தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி -21
சட்டமன்றத்தில் பா.ம.க பங்காற்றிய ஒரு சில நிகழ்வுகள் மட்டும் குறிப்பிட்டு வருகின்றேன்.இன்னும் மருத்துவம்,மக்கள் நல்வாழ்வு, பாசனம்,பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள்,காவல்துறை, துறைமுகங்கள்,மதுஒழிப்பு, போக்குவரத்து போன்று மேலும் நிறைய எழுதப்பட உள்ளது. இடையிடையே வெவ்வேறு நிகழ்வுகள் குறித்தும் சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டதால் இங்கு குறிப்பிடுகின்றேன்.
தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கல்விக்கண் திறந்த காமராஜர் நூற்றாண்டுவிழா பா.ம.க சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடத்தி மருத்துவர் அய்யா அவர்கள் வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.அந்த விழா காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை கண்காட்சியாக வைத்து, காமராஜருடன் இருந்தவர்களை அழைத்து ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாக 2 நாட்கள் நடத்தப்பட்டது.
(சட்டமன்றத்தில் ஒரு நாள்)
ஜி.கே.மணி:பேரவைத்தலைவர் அவர்களே,முதலமைச்சர் அவர்களுக்கும் தெரிந்த செய்தி தான்.இருப்பினும் முக்கிய செய்தி எனக்கருதி அவையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 1954 ஆண்டு முதல் 9 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து நிறைய சாதனைகள் படைத்துள்ளார்.அன்று முதல் இன்று வரை பேசப்படுவது, ஏழைகள் கல்வி பெற வேண்டும் என்று கிராமங்களிலேயே பள்ளிக்கூடங்கள் திறந்துள்ளார்.குலக்கல்வித் திட்டத்தால் மூடப்பட்ட 6,000 பள்ளிகளைத் திறந்து வைத்ததோடு 17,000 பள்ளிகள் திறந்து இந்தியாவிலேயே அதிக பள்ளிக்கூடங்களை திறந்தவர், "கல்விக்கண் திறந்த காமராஜர்" என்று பாராட்டப்பட்டவர்.
ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்தபோது ஆடு மேய்க்கும் சிறுவனைப் பார்த்தவுடன் காரை நிறுத்தி அவனிடம் சென்று,தம்பி படிக்கிற வயசுல படிக்கப் போகாம, ஆடு மேய்க்கிறயே என்று கேட்டாராம்.அந்தச் சிறுவன் உடனே எங்க ஊரிலே பள்ளிக்கூடங்கள் இருந்தால்தானே படிக்கறதுக்கு என்று சொல்ல,உடனே காமராஜர் பள்ளிக்கூடம் உங்க ஊருக்கு வந்தா படிக்கப் போவியா? என்று கேட்க, மீண்டும் அந்தச் சிறுவன் பள்ளிக்கூடம் போயிட்டா சாப்பாடு யார் போடுவாங்க என்றானாம். உடனே காமராஜர் சாப்பாடு போட்டா பள்ளிக்கூடம் போவியா? என்று கேட்க,அந்தச் சிறுவன் பள்ளிக்கூடம் போவேன் என்று சொன்னானாம்.
உடனே சென்னை வந்தவுடன் அதிகாரிகளை அழைத்து ஏழைக்குழந்தைகள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பள்ளிக்கூடம் போகாமல் உள்ளனர்.எனவே பள்ளிக்கூடம் திறப்பது மதிய உணவு போட வேண்டுமென்று "மதிய உணவுத் திட்டம்" கொண்டு வந்தவர்.
"வயிற்றுக்கு சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்" என்று பாடிய பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் மதிய உணவு திட்டத்தை தொடங்கினார்.
