தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி-18
மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் நிறைவேற்றிய சாதனைகளுள் ஒரு சில மட்டுமே... அவற்றுள் முக்கிய நிகழ்வுகளும் உண்டு...
சட்டமன்றத்தில் வாதங்கள், விவாதங்கள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.சில நேரங்களில் காரசாரமான,கடுமையான, விமர்சனங்களும்,சலசலப்புகள் நிறைந்திருக்கும்.உடனே அது கலகலப்பாகவும்,சிரிப்பலைகளும், பாராட்டுக்களும்,சுவாரசியமாகவும் மாறும்.காரணம் நேருக்குநேர் வாதாடுவதும் பதிலளிப்பதினாலும்...
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,சில முக்கிய தகவல்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நமது முன்னோர்கள் தமிழ் வளர்ச்சிக்கு அருந் தொண்டாற்றி யுள்ளார்கள். முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என சங்கங்கள் அமைத்து தமிழ் மேம்பாட்டுக்கு ஆற்றிய வரலாற்றுச் சான்றுகள் ஏராளம் உள்ளன.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை என இன்றும் போற்றப் படுவதுண்டு.
சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் பாடலின் முதல் வரியான "யாதும் ஊரே யாவரும் கேளிர்"என்பது அக்காலத்திலேயே உலகளவில் தமிழர்களின் உயர்ந்த பண்பாட்டை விளக்கியிருக்கிறது.
"தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு"
என நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தமிழரின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார்.
இவ்வாறு பெருமைக்குரிய தமிழர்கள் மொழி வளர்ச்சியிலும், வீரத்திலும், பண்பாட்டிலும், நாகரிகத்திலும்,கடல் கடந்த வாணிகத்திலும் பண்டைய காலத்திலே சிறந்து விளங்கியிருக் கிறார்கள் என்பதற்கு சான்றுகள் பல.
பெருமைக்குரிய தமிழ் மரபில் வந்த தமிழ்நாட்டுப் பள்ளிகளில் குறிப்பாக கிராமப்புற பள்ளிகளில் 6ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் சரியாக எழுதத் தெரியவில்லை. பிழையாகவே எழுதுவதைப்பார்க்கின்றோம்.
6 ஆண்டுகள்,7 ஆண்டுகள்,8 ஆண்டுகள் படித்தும் தினம் பேசும் தாய்மொழியான தமிழை பிழையின்றி எழுதத் தெரியவில்லையென்றால் தமிழ் வழிக் கல்வி எவ்வளவு தரம் வாய்ந்ததாக உள்ளது என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.ஆங்கில மோகத்தில் இருக்கும் காலத்தில் 8ஆண்டுகள்,10 ஆண்டுகள் படித்தும் ஆங்கிலம் சரளமாக பேசவும்,எழுதவும் முடிகிறதா அதுவும்கூட முடியவில்லையே.ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்.
அதேநேரத்தில் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கில் துவக்கி வருகின்றோம்.ஆனால் இப்பள்ளிகள் துவங்கப்பட்டு நீண்ட காலம் ஆனாலும் தமிழ் பாடத்திற்கான தமிழ் ஆசிரியர் கள் நியமிக்கப்படுவதே இல்லை.
முதலமைச்சர் அம்மையார் அவர்கள்:மிஸ்டர் ஜி.கே.மணி,நீங்கள் பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது.எந்த பள்ளியில் இல்லை? எங்கெங்கு இல்லையென சொல்லுங்கள்?
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,எங்கள் பென்னாகரம் தொகுதியில் புதியதாக துவங்கப்பட்ட பள்ளிகளில் இன்னும் நியமிக்கப்படவில்லை.தர்மபுரி மாவட்டத்திலும் நிறைய பள்ளிகள் இதுமாதிரி உள்ளன.
முதலமைச்சர் அவர்கள்:மிஸ்டர் மணி அவர்களே,இதோ உங்கள் பென்னாகரம் தொகுதிக்குதான் நிறைய பள்ளிக்கூடங்கள் வாங்கிக்கொண்டிருக்கின்றீர்களே! இதையெல்லாம் எண்ணிப் பார்க்க மாட்டீர்களா!
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,எங்கள் பென்னாகரம் தொகுதியில் ஒவ்வொரு ஆண்டும் துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் நிறைய துவங்கப்படுகிறது. அதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பென்னாகரம் தொகுதியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு துவக்கப்பள்ளி கட்டாயம் இருக்க வேண்டும்.
இரண்டு,மூன்று ஊர்களுக்கு இரண்டு கிலோமீட்டருக்குள் ஒரு நடுநிலைப் பள்ளி இருக்க வேண்டும். அதற்குமேல் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அதிகமாக துவங்கப்பட்டு வருகின்ற தொகுதி என்பதை மறுக்கவில்லை.அரசு இலவச மாணவ-மாணவிகள் விடுதிகளும் துவங்கப்பட்டு வருகிறோம். அதற்கு மீண்டும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் அவர்கள்:மணி நீங்கள் எப்படியோ அதிகமான பள்ளிக்கூடங்களை பெற்று விடுகிறீர்கள்.நல்லதுதான்.எந்தெந்த பள்ளியில் தமிழாசிரியர்கள் இல்லை பட்டியல் கொடுங்கள்.
ஜி.கே.மணி:பள்ளிகள் தரம் உயர்த்தி துவங்கப்பட்ட பிறகு, தலைமை யாசிரியர், ஆங்கில ஆசிரியர்,கணித ஆசிரியர் என மூன்று அல்லது இரண்டு பணியிடங்கள் மட்டுமே ஒதுக்குகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் நான் செல்லுகின்ற இடங்களில் சொல்கிறார்கள்.எல்லா ஆசிரியர் சங்கங்களும் என்னிடத்தில் சொல்கிறார்கள்.தலைமை ஆசிரியரே இல்லாத பள்ளிகள் நிறைய உள்ளன. எனவே புதிய பள்ளிகள் தரம் உயர்த்தி துவங்கும் போதே எல்லா ஆசிரியர் பணியிடங்களையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
முதலமைச்சர் அவர்கள்:ஜி.கே.மணி அவர்களே,எனது அரசு தான் அதிகமான பள்ளிகள் துவங்கியிருக் கிறது.தமிழ்நாடு முழுவதும் அதிகமான பள்ளி கட்டிடங்கள்,ஆய்வுக்கூடங்கள், குடிநீர்,சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள்,அரசு இலவச விடுதிகள் என நிறைய செய்து வருகிறேன்.ஒவ்வொரு முறையும் அதிகமாக ஆசிரியர்களை நியமித்து வருகின்றேன்.(ஆசிரியர் எண்ணிக்கை பட்டியல் வாசித்தார்) மணி உங்களுக்கு இன்னொன்றையும் சொல்கின்றேன். பள்ளிகளிலேயே குழந்தைகள் கணினி கற்றுக் கொள்ள வேண்டுமென அதற்கும் ஏற்பாடு செய்து வருகிறேன்.
பள்ளிகளில் கணினி புரட்சி உண்டாக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.
அமைச்சர்:பா.ம.க தலைவர் அவர்களே,புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள் நீங்கள் சொல்வது எல்லாம் செய்கின்றார்கள்.ஆனால் நீங்கள் நன்றி மறந்து விடுகிறீர்கள்.
(மீண்டும் ஒரு நாள்)
ஜி.கே.மணி:உலகில் சுமார் 55 நாடுகளில் தமிழர்கள் வாழுகின்றார் கள். அங்கே அவர்களின் குழந்தைகள் தாய் மொழி படிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.எங்கள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு தொலைபேசியில் கோரிக்கை வைக்கிறார்கள். என்னிடமும் தொலைபேசியிலும், நேரிலும் சொல்கிறார்கள்.முதலமைச்சர் அவர்கள் ஆவன செய்ய வேண்டும்.
முதலமைச்சர் அம்மையார் அவர்கள்:மிஸ்டர் மணி,நீங்கள் நிறைய சொல்கின்றீர்கள்.நான்தான் தஞ்சாவூரில் 1995ல் உலகத்தமிழ் மாநாடு நடத்தினேன். உலகெங்குமுள்ள தமிழறிஞர்களையும்,வெளி மாநிலங்களின் தமிழறிஞர்களையும், தமிழ்நாட்டின் சான்றோர்களையும், பொதுமக்களையும் அழைத்து மிக பிரம்மாண்டமான வரலாற்று பெருமைக்குரிய மாநாட்டை நடத்தினேன்.நான் அந்த மாநாட்டின் நோக்கமாக வைத்தது உலகின் நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு இணையாக தமிழ் பொலிவு பெற வேண்டும். உயர்ந்து நிற்க வேண்டும். அதோடு "இன்றும் தமிழ்" "என்றும் தமிழ்" முழக்கத்தை முன்வைத்தேன். தமிழ் இன்று புத்துயிர்,பொலிவு பெற்று என்றும் உயர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.அதோடு உங்கள் கோரிக்கை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை எனது அரசு செய்துகொண்டிருக்கிறது.மேலும் செய்யும்.
(மீண்டும் ஒரு நாள்)
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,அமெரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா,மலேசியா,சிங்கப்பூர் போன்ற உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் தூய தமிழ் பேசுகிறார்கள். ஆனால் தாய்த் தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை.கலப்புத் தமிழாக உள்ளது.அதற்காக முயற்சி எடுக்கின்ற எங்கள் மருத்துவர் அய்யா அவர்களுக்கும், பா.ம.கவிற்க்கும் அரசு ஆதரவு அளிக்க வேண்டும்.
தமிழ் வாழ்வுரிமைப் பேரணி நடத்த எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் சென்றபோது மயிலாடுதுறை அடுத்துள்ள குத்தாலத்தில் கைது செய்து,மருத்துவர் அய்யா அவர்களையும்,பா.ம.கவினரையும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். கையில் எடுத்துச் செல்ல இருந்த "தமிழன்னை" சிலையும் கைது செய்து (எடுத்துச் செல்லப்பட்டு) காவல்நிலையத்தில் வைத்தனர். இதற்கு அரசு உதவ வேண்டுமே தவிர கைது நடவடிக்கை தேவையா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அமைச்சர்:இதெல்லாம் முன்னாள் நடந்தது.ஆனால் ஊர்வலத்துக்கு நீங்கள் காவல்துறையில் அனுமதி பெற்று நடத்தினீர்களா என்பது எங்களுக்கு தெரியவில்லை.
( மீண்டும் ஒரு நாள்)
முதலமைச்சர் அவர்கள்:மிஸ்டர் ஜி.கே.மணி,தமிழ் வளர்ச்சிக்கு உங்கள் டாக்டர் அவர்களும் உங்கள் பா.ம.கவும் நிறைய செய்து வருவதாக அடிக்கடி சொல்கின்றீர்கள்.நீங்கள்தான் தமிழைக் காக்கிற "தமிழ்க் குடிதாங்கிகளா" ? உங்களை மேலும் ஒன்று கேட்கிறேன்.
ஜி.கே.மணி:முதல் அமைச்சர் அவர்களே,கேளுங்கள்.
முதலமைச்சர் அவர்கள்:ஜி.கே.மணி அவர்களே,நீங்களும் உங்கள் கட்சியும் தமிழுக்காக வக்காலத்து வாங்குகிறீர் கள்.தமிழ் வளர்ச்சி,தமிழ் பண்பாடு பற்றியெல்லாம் பேசுகின்றீர்கள்.
உங்கள் சின்ன தலைவர்,சின்ன அய்யான்னு சொல்கின்றீர்களே அன்புமணி.அவர் மத்திய அமைச்சர். அவர் உடை உடுத்துகிறாரே! அதாவது கோட்டு_சூட்டு.அது தமிழ்ப் பண்பாடா ? நீங்க போய் தமிழ், தமிழ் பண்பாடு பற்றி வக்காலத்து வாங்குகிறீர்களே!
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,எங்கள் மருத்துவர் அன்புமணி அவர்கள் மத்திய அமைச்சர். இந்திய நாட்டுக்கு அமைச்சர்.அவர் தமிழ்நாட்டு அமைச்சர் அல்ல.அவர் டெல்லிக்கும் வேறு மாநிலங்களுக்கும் செல்லும் போது அந்த உடையில் செல்கின்றார். தமிழ்நாட்டுக்கு வரும்போது வேட்டி சட்டையுடன் வருகின்றார். அவர் தமிழ் பண்பாட்டுக்குரியவர் தான். தமிழ்ப்பண்பாடு காப்பவர்தான்.
முதலமைச்சர் அவர்கள்:ஜி.கே.மணி நீங்கள் சொல்வதை நான் ஏற்க முடியாது.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் கோபப்பட மாட்டீர்களே.
முதலமைச்சர் அவர்கள்: மிஸ்டர் மணி கேளுங்கள்.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,மீண்டும் கேட்கிறேன் சொன்னால் கோபப்படமாட்டீர்களே,
முதலமைச்சர் அவர்கள்: நான் கோபப்படமாட்டேன் சொல்லுங்க.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,எங்கள் மருத்துவர் அன்புமணி அவர்களின் உடையைப் பற்றி சொல்கின்றீர்கள்.அவர் இந்த அவையிலே இல்லை.நீங்கள் கடந்த முறை 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்தீர்களே, அப்போது நீங்கள் ஒரு உடையணிந் திருந்தீர்களே, அது தமிழ் பெண்கள் அணிகின்ற உடையா? அது தமிழ்ப் பண்பாடா?
முதலமைச்சர் அவர்கள்: மிஸ்டர் ஜி.கே.மணி (ஆவேசமாக)....
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே இப்பதான் சொன்னீங்க... கோபப்படமாட்டேன்னு (இதற்குள்)
(அமைச்சர்கள்,உறுப்பினர்கள் ஆவேசமாக,கோபமாக ஏதேதோ வார்த்தைகள் உணர்ச்சி வசப்பட்டு)
எப்படி எங்க அம்மாவைப் பற்றி இப்படி கேட்கலாம்? (என்றார்கள்).
ஜி.கே.மணி: முதலமைச்சர் அவர்களே,நீங்கள் கோபப்பட மாட்டேன்னு சொன்னீங்க. அதனால் தான் சொன்னேன்.அதற்கு உங்கள் அமைச்சர்கள்,உறுப்பினர்கள் பேச்சை பாருங்கள்.இங்கே இருப்பவர்கள் எல்லாம் மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து வந்தவங்க.இதைவிட அதிகமா எனக்கும் பேசத்தெரியும். பா.ம.க நாங்க பனங்காட்டு நரிங்க. நாகரீகம் கருதி அமைதி காக்கிறோம்.
முதலமைச்சர் அவர்கள்: (எழுந்து நின்று,அவர்களைப் பார்த்து).யாரும் பேசாதீங்க,அமைதியா இருங்க, (எல்லோரும் அமைதி காத்தனர்) மணி நீங்க பேசுங்க.நான் கோபப்படல.
ஜி.கே.மணி: முதலமைச்சர் அவர்களே,நீங்க சொன்னதுக்கு நான் சொன்னேன்.உங்களை குறை சொல்லவில்லை.
ஜி.கே.மணி:முதல் அமைச்சர் அவர்களே,தஞ்சை பிரம்மாண்ட உலகத்தமிழ் மாநாட்டை பற்றி சொன்னீர்கள்.பாராட்டுக்கள். மாநாட்டில் நீங்கள் முன்வைத்த அறிவியல் தமிழ், கணினித் தமிழ்,அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதா ? தஞ்சையில் இவ்வளவு பிரம்மாண்ட மாநாடு நடத்திய இடத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் இருக்கிற தமிழ் வளர்ச்சிக்கான பல்கலைக்கழகம். அது மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா?
முதலமைச்சர் அவர்கள்:மணி நீங்கள்,தஞ்சைக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு போய் பாருங்கள்.நீங்களே ஆச்சரியப்படு வீர்கள், பாராட்டுவீர்கள். கூடுதலான நிதி ஒதுக்கீடு,புதிய கட்டிடங்கள், அடிப்படை வசதிகள், ஆராய்ச்சிகள் அதிகம் நடக்க ஏற்பாடு,ஆராய்ச்சி மாணவர்கள் அதிக அளவில் பயனடைய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. அதற்காகத்தான் அங்கே தஞ்சையிலே மாநாடு நடத்தினேன். தமிழ் என் ஆட்சி காலத்தில் இன்றும் வளரும்.என்றும் பொழிவுடன் உயர்ந்து நிற்கும் இதுவே எனது நோக்கம்.
முக்கிய நிகழ்வுகள் குறித்து நாளை தொடரும்... பகுதி - 19
No comments:
Post a Comment