தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி - 12
தமிழ்நாட்டின் இயற்கை வளம் கொள்ளையடித்து,சுரண்டுவதை தடுத்திட பா.ம.க சார்பில் போராடி சட்டமன்றத்தில் வாதாடி எடுக்கப்பட்ட நடவடிக்கை சுருக்கம்.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,தமிழ்நாட்டில் இயற்கை கொடுத்த வரம்_மிகப்பெரிய வளம் மணல்.நமது ஆறுகளில் 30 அடி,40 அடி அளவுக்கு தங்கியிருக்கின்ற மணல் நேற்று இன்று உருவானதல்ல.பல நூறு வருடங்கள், ஆயிரம் வருடங்கள் என நீண்ட காலமாக ஆறுகளில் நிறைந் துள்ளது.பாறைகள்,கற்கள் குளிர்காலங் களில் இறுகும். வெய்யில் காலங்களில் விரிவடையும்.மழைக்காலங்களில் மழையினால் நொருங்கி,சிதைந்து சிறு,சிறு துண்டுகளாக மலைப்பகுதி களில் சம நிலப் பகுதிகளிலும் உருண்டு, உருண்டு, அரித்து,ஓடி சிறு,சிறு துகள்களாக மாறி உருவாவதுதான் மணல். மழைக் காலங்களிலும்,நீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்ற போது மணல்,தண்ணீரை உறிஞ்சி தாயின் மடியைப் போல் பாதுகாத்து வருகின்றது.இது தண்ணீரை தாங்கி, எங்கும் வியாபித்து இருக்கின்ற ஆறுகள்,ஓடைகள் எல்லாவற்றுக்குள்ளும் உறிஞ்சி வைத்து, நிலத்தடி நீர் ஆதாரத்தை கொடுத்து வருகின்றது மணல் ஒரு பிரசித்தி பெற்ற கனிமம்.
இப்படிப்பட்ட இயற்கை வளமான மணலை பாலாறு,தென்பெண்ணை, காவிரி,வைகை,தாமிரபரணி போன்ற ஆறுகளில் தனி நபர்கள் 30 அடி,40 அடி ஆழத்திற்கு மணல் அள்ளி கொள்ளை யடிக்கின்றனர் அதனால் ஆற்று வளம் பாதிக்கப்படுகிறது. இதைத்தடுத்து நிறுத்த வலியுறுத்தி எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையிலும், எனது தலைமையிலும் மற்றும் பா.ம.கவினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தியும் பயனில்லை.
அமைச்சர்: ஜி.கே.மணி தலைவர் அவர்களே,நீண்ட நெடிய மணல் கதையை சொல்கிறீர்கள். பொதுமக்களுக்கு மணல் தேவைப்படுகிறது அதைத்தான் செய்கிறார்கள்.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,இயற்கை வளத்தை தனிநபர்கள்,அவர்கள் விருப்பத்திற்கு பொக்லைன் இயந்திரத்தை வைத்து 30 அடி,40அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுத்து லாரிகளில் கொண்டு சென்று அதிகத் தொகைக்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் ஆறுகள் பாழாகிறது. அரசிடம் அனுமதியும் பெறுவதில்லை.அரசுக்கு வருவாயும் இல்லை.பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தலாம்.
மணல் தேவைப்படுவோர் அரசு அதிகாரிகளிடம் விண்ணப்பித்து, தேவையான அளவுக்கு அனுமதி பெற்று,ஒரு யூனிட் மணலுக்கு அரசு நிர்ணயித்த தொகையை செலுத்தி அனுமதிச் சீட்டு வாங்கி,குறிப்பிட்ட இடத்தில், 3அடி ஆழத்திற்கே மணல் அள்ளி குறிப்பிட்ட எண்ணுள்ள லாரியில்தான் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற நிலையை உருவாக்க வேண்டும். இதன்மூலம் ஆற்றில் அதிக ஆழம் எடுக்கப்படாமல் பாதுகாக்கலாம். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்கும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். திருட்டுத்தனமாக, தாறுமாறாக மணல் எடுப்பது தடுத்து நிறுத்தப்படும்.
முதலமைச்சர் அவர்கள்:மிஸ்டர் ஜி.கே.மணி அவர்களே,நீங்கள் நல்ல ஆலோசனையைத்தான் சொல்கிறீர்கள்.இதை விவரமாக எழுத்து மூலம் எனக்குக் கொடுங்கள். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கிறேன். அதன்பிறகு முதலமைச்சர் அவர்களுக்கு விவர அறிக்கை கொடுத்து விளக்கமாகவும் எடுத்துக் கூறினேன். தொடர்ந்து சட்டமன்றத்தில் நானும் பா.ம.க உறுப்பினர்களும் வாதாடினோம்.