அப்போது மருத்துவப்படிப்பு விண்ணப்பித்துள்ள மாணவர் பெயர் பட்டியல் சேர்க்கையில் 20 இடங்கள் முதலமைச்சர் ஒதுக்கீடு(QUATA) இருந்துள்ளது.அதற்காக அரசின் தலைமைச் செயலாளர், விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பெயர் பட்டியல் மதிப்பெண்னுடன், கொண்டு வந்து முதலமைச்சரிடம் கொடுத்தாராம்.அதை பார்த்துவிட்டு,மாணவர்களின் விண்ணப்ப படிவங்களையும் எடுத்து வாருங்கள் என்றாராம் காமராஜர். உடனே விண்ணப்பங்களை எல்லாம் பார்த்து 20 மாணவர்கள் பெயரையும் தேர்வு செய்து,தலைமைச் செயலாளரிடம் கொடுத்தாராம்.அந்த 20 பேர் விண்ணப்பங்களிலும் எல்லாம் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில் "கைரேகை" வைக்கப்பட்டவர்களாம்.படிக்காத ஏழைகளுன் குழந்தைகளும் மருத்துவம்(M.B.B.S)படிக்க வேண்டும் என தேர்வு செய்தாராம்.
இன்றும் தமிழ்நாட்டில் உயர்ந்த நிற்கின்ற சாத்தனூர் அணை (திருவண்ணாமலை),கிருஷ்ணகிரி அணை,பவானிசாகர் அணை, வைகை அணை,ஆரணியாறு அணை,மணிமுத்தாறு அணை, அமராவதி அணை,வீடூர் அணை (விழுப்புரம்),பரம்பிக்குளம்_ஆழியாறு அணை,மலம்புழா(பாலக்காடு) அணை போன்ற பெரிய அணைகளை கட்டியவர்.மலம்புழா அணை மொழிவழி மாநிலம் பிரிகின்ற போது கேரளாவுடன் சேர்ந்துவிட்டது.காவிரி பாசன கால்வாய்களை வெட்டியவர்.
தமிழ்நாட்டில் சென்னையில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை,நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலை,சேலம் உருக்காலை,திருச்சி மிகுமின் (BHEL) தொழிற்சாலை,ஊட்டி போட்டோ பிலிம் தொழிற்சாலை,கல்பாக்கம் அனுமின் நிலையம் போன்ற பல பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வந்தவர்.
இவ்வாறு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அரிய சாதனைகள் படைத்துள்ளார்.இவர் பிறந்த நாளை "கல்வி தினம்"ஆக கொண்டாட வேண்டும்.அதைச் செய்வதன் மூலம் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து மேலும் கல்வி வளர்ச்சிக்கு அக்கறை எடுத்துக்கொள்ளப்படும். அந்த நாளை உணர்ந்து அரசும் கல்வி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது,புதிய திட்டங்கள் அறிவிப்பது போன்று ஆக்கப்பூர்வமாக அமையும்.மற்ற தலைவர்கள் பிறந்த நாட்கள் கொண்டாடுகிற வேளையில் தமிழ்நாட்டில் பிறந்தவர், "பச்சைத் தமிழர்" என்று அழைக்கப்பட்ட காமராஜருக்கு விழா எடுக்கலாமே!
'பச்சை தமிழர்' காமராஜர் 1903 ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15 ஆம் நாள் பிறந்துள்ளார். எனவே முதலமைச்சர் அவர்களே, காமராஜர் பிறந்த தினத்தை "கல்வி நாள்" ஆகக் கொண்டாட வேண்டும். இவ்வாறு பலமுறை தொடர்ந்து வாதாடினேன்.கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்தேன்.
நீண்ட நாட்கள் கழித்து பா.ம.க உறுப்பினர்கள்,காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 42 பேரிடமும் கையெழுத்து வாங்கி முதலமைச்சர் கலைஞர் அவர்களிடத்தில் கொடுத்து நீங்கள் காமராஜர் பிறந்த தினத்தை "கல்வி நாள்"ஆக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
மீண்டும் ஒரு நாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் 2006 ஆம் ஆண்டில் காமராஜர் பிறந்தநாள் ஜூலை 15 "கல்வி வளர்ச்சி நாள்"ஆக அறிவிக்கின்றேன்.2006 இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப் படும் என்று அறிவித்தார்.
அவையில் அனைவரும் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நானும் மற்ற கட்சி உறுப்பினர்களும் காமராஜரின் பெருமையை பாராட்டி பேசினோம். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தோம்.
2006ம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் ஜூன் 15 கல்வி வளர்ச்சி நாள் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சில நாட்கள் கழித்து...
ஒருநாள் முன்னாள் முதலமைச்சர் அம்மையார் அவர்கள் தொலைபேசியில் மிஸ்டர் மணி,என் மீது வழக்கு போட்டிருக்காங்க வழக்கை நான் பார்த்துக்கொள்கிறேன்.நான் விசாரணைக்கு போகும்போது அந்த கட்டிடத்தில் மின்சாரத்தை கட் பண்ணி,லிப்ட் வேலை செய்யாமல், மாடிப்படியேறி போகும் நிலையை உருவாக்குகிறார்கள்.மாடிப்படியேறுவது மிகவும் சிரமமாக உள்ளது. எனக்கு மூட்டுவலி.இப்படி கூடவா பழிவாங்குறது! இதையெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா ? சட்டமன்றத்தில் நீங்க நல்லா பேசற நபர் எதிர்க்கட்சி வரிசையில் கட்சித் தலைவராக இருக்கீங்க.அரசாங்க கமிட்டி சேர்மனா வேற இருக்கீங்க. இதைக் கேட்க மாட்டீங்களா மணி என்றார்.
நானும் கட்டாயம் பேசுகிறேன் என்று சொன்னேன்.
(பின்னர் ஒரு நாள்).
ஜி.கே.மணி:முதல் அமைச்சர் அவர்களே,முன்னாள் முதலமைச்சர் அம்மையார் அவர்கள் மீது வழக்கு இருக்கிறது.வழக்கு நீதிமன்ற பிரச்சனை,அதைப்பற்றி நான் பேசவில்லை.அவர் விசாரணைக்கு செல்லும்போது அந்த கட்டிடத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின்தூக்கி (LIFT) வேலை செய்வதில்லையாம் அவர் மாடிப்படி ஏறி நடந்தே செல்கின்ற சூழ்நிலை.இப்படி தொடர்ந்து நடக்கிறதாம்.
அவருக்கு மூட்டு வலி,உடல் பருமன்,படியேறி செல்வது மிகவும் கஷ்டம்.எனவே முதலமைச்சர் அவர்களே,இதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.ஆவன செய்ய வேண்டும்.
முதலமைச்சர் அவர்கள்:மணி அவர்களே,(ஆவேசமாக)அங்கே மின்தூக்கி (LIFT)வேலை செய்யவில்லை என்பது எனக்கு எப்படி தெரியும்? எவ்வளவு வேலை இருக்கு.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது முதலமைச்சரின் வேலையா? மணி ஏதேதோ பேசுகின்றீர்கள்.
ஜி.கே.மணி:முதல் அமைச்சர் அவர்களே,அம்மையார் அவர்கள் முன்னாள் முதலமைச்சர்,பெரிய கட்சியின் தலைவர்,அவருக்கு மூட்டு வலி உள்ளது.உடல் பருமன்.படியில் ஏறிச் செல்வது எவ்வளவு சிரமமாக இருக்கும்.அவர் செல்லும்போது மட்டும் எப்படி மின்சாரம் போய்விடும்? இது தொடர்ந்து நடக்கிறதே ? இது திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாக சொல்கிறார்களே!
முதலமைச்சர் அவர்கள்:எனது அருமை நண்பர் "கண்மணிக்கு இந்தப் பெண்மணி" மீது என்ன கரிசனம்.ஏன் இவ்வளவு அக்கறை ?
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,கரிசனம் இல்லை.நீங்கள் குறிப்பிட்டதைப் போல அவர் ஒரு பெண்.முன்னாள் முதலமைச்சர்.அவர் சிரமப்படும் சூழ்நிலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
முதலமைச்சர் அவர்கள்: நண்பர் மணி அவர்களே,கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.நடவடிக்கை எடுக்கின்றேன்.
மற்றவை அடுத்த நாள் தொடரும்... பகுதி 22
No comments:
Post a Comment