தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் கடந்த திசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 2 மற்றும் 3ஆம் தேதிகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் ஓர் அங்கமாக போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, 36 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தொகுதிகளில் போட்டியிட்டு 16 இடங்களிலும், 432 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு 217 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதன் மூலம் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற 3வது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை பா.ம.க. பெற்றது.
எனினும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளில் பாட்டாளி மக்கள் கட்சி எத்தனை இடங்களில் வெற்றிபெற்றது என்ற விவரம் இடம்பெறவில்லை. மாறாக, மற்றவை என்ற பெயரில் சிறிய கட்சிகளுடன் பா.ம.க. வெற்றிபெற்ற இடங்களும் சேர்த்து கணக்கிடப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பா.ம.க. எந்தெந்த பகுதிகளுக்கு எத்தனை இடங்களில் வெற்றிபெற்றுள்ளது என்ற விவரம் வெளியிடப்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இன்று அதுகுறித்து வழக்குத் தொடர சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் ஆதிகேசவலு முன்னிலையில் அனுமதி கோரப்பட்டது. நீதியரசரும் வழக்குத் தொடர அனுமதி அளித்தார்.
ஆனால், அடுத்த 15 நிமிடங்களுக்குள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முடிவுகள் பக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 16 இடங்களிலும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 217 இடங்களிலும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களிலும் வெற்றிபெற்று தமிழகத்தின் 3வது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பதை இதன் மூலம் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொது சின்னங்களில் அடிப்படையில் போட்டியிட்ட பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப் படாத கட்சிகள் வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கையையும் ஆணையம் வெளியிட்டுள்ளது.
(குறிப்பு: பா.ம.க. வெற்றிபெற்ற இடங்களை குறிப்பிடும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தின் இணைப்பு இதனுடன் வழங்கப்பட்டுள்ளது)
https://tnsec.tn.nic.in/nomination/project_main/election_result/table_1a_party_list.php?post_code=Mw==
No comments:
Post a Comment