சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா
3. இட ஒதுக்கீடு 27%,
கிடைத்தது எத்தனை%?
மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு 1990&ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை முறியடித்து 1993-ஆம் ஆண்டில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பின் நிரப்பப்பட்ட பணியிடங்களில் இட ஒதுக்கீட்டு விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு இருந்தால், மத்திய அரசு பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அளவு குறைந்தது 25 விழுக்காட்டையாவது தாண்டியிருக்க வேண்டும். ஆனால், சராசரியாக அதில் பாதியைக் கூட தாண்டவில்லை என்பது தான் உண்மை.
2017-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் உள்ள தொகுதி ஏ பணிகளில் 17 விழுக்காட்டை மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கைப்பற்றி உள்ளனர். இந்த 24 அமைச்சகங்களுடன், கூடுதலாக 25 துறைகள், பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் செயலகம் என மொத்தம் 57 வகை அலுவலகங்களில் ( இனி 57 வகை அலுவலகங்கள் என அழைக்கலாம்) தொகுதி ஏ பணிகளில் பணியாற்றும் பிற பிற்படுத்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 14% மட்டும் தான். அதாவது முதல் 24 அமைச்சகங்கள் தவிர பிற அலுவலகங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை சுமார் 10% என்ற அளவில் தான் உள்ளது.
தொகுதி பி பணிகளை எடுத்துக் கொண்டால், முதல் 24 அமைச்சகங்களில் 14% பணிகளை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிர்வகிக்கின்றனர். 57 வகை அலுவலகங்களை கணக்கில் கொண்டால் இந்த விகிதம் 15% ஆக உள்ளது.
தொகுதி சி பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வேலைவாய்ப்பு விகிதம் முறையே 11%, 17% ஆக உள்ளது. தொகுதி டி பணிகளில் இது முறையே 10%, 18% ஆக உள்ளது.
மத்திய அரசின் அதிகாரம் மிக்க பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் திட்டமிட்டு புறக்கணிக்கப் பட்டிருக்கின்றனர். உதாரணமாக மத்திய அரசின் அதிகாரபீடமாக கருதப்படும் மத்திய அமைச்சரவை செயலகத்தில் மொத்தம் 64 தொகுதி ஏ பணிகள் உள்ளன. அவற்றில் குறைந்தது 18 பணியிடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு பணியிடம் கூட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படவில்லை. 60 பணியிடங்கள் உயர்சாதியினரை கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. 4 இடங்கள் பட்டியலினத்தவரால் நிரப்பப்பட்டுள்ளன.
இதே போல் பல துறைகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை. கிரீமிலேயர் முறையை பயன்படுத்தி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு எவ்வாறு மறுக்கப்படுகிறது என்பதற்கு இது தான் உதாரணம்.
நாளை....
மண்டல் ஆணையம் என்றால் என்ன?
No comments:
Post a Comment