சீதா பாட்டி, ராதா பாட்டி (15.05.2020) கனவில் வந்த கொரோனாவும்... கடைபிடிக்கச் சொன்ன விதிகளும்! மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சீதா பாட்டி, ராதா பாட்டி (15.05.2020) கனவில் வந்த கொரோனாவும்... கடைபிடிக்கச் சொன்ன விதிகளும்! மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சீதா பாட்டி, ராதா பாட்டி (15.05.2020)
கனவில் வந்த கொரோனாவும்...
கடைபிடிக்கச் சொன்ன விதிகளும்! மருத்துவர் இராமதாசு அய்யா

சீதா பாட்டி:  என்னடி ராதா ஆளையே காணோம். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு என்னை நேரில் தான் வந்து பார்க்கலை. ஒரு போனாவது பேசியிருக்கலாம்ல. அதைக் கூட செய்யலை. நானே தான் போன் போட்டு பேசனுமாடி.

ராதா பாட்டி:  அக்கா... அப்புடில்லாம் இல்லைக்கா. வூட்ல வேலை ஒரே டைட்டா இருக்குக்குக்கா. உங்களை பார்த்து பேசுனா புதுசு புதுசா தகவல்லாம் கிடைக்கும். ஆனா இப்ப எதுவுமே தெரியிறது இல்லக்கா. நானே வேலையெல்லாம் முடிச்சிட்டு போன் போடலாம்னு நெனச்சேன்க்கா. நீங்ளே கூப்டூட்டிங்க அக்கா. சொல்லுங்க அக்கா.

சீதா பாட்டி:  ஒண்ணுமில்லடி. ஒரு சேதி சொல்லலாம்னு தான். நேத்து தூங்கும் போது  ஒரு புதுமையான கனவு. பார்த்தால் உருவம் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ‘‘ நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன். அவர் மாண்டு விட்டால் அதை பார்த்து ரசிப்பேன்’’னு பாடி கிட்டே அந்த உருவம் வந்துச்சு.

ராதா பாட்டி:  அய்யய்யோ யாருக்கா அது. விசாரிச்சியா?. அதுமட்டுமில்லாம ஏதோ படத்துல கண்ணதாசன் எழுதிய பாட்டை குரூரமா மாத்திப் பாடுது.

சீதா பாட்டி:  அது பாடுன பாட்டையும், தெளிவாக தெரியாத உருவத்தையும் பார்த்த போதே எனக்கு குலை நடுங்கி போயிடுச்சிடி. ஆனாலும், தைரியத்தை வரவழைச்சிகிட்டு  நீங்க யாருங்கன்னு கேட்டேன்டி.

ராதா பாட்டி:  அப்படியா... அது யாராம் அக்கா?

சீதா பாட்டி:  நான் யாருன்னே உங்களுக்கெல்லாம் தெரியலையா. உலகமே என்னை பார்த்து நடுங்குது. ஆனா, என்னை உங்களுக்கு தெரியலையான்னு பீடிகை எல்லாம் போட்டுதுடி அது. அதுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாம நான் தெகைச்சு போய் நின்ற போது நான் தான் கொரோனா வைரஸ்னு சொல்லுச்சுடி.

ராதா பாட்டி:  என்னக்கா சொல்ற.... கொரோனாவ பார்த்தியா... அது கூட பேசுனியா.  அது கொரோனான்னு சொன்ன பிறகுமா அங்க நின்னு அதுகிட்ட பேசிகிட்டு இருந்த...

சீதா பாட்டி:  அடியே.... நீ அடி முட்டாள்னு அடிக்கடி நிரூபிக்கிறடி. நான் என்ன அத நேர்லயா பார்த்து பேசினேன். கனவுல தானடி அது வந்துச்சு.

ராதா பாட்டி:  ஆமாக்கா... ஆமாம். நான் தான் பயத்துல புரிஞ்சிக்கல. மேல சொல்லுக்கா

சீதா பாட்டி:  நான் ரொம்ப பயந்து போய் தான் இருந்தேன்டி. ஆனாலும் கொரோனா  எனக்கு ஆறுதல் கூறி, ‘‘ பயப்படாதே.... நான் நல்லது சொல்றதுக்கு தான் வந்திருக்கேன்’’னு  சொல்லுச்சு.

