புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற முடியாது! - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினாவுக்கு மத்திய அரசு பதில்
மத்திய அரசு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், அக்கொள்கையை ஏற்க மறுத்து இருப்பதாலும் புதியக் கல்விக் கொள்கையை திரும்பப்பெறும் திட்டம் மத்திய அரசுக்கு உண்டா? என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வினா எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அவர்கள், புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். ‘‘வரைவு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துரைகளும், யோசனைகளும் வந்துள்ளன. புதிய கல்விக் கொள்கைக்கு நல்ல விளம்பரம் கிடைத்திருப்பதுடன், அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் சாதகமான கருத்துகள் கிடைத்துள்ளன. அவற்றின் அடிப்படையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது என்றும் அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் கூறினார்.
2. உழவர்களின் வருவாயைப் பெருக்க 7 ஆதாரங்கள் - மத்திய அரசு
இந்தியாவில் உழவர்களும், உழவுத் தொழிலாளர்களும் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களின் வருமானத்தை பெருக்க, இரட்டிப்பாக்க ஏதேனும் சிறப்புக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளதா? என்றும் மாநிலங்களவையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா எழுப்பினார்.
அந்த வினாவிற்கு பதிலளித்த மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ‘‘ உழவர்கள் விளைவிக்கும் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குதல், வருவாய் ஆதரவு, கொள்முதல் விலை உயர்வு என உழவர்களின் நலன்களுக்காக மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, உழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கானா நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க 2016&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழு அதன் அறிக்கையை 2018&ஆம் ஆண்டில் தாக்கல் செய்தது. அக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்படுவதை கண்காணிக்க அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்பு அமைக்கப்பட்டது. பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், கால்நடைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி உற்பத்திச் செலவை குறைத்தல், பயிர் அடர்த்தியை அதிகரித்தல், வழக்கமாக பயிரிடப்படும் பயிர்களில் இருந்து அதிக வருவாய் தரும் பயிர்களுக்கு மாறுதல், கொள்முதல் விலைகளை உயர்த்த வகை செய்தல், பண்ணை சார்ந்த பணிகளில் இருந்து பண்ணை சாராத பணிகளுக்கு மாறுதல் ஆகிய 7 ஆதாரங்கள் மூலம் உழவர்களின் வருமானத்தைப் பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவு ம்மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறினார்.
3. இந்தியாவில் உரத்தட்டுப்பாடு இல்லை
இந்தியாவில் நிலவும் உரத்தட்டுப்பாட்டைப் போக்கவும், கள்ளச்சந்தையில் உரம் பதுக்கப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினவினார். அதற்கு பதிலளித்த மத்திய உரத்துறை அமைச்சர், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் உரத்தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்தார். உரப்பதுக்கலைத் தடுக்க திடீர் ஆய்வுகளை நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment