சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்!- மருத்துவர் இராமதாசு அய்யா.
6. 3 பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் எவ்வளவு?
இந்தியாவில் பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களை அடையாளம் காண கல்வி, சமூக, பொருளாதாரம் சார்ந்த 11 காரணிகளை அளவுகோளாக மண்டல் ஆணையம் பயன்படுத்தியது. அந்த 11 காரணிகள் குறித்து முந்தைய அத்தியாயத்தில் நாம் விரிவாக பார்த்தோம். இட ஒதுக்கீடு சமூக அடிப்படையில் தானே வழங்கப்பட வேண்டும்? இட ஒதுக்கீட்டை அனுபவிப்பதற்கான பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காண பொருளாதார காரணிகள் எதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வினா உங்களுக்கு எழலாம். அதற்கு விடையளிப்பது தான் இந்த அத்தியாயத்தின் நோக்கம் ஆகும்.
பின்தங்கிய மக்களை அடையாளம் காண்பதற்காக கல்வி, சமூக, பொருளாதாரம் சார்ந்த 11 காரணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவற்றுக்கு சமமான மதிப்பு தரப்படவில்லை. சமூகம் சார்ந்த 4 காரணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் வழங்கப்பட்டன. கல்வி சார்ந்த 3 காரணிகளுக்கும் தலா இரு புள்ளிகளும், பொருளாதாரம் சார்ந்த 4 காரணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகளும் வழங்கப்பட்டன.
இந்த கணக்கெடுப்புக்காக பயன்படுத்தப்பட்ட 4 பொருளாதார காரணிகளும் பொதுவான பொருளாதார காரணிகள் அல்ல. இந்த 4 பொருளாதார காரணிகளும் சமூகம், கல்வியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஏற்பட்ட ஏழ்மையை சுட்டிக்காட்டும் காரணிகள் தான். இந்த பொருளாதார காரணிகளை கணக்கில் கொள்வது என்பது பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அல்ல.... மாறாக, சமூக ரீதியிலும், கல்வியிலும் பின்தங்கிய சமுதாய மக்கள் பொருளாதார நிலையிலும் கடுமையாக பின்தங்கியுள்ளனர் என்பது தான் இதன் பொருள் ஆகும்.
சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் சார்ந்த காரணிகளுக்கு அளிக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் 22 ஆகும். ஒவ்வொரு சாதியிலும் இந்த காரணிகளை பொருத்திப் பார்க்கும் போது எந்தெந்த சமூகங்கள் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான, அதாவது 11&க்கும் கூடுதலான புள்ளிகளை பெற்ற சமூகங்கள் பின்தங்கிய சமூகங்கள் என்று தீர்மானிக்கப்பட்டன. மற்ற சமுதாயங்கள் முன்னேறிய சமுதாயங்களாக தீர்மானிக்கப்பட்டன. இந்த வகைப்பாடு மிகவும் நியாயமானதாக போற்றப்பட்டது.
நாளை.....
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள்!
No comments:
Post a Comment