அன்புக்குரிய பாட்டாளி சொந்தங்கள், சகோதர சகோதரிக ளுக்கு, பாமக தலைவர் ஜி.கே. மணி மடல் - Agnipuratchi

அன்புக்குரிய பாட்டாளி சொந்தங்கள், சகோதர சகோதரிக ளுக்கு, பாமக தலைவர் ஜி.கே. மணி மடல்

Share This

அன்புக்குரிய பாட்டாளி சொந்தங்கள், சகோதர சகோதரிக ளுக்கு, பாமக தலைவர் ஜி.கே. மணி மடல்
    
வணக்கம்.உங்கள் நலனையும் குடும்பத்தினர் நலனையும் அறிய விரும்புகிறேன்.கொரோனா கொடிய தொற்று அச்சுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேல் குடும்பத்துடன் முடங்க வைத்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.நீங்களும் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.உங்கள் மனதில் எவ்வளவு கலக்கமும்,வேதனையும் இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகள் பள்ளி கல்லூரி செல்வது,குடும்பத்துடன் வெளியே சென்று வருவது வீட்டு வேலை, தொழில் போன்ற எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நிற்கும் நெருக்கடி காலம். வரலாற்றில் இதுவரை கண்டிராத சோகக் காலம். சோதனைக் காலம்.இது நமக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் மனித குலத்திற்கே ஏற்பட்ட வேதனையில் நாமும் இருக்கிறோம் என மனதை சற்று தேற்றிக் கொள்ள வேண்டும்.
  
பாட்டாளி மக்கள் கட்சி,வன்னியர் சங்கம்,சமூக முன்னேற்ற சங்கம், பசுமைத்தாயகம்,வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை,பாட்டாளி இளைஞர் சங்கம்,பாட்டாளி மகளிர் சங்கம்,பாட்டாளி இளம்பெண்கள் சங்கம்,பாட்டாளி மாணவர் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம்,பாட்டாளி சமூக ஊடகப் பேரவை,அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை உள்ளிட்ட நமது அமைப்புகளில் உள்ள அனைவரும் மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள் கிறேன்.
  
நமது பொறுப்பாளர்களின் உழைப்பும்,இளைஞர்களின் எழுச்சியும் உற்சாகமும் நமக்கு மிகப்பெரிய பலத்தையும் சக்தியையும் கொடுத் திருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். எனக்கு கைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது.எடுத்துப் பேசினால் ஒரே சோகக் கதையையே சொல்கிறார்கள்.

நமது இயக்கத்தின் அடிமட்ட அனுதாபிகள் பொதுமக்கள் நிறைய பொருளாதார நெருக்கடியையும் சொல்லி புலம்புகிறார்கள்.பல்வேறு இடங்களில் காவல் நிலையப் பிரச்சினை உள்ளிட்ட வெவ்வேறு பிரச்சினைகளும்,நமது இயக்கத்தவர் களை வாட்டி வதைக்கிற செய்தி என் மனதை மிகவும் வேதனை அடையச் செய்கிறது.கடந்த 3 , 4  நாட்களாக எனக்கும் ஒரே கலக்கம். கண் கலங்கும் நிலை ஏற்படுகிறது. எனக்கே இந்த மனநிலை என்றால் உங்கள் மனவேதனை எப்படி இருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்கின்றேன்.
   
நான் நமது பொறுப்பாளர்கள், செயல்வீரர்களுடன் தினமும் கைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கின்றேன்.நாம் அடிக்கடி தைலாபுரம் தோட்டம் அரசியல் பயிலரங்கத்தில் கூட்ட நிகழ்ச்சியில் மருத்துவர் அய்யா அவர்கள், மருத்துவர் அன்புமணி எம்.பி அவர்கள் மற்றும் நாம் அனைவரும் சந்திப்போம்.நானும் எல்லா மாவட்டத்திற்கும் செயற்குழு, பொதுக்குழு,கூட்டங்கள், திருமணங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சுற்றிச்சுற்றி வந்த போதெல்லாம் உங்களை சந்தித்துப் பேசுவேன்.கடந்த 2 மாதங்களுக்கு மேல் சந்திக்க இயலாத நிலை.
  
ஆரம்ப காலத்திலிருந்து இருக்கின்ற மூத்த நிர்வாகிகள்,பிறகு இணைந்தவர்கள், வீரமிக்க இளைஞர்கள்,பெண்கள், செயல்வீரர்கள் என அனைத்து நிர்வாகிகளின் உழைப்பு சாதாரணமானது அல்ல.ஈடு இணையற்றது.நம்முடைய இயக்கத்தில் உள்ளவர்களின் உழைப்புக்கு இணையாக வேறு யாரும் உழைக்க முடியாது.
  
மருத்துவர் அய்யா அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கான வேலையை சொன்னால்,தலைமையிலிருந்து நானும் உங்களிடம் கூறினால் எவ்வித தயக்கமுமின்றி,சரி என்று ஒப்புக்கொண்டு உடனே நிறைவேற்றும் உழைப்பு மிக்கவர்கள்.வேறு வேலை இருக்கிறதே,பொருளாதார நெருக்கடி இருக்கிறதே என்பதையெல்லாம் எண்ணாமல் எதையும் எதிர்பார்க்காமல் கொள்கை பிடிப்புடன்,உயர்ந்த லட்சியத்துடன், மருத்துவர் அய்யா அவர்கள் சொல்வதே வேதவாக்கு என எண்ணி உழைப்பவர்கள்.
   
மருத்துவர் அய்யா அவர்கள் தமிழ்நாட்டின் பெரிய சக்தியாக விளங்கி உறுதியுடன் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதை எண்ணிப் பார்க்கிறோம்.கடந்த காலங்களில் கரடுமுரடான பாதைகள்,நெருக்கடிகள், சோதனைகள் நெருப்பாற்றில் நீந்துவது போல இயக்கத்தை வழி நடத்துகின்ற அசாத்தியதுணிச்சல், தன்னம்பிக்கை
விடாமுயற்சி மருத்துவர் அய்யா அவர்களின் பெருமைகளே அனைவரையும் இயக்குகிறது.
  
மருத்துவர் அன்புமணி அவர்கள் மத்தியமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகள்,அவரது திறமைகள், முன்னெடுத்துச் செல்லும் பாங்கு நமது இயக்கத்திற்கு பெரிய வலிமையாக அமைந்துள்ளது.நமது சட்டமன்ற நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள்,நமது அனைத்து அமைப்புகளைச் சார்ந்தவர்களின் உழைப்பு,தியாகம்,அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடு,உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் இன்னாள் பிரதிநிதிகள்,எந்த பொறுப்பிலும் இல்லாத செயல் வீரர்கள்,அனுதாபிகள் எல்லோரின் உழைப்பே நமது இயக்கத்தை வலுவுடன் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை பெருமையாக எண்ணிப் பார்க்கின்றேன்.
  
மனம் தளராதீர்கள்.கொரோனா ஒழியும்.விரைவில் விடியல் வரும்.குடும்பம் ஆரோக்கியமாக_ மகிழ்ச்சியாக இருக்கும்.உங்கள் தொழில் வளரும் வருவாய் பெருகும்.நாமும் சந்திப்போம், இணைந்து பணியாற்றுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் இருங்கள். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் (மாஸ்க்) அணிவதையும், சமூக இடைவெளியையும் தவறாமல் கடைபிடியுங்கள்.
    
நீங்களும் குடும்பத்தினரும் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
                                              இவண்,    
                                         அன்பு மறவாத 
                                         ஜி.கே.மணி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages