தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள். பகுதி - 1
முன்னுரை: சட்டமன்றத்தில் உங்கள் அனுபவங்களை எழுதுங்களேன் என்று முக்கியமான ஒருவர் என்னிடம் சொன்னார்.அது சரியாக இருக்குமா? வேண்டாம் என்று நான் குறிப்பிட்டேன். எழுதுவது தவறு இல்லை மிக முக்கியமானது தான் என்று குறிப்பிட்டார் அந்த ஆலோசனையின் அடிப்படையில் நான் இதை எழுதத் தொடங்கினேன்.
மாநிலத்திற்குட்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல், அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டுதல், அதை பகிர்ந்து செலவிடுவதல், பொதுமக்களின் உரிமைகளை பாதுகாத்தல்,சட்டம் _ ஒழுங்கு நிலை நிறுத்துதல், அவ்வப்போது கொள்கை முடிவெடுத்தல், புதிய சட்டங்கள் நிறைவேற்றுதல், தேவைக்கேற்ப இருக்கும் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருதல், அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்,நீதி நிர்வாகம், சட்டம் பேணுதல்,மத்திய அரசிடமிருந்து நிதி பெறுதல்,மாநில தேவைக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றச் செய்தல், உள்ளாட்சி நிர்வாக மேம்பாடு போன்ற ஏராளமான செயல்திட்டங்களை நிறைவேற்றுகின்ற, சுருங்கச்சொன்னால் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு துறைகளின் வாயிலாக ஒட்டுமொத்த வளர்ச்சியை நிறைவேற்றுகின்ற அரசியலமைப்புச் சட்டத்தை மையமாக வைத்து சட்டமன்ற அமைச்சரவை, சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிக அதிகாரம் வாய்ந்தது சட்டமன்றம். அரசியல் கட்சி தன் கொள்கைகள், கோரிக்கைகள், சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு முன்வைக்கின்ற, வாதாடுகின்ற, நிறைவேற்றுகின்ற முக்கிய இடம் சட்டமன்றம்.
சட்டமன்றத்தில் சட்டப்பேரவை, சட்டமன்ற மேலவை என்ற இரண்டில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டு, அதன் பின்னர் சட்டமன்றப் பேரவை மட்டும் தமிழ்நாட்டில் உள்ளது. இதுபோல் இந்தியாவில் சில மாநிலங்களில் இரண்டும் உண்டு. ஒன்று மட்டுமே உள்ள மாநிலங்களும் உண்டு.
பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்றத்திற்குள் சென்று மருத்துவர் அய்யா அவர்களின் சிந்தனைகள், பா.ம.க வின் கொள்கைகள், அறிக்கைகள், போராட்டங்கள், சமூக பொருளாதார பிரச்சினைகள், தீர்வுகள், மக்களின் உரிமைகள், தேவைகள் என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வாதாடி புதிய சட்டங்களை உருவாக்கியது, தேவைக்கேற்ப சட்டங்களைத் திருத்தியது, அரசின் கொள்கை முடிவுகளில் மாற்றங்கள் என்று நிறைவேற்றப்பட்டது, அன்று திட்டமிட்டது இன்றும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருவதை எண்ணிப்பார்த்தால் சட்டமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தனி மரியாதையும்,பெருமைகளும் உண்டு. செய்த சாதனைகள் ஏராளம்,ஏராளம். இதை இன்றும் நினைத்தால் மிக பிரமிப்பாக உள்ளது.பா.ம.க சட்டமன்றத்தில் படைத்த சாதனைகள், வாதாடியவைகளை விவரித்தால் பல தொகுப்புகளாக ( VOLUME ) நிறைய புத்தகங்கள் எழுத வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
தமிழக சட்டமன்றத்தில் பா.ம.க விவாதித்து வந்ததை இன்னும் 25 ஆண்டுகள் நிறைவேற்றலாம் ஒவ்வொரு நாளும் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கைகள் மூலம் சொல்வதையும் பா.ம.க வின் போராட்டங்கள் குறித்தும் மக்களின் பிரச்சினைகள், தேவைகள், தீர்வுகள் குறித்தும் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்து மிக மிக சிறப்பாக செயல்பட்டனர், பா.ம.க விற்கு தனி மரியாதையும், பெருமையும் இருந்து வந்தது ஒவ்வொரு நாளும் வாதாடுவதை அவை உன்னிப்பாக கவனிக்கும். தமிழ்நாடே எதிர்பார்க்கும்.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சராக இருந்த மருத்துவர். அன்புமணி அவர்களின் 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், புகையிலை ஒழிப்பு,பொது இடங்களில் புகை பிடிக்க தடை,தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மேம்பாடு,லூதர் எல் டெர்ரி உள்ளிட்ட நான்கு விருதுகள் போன்ற ஏராளமான சாதனைகள் படைத்தார். ஏ.கே.மூர்த்தி, ஆர்.வேலு ஆகியோர் ரெயில்வே துறையில் சாதனை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பாடு பா.ம.க விற்கு மேலும் பெருமை சேர்த்தன.
இதனால் மருத்துவர் அய்யா அவர்கள் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ எந்த பதவிக்கும் செல்லாமல் சாதனை படைக்கின்ற, மக்களுக்காகவே போராடி வருகின்ற மகத்தான தலைவர் என்பதை நாடறியும். நாளைய வரலாறும் பேசும். _ மீண்டும் நாளையும் நாளை மறுநாளும் அதன்பின்னர் தொடர்ந்தும் குறிப்பிடுகின்றேன். (பகுதி- 2 நாளை தொடரும்.).
No comments:
Post a Comment