோல், பருவ வயதில் பிள்ளைகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக இரு சக்கர வாகனங்களை வாங்கித் தரும் வழக்கத்திற்கு முடிவு கட்டுங்கள். அது ஆபத்தை விலைக்கு வாங்குவதற்கு சமமானதாகும்.
மாறாக, பிள்ளைகளுக்கு மிதிவண்டிகளை வாங்கிக் கொடுத்து, அவற்றில் பாதுகாப்பாக பயணிக்க வழிகாட்டுங்கள். வாழ்க்கைக்கு மட்டுமல்ல.... வாகனம் ஓட்டுவதற்கும் வழிகாட்ட வேண்டியது பெற்றோர்களின் கடமை!
No comments:
Post a Comment