முதலமைச்சர் அம்மையார் அவர்கள் ஏற்றுக்கொண்டு அதிகாரிகள் குழுவுடன் ஆலோசித்து 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவிப்பு செய்தார். மணல் விற்பனை அரசு நடைமுறைக்கு வந்து கொஞ்ச காலம் நடந்தது.மாவட்ட ஆட்சியர் கன்காணித்தார். பொதுப்பணித் துறை நிர்வாகம் மேற்கொண்டது. ஒரு யூனிட் ரூபாய் 300, 3 யூனிட் கொண்ட லாரி ஒரு லோடு என அரசு விலை நிர்ணயம் செய்தது.காலை 6:00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை கரையிலிருந்து 60 அடி தூரத்தில் ஒரு மீட்டர் (3அடி) ஆழம்_தரைப்பாலம்,மேம்பாலம் இருந்தால் 100அடி தூரம் குடிநீர் கிணறு இருந்தால் 1 கிலோமீட்டர் தூரம் என மணல் எடுக்க விதிகளில் சொல்லப்பட்டுள்ளது_இந்த விதிகளுக்கு தலைவிதி வந்தது.மணல் எடுக்க ஒரு அனுமதிச் சீட்டு (PERMIT) வாங்கிக்கொண்டு 5லோடு,10லோடு ஓட்டுவது. பொக்லைன் வைத்து ஆழமாக அள்ளுவது போன்ற முறைகேடுகளும் அதிகரித்தது.
இதையும் சட்டமன்றத்தில் வலியுறுத்தி வாதாடி வந்தோம். இந்நிலையில் அரசு மணல் குவாரிகள் இடம் அறிவித்து, தனியார் வசம் ஒப்படைத்து,மணல் கொள்ளை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டது.
அதைத் தொடர்ந்து பா.ம.க நாங்கள் கடுமையாக வாதாடினோம். மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் போராட்டம், எனது தலைமையில் போராட்டம், தமிழ்நாட்டில் பரவலாக பா.ம.க சார்பில் தொடர்ந்து போராட்டங்கள், பா.ம.கவினர் மீது வழக்கு,கைது நடவடிக்கைகள் தொடர்ந்தது.
பாலாறு,காவிரி,தாமிரபரணி, வைகை என எங்கு பார்த்தாலும் லாரிகள் நீண்ட வரிசையில் நின்று தினமும் பல்லாயிரக்கணக்கான லோடுகள் செல்கின்றன என்பதை சுட்டிக்காட்டி வலியுறுத்தினோம். காஞ்சிபுரம் மாவட்டம்,திருமுக்கூடல் அருகில் வருவாய் ஆய்வாளர் (REVENUE INSPECTOR) அவர்களை,ஒரு திருட்டு மணல் லாரி ஏற்றி கொன்றுவிட்டது. இப்படி மணல் லாரியில் அதிகாரிகள் பலர் பாதிக்கப்பட்டனர். ஆங்காங்கே பா.ம.கவினரும் கிராம பொதுமக்களும் தாக்கப்பட்டனர்.
ஆந்திரா,கர்நாடகா,கேரளா போன்ற மாநிலங்களுக்கு தினமும் ஏராளமான லாரிகளில்,மணல் கடத்துவதும்,கேரள மாநில துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் மாலத்தீவுக்கு கடத்தப்பட்டது. இப்படி மணல் அள்ளுவதால் ஆறுகளில் நீர் வளம் குறைந்து பாலைவனமாக மாறும் அபாய நிலை உருவாகிவிடும் என்று சுட்டிக் காட்டினோம்.மழை பெய்தால் ஆற்றில் நீர் தங்காது,நேராக கடலுக்கே ஓடிவிடும். இதனால் நிலத்தடி நீர் குறையும், வெள்ளம் வந்தால் மண் அரிப்பும், வெள்ளச் சேதமும் அதிகரிக்கும். குடிநீருக்கும்,பாசன நீருக்கும் கஷ்டம். பூமியும் வறண்டு போகும்.மணல் அள்ளி ஆறுகள் ஆழமானதால், ஆற்றிலிருந்து தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் மேலே உள்ளன, ஆற்று நீர் வாய்க்காலில் செல்ல முடியாது. எதிர்காலத்தில் தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் வரும் என்பதன் அடையாளம் இதுதான்.ஒரு கன அடி மணல் உருவாக சுமார் 100 ஆண்டுகள் ஆகும்.
திருக்கச்சூர் ஆறுமுகம்: நான் அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். பாலாற்றின் அடியில் களிமண் காணும் வரை மிக ஆழமாக, அடியோடு மணல் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது.எனவே எங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூரிலிருந்து வேலூருக்கு பாலாற்றிலேயே புறவழிச்சாலை (ரோடு) போட்டு விடுங்கள் என்று கடுமையாக வாதாடினார். நானும் குறிப்பிட்டேன்,கடத்தல் மணல் லாரி வேகமாக செல்கிறது. லாரியிலிருந்து மணல் காற்றுக்கு சீறி பறக்கும், இருசக்கர வாகனங்களில்,நடந்து செல்பவர்கள் கண்களில் அடித்து பாதிப்புக்குள்ளாகின்றனர்.மணல் கடத்தும் லாரி ஆட்களையும் கொலை செய்கிறது.எனவே மணல் லாரி அல்ல மரண லாரி" என்றோம்.அதன் பிறகு மணல் லாரிகள் எல்லாம் தார்பாய் போட்டு மூடிச் செல்ல வேண்டுமென அறிவித்தனர்.
மருத்துவர் அய்யா அவர்கள் ஆலோசனைப்படி பா.ம.க உறுப்பினர் கே.எல்.இளவழகன் பெயரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 7.3.2002ல் வழக்கு தொடரப்பட்டு,இரண்டு வழக்கறிஞர்கள் குழு அமைத்து, ஆய்வு நடத்தி உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கையும் வழங்கப்பட்டது. பா.ம.க உறுப்பினர்கள் குழு அமைத்து.அக்குழு ஆறுகளின் பல இடங்களுக்கு சென்று எவ்வளவு ஆழத்திற்கு ஆறுகளில் மணல் எடுக்கப்படுகிறது என டேப் பிடித்து அளவு செய்யப்பட்ட இடத்தில் மணல் எடுப்பவர்களால் கொலை முயற்சி தாக்குதல் நடந்து,உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி வந்த நிலையும் ஏற்பட்டது.
இவ்வாறு நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டியும்,ஒவ்வொரு ஆற்றிலும் எந்தெந்த இடங்களில் லாரிகள் நீண்ட வரிசைகளில் நின்றது,பொக்லைன் இயந்திரம் மணல் எடுப்பது போன்ற படங்களை காண்பித்தும் தொடர்ந்து வழியுறுத்தினோம்,மணல் பிரச்சினைக்கு மேற்கொண்ட முயற்சிகள் மறக்க முடியாத நினைவுகள்.
மருத்துவர் அய்யா அவர்கள் பெயரில் தொடர்ந்து அறிக்கைகள் வாயிலாகவும், நான் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தும் பலமுறை வற்புறுத்தி வந்தோம். இந்திய நாட்டில் எங்கும் இல்லாத வகையில் இயற்கைவளம் மணல் அடியோடு அள்ளி,மணல் கொள்ளையை,சுரண்டலை தடுத்து நிறுத்த பா.ம.க எடுத்த முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல.மற்ற கட்சி உறுப்பினர்களும் வாதாடினார்கள்.
பசுமைத் தாயகம் சார்பில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஆற்றுப்படுகைகளை காலி செய்வது பூமித் தாயை கொலை செய்வது போன்றது.தாயின் மடியை அறுத்து பால் குடிப்பது போன்றது.
நாங்கள் கடுமையாக வாதாடினோம். மணல் திருடினால் குண்டர் சட்டம் பாயும் என்றார்கள்.குண்டர் சட்டம் காணாமலே போய்விட்டது.மணல் கொள்ளையை தட்டிக்கேட்டதால் பல படுகொலைகளும் நடந்தன.
மாலத்தீவுக்கு முதலில் 4 1/2 இலட்சம் டன்,பின் 6 இலட்சம் டன்,அடுத்து 10 1/4 இலட்சம் டன் அனுப்பப்பட்டுள்ளது.
மணல் சுரண்டலை தடுத்து, ஆறுகளை பாதுகாக்க மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.க வும், பசுமை தாயகமும் மேற்கொண்ட முயற்சிகள் மகத்தானது_மறக்க முடியாதது.
மற்ற நிகழ்வுகள் நாளை தொடரும் பகுதி -13
No comments:
Post a Comment