தைலாபுரத்தில் தைக்கூடல்!
கடந்த ஆண்டு வியப்பு!
கடந்த ஆண்டு வியப்பு!
இந்த ஆண்டு பிரமிப்பு!! - மருத்துவர் இராமதாசு அய்யா.
===========================
உழவர்களுக்கும், உறவுகளுக்கும், ஒன்றுகூடலுக்கும் ஒரு திருநாள் உண்டென்றால் அது எனக்குத் தெரிந்தவரை தைப் பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு திருவிழா தான். தைலாபுரம் தோட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழையும் மலர வைப்பதுடன், வீரத்தையும் ஓங்க வைப்பது இத்திருநாள் தான்.
அத்தகைய சிறப்பு மிக்க தைப்பொங்கல் திருநாள் எனது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் 1999&ஆம் ஆண்டில் தொடங்கி 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 20&ஆவது தைக்கூடல் விழாவில் அன்பின் அடையாளமாக பெரும் பானையிலும், ஆசையின் அடையாளமாக சிறிய பானையிலும் பொங்கல் சமைத்து இயற்கை அன்னைக்கு படைத்தோம். பொங்கல் பொங்கும் போது எங்கள் வீட்டு குட்டிக் குழந்தைகள், சுட்டிக்குழந்தைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவரும் ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று எழுப்பிய முழக்கம் எங்கள் உற்சாகத்தை எதிரொலித்தது.
கடந்த ஆண்டு தைக்கூடலின் சிறப்பம்சம் கரும்புக் கட்டுகளை ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டியும், அதை கம்பீரமாக இழுத்துச் செல்லும் இரு காளை மாடுகளும் கரும்புகளாலேயே வடிவமைக்கப்பட்டு இருந்தது தான். பொதுவாக இத்தகைய காட்சிகள் வடிவமைக்கப்படும் போது உருவத்தை அழகுபடுத்துவதில் தான் கலைஞர்கள் கவனம் செலுத்துவார்கள். ஆனால், எங்களின் சிற்பி சிவா, அதையும் கடந்து காளைகள் மின்னல் வேகப் பாய்ச்சலில் மாட்டு வண்டியை இழுத்துச் செல்வது போன்ற தோற்றத்தை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்திருந்தார். இதற்காக அவரை நிறைய பாராட்டலாம்.
தைலாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கரும்புகளால் ஆன காளைமாட்டு வண்டி அமைப்பை அனைத்து ஊடகங்களும் பாராட்டின. அடுத்த 6 மாதங்களுக்கு தைலாபுரம் தோட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அந்த படைப்பை பல்லாயிரம் பேர் நேரில் பார்த்துச் சென்றனர்; பல லட்சம் பேர் இணைய ஊடகங்களிலும், முகநூலிலும் கண்டு களித்தனர்.
-
கடந்த ஆண்டு தைக்கூடலுக்கான படைப்பு வியப்பை அளித்தது என்றால் இந்த ஆண்டு 21-ஆவது ஆண்டு தைக்கூடலுக்கான படைப்பு பிரமிப்பை ஏற்படுத்தப் போகிறது.
-
கடந்த ஆண்டு தைக்கூடலுக்கான படைப்பு வியப்பை அளித்தது என்றால் இந்த ஆண்டு 21-ஆவது ஆண்டு தைக்கூடலுக்கான படைப்பு பிரமிப்பை ஏற்படுத்தப் போகிறது.
ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவல் வீர விளையாட்டின் போது வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளையை வெற்று மார்புடன் பாயும் வீரத்தமிழ் இளைஞர்கள் அடக்கும் காட்சி கரும்புகளால் வடிவமைக்கப் பட உள்ளது. இதற்கான திட்டங்களை வகுத்துள்ள தம்பி சிற்பி சிவா அவரது குழுவினருடன் கலைப் பணியை தொடங்கி விட்டார். இன்னும் 4 நாட்களில் கரும்புக்காளை சீறிப் பாயும்; அது உங்களின் கண்களுக்கு வீர விருந்து படைக்கும். அக்காளையைக் காண நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இனிய தைப்பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு முன்வாழ்த்துகள்!
இனிய தைப்பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு முன்வாழ்த்துகள்!

No comments:
Post a Comment