ராதா பாட்டி:  யக்கா.... என்னக்கா சொல்றே? கனவுதான்னாலும் ஒரு அளவு வேணாமா அக்கா?

சீதா பாட்டி:  அடியே.... நான் சொல்றது நெசந்தாண்டி. முழுசா கேளு. ‘‘ நான் ரொம்ப வேகமா பரவுவேன். ஒரு மாசத்துல உலகத்துல உள்ள எல்லா நாட்டுக்கும் போய் தாக்குதல் நடத்தியிருக்கேன். என்னை கட்டுப்படுத்த இப்போதைக்கு வழியில்ல. மருந்தும் இல்ல. ஆனா,  கொஞ்சம் கவனமா இருந்தால் என்னிடமிருந்து தப்பிக்கலாம்னு உலக சுகாதார நிறுவனம்  சொல்லியிருக்கு. மனிதர்களிடையே குறைந்தது 2 மீட்டர் அதாவது 6 அடி இடைவெளி வேணும். முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டை விட்டு வெளியில் போய் வரும் போது  கைகளை 20 வினாடிகளுக்கு கழுவ வேண்டும் என்றெல்லாம் உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருக்க. அதை சரியாக கடைபிடிக்கிறவங்கள நான் நெருங்க மாட்டேன். அதை கடைபிடிக்காதவங்களிடம் தான் நான் தொத்திக்குவேன்’’னு கொரோனா என்னுகிட்ட சொல்லுச்சிடி.

ராதா பாட்டி:  அக்கா.... கேக்கவே ரொம்ப டெரர்ரா தான் இருக்குக்கா. சரி பேசினது தான் பேசினே. எப்ப எங்களை விட்டு போவேன்னு கேட்டிருக்க வேண்டியது தானே?

சீதா பாட்டி:  அட நீ ஒருத்திடி. நானே பயத்துல உறைஞ்சி போய் உட்கார்ந்திருந்தேன். அதுல எங்க அது கிட்ட இதையெல்லாம் கேட்கிறது. ஆனாலும் அதுவே அதுபத்தி சொல்லிச்சிடி.

‘‘நான் வந்த  பிறகு மக்கள் கடுமையா பாதிக்கப்பட்டு இருக்காங்க. எங்க பார்த்தாலும் ஒரே பசி, பட்டினி, பயம் தான் இருக்கு. இதை பார்க்கவே எனக்கு பாவமா இருக்குது. அதனால உங்களை விட்டு போறதா முடிவு பண்ணிட்டேன்னு’’ கொரோனா என்னிடம் சொல்லுச்சிடி.

ராதா பாட்டி:  அப்ப திரும்ப வாராதாமா அக்கா?

சீதா பாட்டி:  ஏன்டி.... அது என்ன வின்னர் படத்துல வடிவேலுவா.... ‘‘ இப்ப போறேன். திரும்பி வரமாட்டேன்னு’’ சொல்றதுக்கு. அது கொரோனாடி. ‘‘ நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’’ன்னு கண்ணதாசன் ஆக்கப்பூர்வமா சொன்னதை கொரோனா அழிவுப்பூர்வமா சொல்லுதுடி.

விரைவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க போறாங்களாம். அந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களை கொரோனா தாக்காதாம். மற்றவர்களை தாக்கிகிட்டு தான் இருக்குமாம். நாம தான் ஜாக்கிரதையா இருக்கனுமாம். இதையும் அந்த கொரோனா தான் சொல்லுச்சிடி.

ராதா பாட்டி:  அப்ப என்னதான்க்கா செய்யறது?

சீதா பாட்டி:  வேறென்ன செய்ய முடியும். நான் கனவுல கொஞ்ச நேரம் கொரோனாவோட வாழ்ந்தது போல, நிஜ வாழ்க்கையிலும் கொரோனாவோட வாழ பழகிக்க வேண்டியது தான்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages