இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்....? - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை கவர்ந்தது. - Agnipuratchi

இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்....? - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை கவர்ந்தது.

Share This

இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்....? - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை கவர்ந்தது.

6. சுவாமி விவேகானந்தர்!
செப்டம்பர் 11 .... அமெரிக்கர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இது.

ஆம்.... 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி தான் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.  ஒசாமா பின் லேடனின் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நியூயார்க் நகரின் மன்ஹட்டன் பகுதியில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரங்கள், வெர்ஜினியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமை அலுவலகமான பெண்டகன் கட்டிடம், பெனிசில்வியாவில் உள்ள ஸ்டோனி கிரீக் நகரியம் ஆகியவற்றை விமானங்களை மோதச் செய்து தகர்த்தனர். இதில் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டன.  அமெரிக்கப் பொருளாதாரம் சீர்குலைந்தது. ஆனாலும், அடுத்த ஓராண்டில் அந்தத் தாக்குதலில் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளில் இருந்தும் அமெரிக்க மீண்டது; இன்னும் உலக வல்லரசாக திகழ்கிறது.

ஆனால், அதற்கு 108 ஆண்டுகளுக்கு முன் 1893-ஆம் ஆண்டில் அதே செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், இது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல.... பாசத் தாக்குதல். பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து ஓர் ஆண்டுக்குள் மீண்டு வந்த அமெரிக்கா, இரு நூற்றாண்டுகள் ஆகியும் இன்று வரை பாசத் தாக்குதலில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அன்று விதைக்கப்பட்ட அன்பில் மக்கள் கட்டுண்டு கிடக்கின்றனர்.

அத்தகைய தாக்குதலை நடத்திய 30 வயது இளைஞனின் பெயர் நரேந்திர நாத் தத்தா என்ற சுவாமி விவேகானந்தர்.

‘‘ இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்?’’ என்ற தொடரை முகநூலில் எழுதத் தொடங்கியது குறித்து உங்கள் அனைவருக்கும் நான் விளக்கியிருக்கிறேன். தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகள் என் மனதில் பெரும் கவலைகளை விதைத்திருக்கின்றன. கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசுக்கும், மக்களுக்கும் ஆலோசனை வழங்குவதில் பகல் பொழுது கழிந்து விட, இரவு நேரங்களில் தூக்கம் வருவது குறைந்து விட்டது. அந்த நேரத்தில் புதிது புதிதாக சிந்தனைகள் உருவாகும். அப்படி எழுந்த சிந்தனைகளில் ஒன்று தான் ‘‘இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்?’’ என்ற தொடரை முகநூலில் எழுதுவது ஆகும்.

யார், யாரைப் பற்றியெல்லாம் எழுதுவது என்று விரிவாக சிந்தித்து 5 பேர் கொண்ட பட்டியலைத் தயாரித்த போது அதில் சுவாமி விவேகானந்தரின் பெயர் இல்லை. ‘‘இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்?’’ என்ற தலைப்பில் அந்த 5 பேர் பற்றியும் எழுதிக் கொண்டிருந்த போதே பலரும் பின்னூட்டங்களில் வந்து  விவேகானந்தர் பற்றி எழுதுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். அதுமட்டுமின்றி, தொடர் முடிவடைந்த பிறகு எனது மருத்துவ நண்பர்களும், அரசியல் நண்பர்களும் தொடர்பு கொண்டு, ‘‘ என்ன தொடரை விரைவாக முடித்து விட்டீர்கள்? சுவாமி விவேகானந்தர் பற்றி நீங்கள் எழுத மாட்டீர்களா?’’ என்று உரிமையுடன் கேட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தான் சுவாமி விவேகானந்தரின் வரலாறை  இதோ உங்கள் முன் வைக்கிறேன்....

விவேகானந்தர் 1863-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், அப்போதைய இந்தியத் தலைநகரமாக கொல்கத்தாவில், மகர சங்கராந்தி ( நமது பொங்கல் திருநாள்) நாளான சனவரி 12-ஆம் தேதி பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா என்பதாகும். அவரது தந்தை விஷ்வநாத் தத்தா அன்றைய கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அவரது தாய் குடும்பத்தலைவி.

விவேகானந்தரின் தந்தை முற்போக்கு சிந்தனை கொண்டவர்; பகுத்தறிவாளர். விவேகானந்தரின் தாயாரோ ஆன்மிகச் சிந்தனை கொண்டவர். அவர்கள் இருவருடனும் பழகியதில் விவேகானந்தருக்கு கிடைத்த அனுபவம் மதங்களைப் பற்றிய தெளிவை ஏற்படுத்தியது. ஆயினும் தாயின் தாக்கம் அவரிடம் அதிகம் இருந்ததால் இளம் வயதிலேயே சிவ பெருமான், இராமர், சீதை, ஹனுமான் ஆகியோர் படங்கள் அல்லது சிலைகளைப் பார்த்தால் அந்த இடத்திலேயே அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கி விடுவது அவரது வழக்கமாக இருந்ததாம். அதுமட்டுமின்றி, துறவிகள், சந்நியாசிகளை எங்காவாது பார்த்தால், அவர்களிடம் சென்று அவர்களுக்கு சேவை செய்யத் தொடங்கி விடுவார். இப்படியாகத் தான் அவரது இளமைக்காலம் கழிந்தது.

இளம் வயதில் விவேகானந்தர் துருதுருவென இருந்திருக்கிறார். அவரை சமாளிப்பது அவரது தாய், தந்தையருக்கு கடினமானதாகத் தான் இருந்திருக்கிறது. ‘‘நாங்கள் சிவபெருமானிடம் எங்களுக்கு ஒரு நல்ல மகனைக் கொடு என்று தான் வேண்டிக் கொண்டோம். ஆனால், பாருங்கள்.... சிவபெருமான் அவரிடமிருந்த பேய்களின் ஒன்றை எங்களுடன் அனுப்பி வைத்து விட்டார்’’ என்று விவேகானந்தர் குறித்து அவரது தாய் வேடிக்கையாக கூறுவது உண்டாம். அப்படிப்பட்டவர் தான் பின்னாளில் சாதுவாகி இருக்கிறார்.

கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்த விவேகானந்தர், அங்குள்ள மாநிலக் கல்லூரியில் 21-ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். அத்துடன் மேல்நாட்டு அறிஞர்களின் நூல்களையும், இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களையும் கற்றுத் தேர்ந்தார். கல்லூரியில் படிப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். ‘‘ நரேந்திரன் மிகப்பெரிய புத்திசாலி. நான் உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். பல மனிதர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், நரேந்திரன் அளவுக்கு திறமையும், அறிவும் கொண்ட மாணவனை நான் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களிலோ, தத்துவவியல் மாணவர்களிலோ கண்டதில்லை. அவர் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய முத்திரையை படைப்பார் ’’ என்று விவேகானந்தர் படித்த மாநிலக் கல்லூரியின் முதல்வர் வில்லியம் ஹேஸ்டீ கூறியிருக்கிறார் என்பதிலிருந்தே அவரின் திறமைகளை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

1881-ஆம் ஆண்டு தமது 18 வயது வயதில் இராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்து, அவரது சீடராக சேர்ந்து கொண்டார். 1884-ஆம் ஆண்டில் தமது தந்தை காலமான நிலையில் தம்மை முழுமையாக  இராமகிருஷ்ணர் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். அடுத்த ஆண்டே இராமகிருஷ்ணருக்கு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டது. அவரது இறுதிக் காலத்தில் விவேகானந்தர் தான் அவரை நன்றாக கவனித்துக் கொண்டார். அதனால், தமக்கு பிறகு விவேகானந்தரை குருவாக ஏற்றுக் கொள்ளும்படி மற்ற சீடர்களையும் இராமகிருஷ்ணர் கேட்டுக் கொண்டார். காசிப்பூரில் 1986-ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.
அதன்பின்னர் இராமகிருஷ்ணரின் மடத்திற்கு விவேகானந்தர் தலைமைப் பொறுப்பு ஏற்றார். ஆனால், அந்த மடம் இராமகிருஷ்ணரால் வாடகைக்கு எடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அந்த  மடத்திற்கு வாடகை கட்டப்படாததால், அதை அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார். தங்குவதற்கு வேறு மடம் இல்லாமல் தவித்த காலத்தில் விவேகானந்தருடன் இருந்த சீடர்கள் பலர் பிரிந்து சென்று திருமண வாழ்க்கையை தொடங்கி விட்டனர். அதன்பிறகு வேறு ஒரு மடத்தை வாடகைக்கு எடுத்து நடத்தினார் விவேகானந்தர். அது தான் முதலாவது இராமகிருஷ்ணர் மடம் என்று அழைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 1888-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆன்மிக உரை நிகழ்த்தத் தொடங்கினார் விவேகானந்தர். அது தான் அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பிறகு தான் விவேகானந்தரின் புகழ் வெளிச்சம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.

விவேகானந்தர் கொல்கத்தாவில் பிறந்தவர் என்றாலும் கூட, அவரது ஒவ்வொரு முன்னேற்றத்தின் பின்னணியிலும் தமிழகமும், தமிழர்களும் தான் உள்ளனர். விவேகானந்தரை உலகுக்கு அடையாளம் காட்டியது சிகாகோ நகரில் நடைபெற்ற சமய மாநாட்டில் அவர் ஆற்றிய உரை தான். ஆனால், அந்த உரையை நிகழ்த்த அவருக்கு அழைப்பு வரவில்லை. அந்த அழைப்பு வந்தது தமிழரான இராமநாதபுரம்   பாஸ்கர சேதுபதி மன்னருக்குத் தான். பாஸ்கர சேதுபதி மன்னர் சமய ஞானமும், ஆன்மிக ஞானமும் கொண்டவர். அந்த வகையில் சிகாகோ மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வந்தது.

ஆனால், அதற்கு முன்பாக 1892-ஆம் ஆண்டு மதுரை வந்த விவேகானந்தர் பாஸ்கர சேதுபதியின்  அரண்மனையில் தங்கினார். அப்போது விவேகானந்தரின் உரையை கேட்ட பாஸ்கர சேதுபதி, தமக்கு பதிலாக உலக சமய மாநாட்டில் உரையாற்ற விவேகானந்தரை அனுப்பி வைத்தார். அதற்கான செலவு முழுவதையும் மன்னர் பாஸ்கர சேதுபதியே ஏற்றுக்கொண்டார். பாஸ்கர சேதுபதியின் வேண்டுகோளை ஏற்று விவேகானந்தர் 1893-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி சென்னையிலிருந்து கப்பலில் புறப்பட்ட  விவேகானந்தர் ஜூலை மாதம் அமெரிக்கா சென்றடைந்தார்.

சிகாகோ நகரில் 1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி தான் உலக சமயங்கள் மாநாடு தொடங்கியது. முதல் நாளே விவேகானந்தர் உரையாற்ற அழைக்கப்பட்டார். மாநாட்டில் பேசிய பலரும் அங்கு கூடியிருந்தவர்களை லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் ( சீமான்களே, சீமாட்டிகளே) என்று தான் விளித்தனர்.

ஆனால், சுவாமி விவேகானந்தரோ, மேடைக்கு சென்றவுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி  தேவியின் படத்தை தொட்டு வணங்கினார். அப்போது அவரது உடலுக்குள் வேறு எவரோ ஒருவரின் ஆன்மா புகுந்து கொண்டதைப் போல உணர்ந்தார். ஒலிவாங்கி முன் சென்று நின்ற விவேகானந்தர், அங்கு கூடியிருந்தவர்களை அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே (Sisters and brothers of America!) என்று அழைத்தார். அதைக் கேட்டதும் அந்த அரங்கத்தில் கூடியிருந்த 7 ஆயிரம் பேரும்  எழுந்து நின்று கைத்தட்டி விவேகானந்தருக்கு மரியாதை செய்திருக்கின்றனர். அந்தக் கைத்தட்டல் ஒலி அடங்க இரு நிமிடங்கள் ஆனதாம். அதன்பிறகு தான் விவேகானந்தர் உரையை தொடர்ந்துள்ளார்.

‘‘இனவாதம், மதசார்பு இவற்றால் உருவான கொடூர விளைவுகள், அழகிய இந்த உலகை நெடுங்காலமாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை வன்முறையால் நிரப்பியுள்ளன. உலகம் ரத்த வெள்ளத்தால் சிவந்துவிட்டது. எத்தனை நாகரீகங்கள், எத்தனை நாடுகள் அழிக்கப்பட்டன என்பதையும் சரியாக சொல்லிவிடமுடியாது. இதுபோன்ற ஆபத்தான அரக்கர்கள் இல்லை என்றால், மனித சமுதாயம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவற்றிற்கான காலம் முடிந்துவிட்டது. இந்த மாநாட்டின் குரலானது அனைத்து விதமான மத வெறிகளுக்கும், வெறித்தனமான கொள்கைகளையும், துயரங்களையும் அழிக்கும் என்று நான் நம்புகிறேன். அது வாளால் ஏற்பட்டாலும் சரி, பேனாவினால் ஏற்பட்டாலும் சரி’’ என்பது தான் விவேகானந்தர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சமாகும்.

விவேகானந்தரின் இந்த உரை அமெரிக்கர்களைக் கட்டிப்போட்டது. அதைத் தான் அமெரிக்காவில் விவேகானந்தர் செப்டம்பர் 11-ஆம் தேதி நடத்திய பாசத் தாக்குதல் என்று குறிப்பிட்டேன். அவரது உரையில் நெகிழ்ந்த அமெரிக்கர்கள், அந்த மாநாட்டில் செப்டம்பர் 15, 19, 20, 26, 27 ஆகிய 5 நாட்கள் கூடுதலாக உரையாற்ற வாய்ப்பளித்தனர்.

சிகாகோ மாநாட்டில் சகோதர, சகோதரிகளை மட்டும் அவர் வென்றெடுக்கவில்லை. தாயையும் அவர் வென்றெடுத்தார். விவேகானந்தர் அடிப்படையில் ஒரு துறவி.... பற்றற்றவர். ஆனால், சிகாகோ மாநாட்டில் அவர் ஆற்றிய அற்புதமான உரையைக் கேட்ட 20 வயது அமெரிக்க பெண்ணுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. அதை விவேகானந்தரிடம் தெரிவிக்க, அவர் சென்ற இடம் அனைத்துக்கும் பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால், அவரை விவேகானந்தர் கண்டுகொள்ளவில்லை.

சிகாகோ மாநாடு முடிவடைந்த பின்னர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன், நியுயார்க், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், அயோவா உள்ளிட்ட நகரங்களிலும் பேச அவருக்கு அழைப்பு வந்தது. அங்கும் விவேகானந்தரை அந்த பெண் பின்தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் விவேகானந்தரை சந்தித்த அந்த பெண் தனது விருப்பத்தை நயமாக தெரிவித்தார்.

‘‘அமெரிக்க இளைஞர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் சேர்ந்த குழந்தை பிறக்கும்’’ என்று கூறினார் அந்த இளம்பெண்.

அதைக்கேட்ட விவேகானந்தர் அடுத்த பாசத் தாக்குதலை நடத்தினார். ‘‘தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 வயது இருக்கும். நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அறிவுமிக்க குழந்தை தான் உங்களின் தேவை என்றால், என்னை மணப்பதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே’’ என்று விவேகானந்தர் கூறினார். அதற்கு அந்த பெண்ணிடம் பதில் இல்லை.  விவேகானந்தரை வணங்கிய அந்த பெண் அங்கிருந்து சென்றாள்.

அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் கரையிறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தரையில் படக்கூடாது என்றும், தன் தலையில் பட்ட பிறகே அவர் தரையில் கால் வைக்க வேண்டும் என்று கூறி முழங்காலிட்டு அமர்ந்தார் சேதுபதி மன்னர். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட விவேகானந்தர்,  தரையில் இறங்கி  மன்னர் சேதுபதியை எழுப்பி கட்டித் தழுவினார். பின்னர் பாஸ்கர சேதுபதி மன்னரை தமது இராஜகுருவாக ஏற்பதாக அறிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆன்மிக உரைகளை நிகழ்த்தினார். அதன் மூலம் கிடைத்த பணத்தில் பல இடங்களில் இராமகிருஷ்ணர் மடங்களை அமைத்து, மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்.

விவேகானந்தர் அமெரிக்க செல்வதற்கு முன்பாக 1892-ஆம் ஆண்டு திசம்பர் 24-ஆம் தேதி கன்னியாகுமரி சென்றார். அப்போது கரையிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவுக்கு கடலில் நீந்தி சென்று, அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் அமர்ந்து தியானம் செய்தார். அங்கு தான் பின்னாளில் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி 1970-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஏராளமான சர்ச்சைகள் நடந்தது தனி வரலாறு.

1888-ஆம் ஆண்டில் தொடங்கி 1902-ஆம் ஆண்டு வரை இந்தியாவிலும், உலக நாடுகளிலும் ஆன்மிக உரையாற்றி வந்தார். 1898-ஆம் ஆண்டில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு ஆஸ்துமா, நீரிழிவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்தன. ஆனால், அவற்றை பொருட்படுத்தாமல் 1899-ஆம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா, வியன்னா, துருக்கி, ஏதென்ஸ், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் பயணம் செய்து ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஜப்பான் பயணத்தை ரத்து செய்து இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பிய பிறகும் அவர் ஓய்வெடுக்காமல் புத்தகயா, வாரணாசி ஆகிய இடங்களுக்கு சென்றாதால் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அதைத் தொடர்ந்து கொல்கத்தா அருகில் உள்ள பேலூரில் அவரால் நிறுவப்பட்ட இராமகிருஷ்ண மடத்திற்கு 1902 ஜூலை 4-ஆம் தேதி சென்ற  விவேகானந்தர் நீண்ட நேரம் தியானம் செய்தார். பின்னர் அங்கு வேத கல்லூரி அமைப்பது குறித்து தமது சீடர்களுடன்  விவாதித்து விட்டு, இரவு 7 மணிக்கு அவரது அறைக்கு சென்றார். அங்கு தியானம் செய்த நிலையில் இரவு 9.20 மணிக்கு உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 39!

இளைஞர்கள் மூலம் உலகை மாற்ற முடியும் என்று அவர் நம்பினார். அதனால் தான் இளைஞர்களை உற்சாகமூட்டும் வார்த்தைகளை அவர் பேசினார். ‘‘எல்லாமே கிடைத்துவிடும். ஆனால் வலிமையான, வீரியமான, நம்பிக்கைக் கொண்ட துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றைய தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்” என்று அவர் கூறியது இளைஞர்களிடம் நம்பிக்கையை விதைப்பதற்காகத் தான்.

உலகம் முழுவதையும் அன்பால் வென்ற விவேகானந்தர் 60 வயதைக் கடந்து வாழ்ந்திருந்தால் உலகில் மதங்களிடையே அன்பு பெருகி, அமைதி நிலைத்திருந்திருக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages