முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 23 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 23

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 23

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

22. சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளும்,
     கலைஞர் அரசு பரிசளித்த துரோகங்களும்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு வரை இன்றைய தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளையும், இன்றைய ஆந்திரத்தின் பெரும்பான்மையான நிலப்பரப்புகளையும் உள்ளடக்கிய அரசாட்சிப் பகுதியாக திகழ்ந்தது சென்னை மாகாணம் ஆகும். இது தான் சமூகநீதியின் தொட்டிலாக திகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்திய விடுதலைக்கு முன் சென்னை மாகாணத்தில் 100% இடப் பங்கீடு அளிக்கப்பட்டது குறித்தும், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தனி இட ஒதுக்கீடு 1947-ஆம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது குறித்தும் தொடக்க அத்தியாயங்களில் மிகவும் விரிவாக பார்த்தோம்.

1950-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான புதிய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், செண்பகம் துரைராஜன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் 1927-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு, 1947-ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட 100% வகுப்புவாரி  இடப்பங்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தன. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தந்தைப் பெரியார் தலைமையில் வெடித்த போராட்டத்தின் பயனாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது குறித்தும், அதைத் தொடர்ந்து 1951-ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25% இட ஒதுக்கீடு, பட்டியலினத்தவருக்கு 15% என தமிழ்நாட்டில் 40% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்தும் விரிவாக விளக்கியிருந்தேன்.

அதன்பின் 1951-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியான போது, தமிழகத்தில் பட்டியலினத்தின் மக்கள்தொகை 16% ஆக அதிகரித்திருந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் 1954&ஆம் ஆண்டில் பட்டியலினத்துக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 16% ஆகவும், மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 41% ஆகவும் உயர்த்தப்பட்டதை தவிர, 1954-ஆவது ஆண்டுக்கு பிந்தைய 17 ஆண்டுகளில் தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் எந்த மாற்றமும், முன்னேற்றமும் நிகழவில்லை.

இந்த காலத்தில் தான் மாநில அரசுகள் அவற்றின் இட ஒதுக்கீட்டை தீர்மானித்துக் கொள்வதற்காக   மாநில அளவில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சுதந்திரம் அளித்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்பட்ட தமிழகத்தில்  அத்தகைய ஆணையம் எதுவும் அமைக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1969-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கான முதலாவது மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் தலைவராக சுங்கத்துறை ஆட்சியராக இருந்து ஓய்வுபெற்ற  அதிகாரி சட்டநாதன் நியமிக்கப்பட்டார். ஆணையத்தின் உறுப்பினர்களாக மாவட்ட அமர்வு நீதிபதிகள் சின்னப்பன், ஜமால் உசேன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் இயக்குனர் அலுவல் வழியாக ஆணையத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 16&ஆம் தேதி ஆணையத்தின் பணிகள் தொடங்கின.

ஆணையத்திற்கு மொத்தம் 4 பணிகள் அளிக்கப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:

1. தமிழ்நாட்டில்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழக அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்தல்.  பிற்படுத்தப்பட்டோரின் நிலையை முன்னேற்றுவதில், குறிப்பாக கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் அவர்களின் நிலையை  முன்னேற்றுவதில் அந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்தன? என்பதை மதிப்பீடு செய்தல்.

2. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட சலுகைகள், முன்னுரிமைகள், பயன்கள் ஆகிவற்றால் விளைந்த நன்மைகளை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மதிப்பீடும், ஆய்வும் செய்யும்.  கல்வி மற்றும் பிற விஷயங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் ஆணையம் ஆராயும்.

3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் சார்ந்த கீழ்க்கண்ட விவகாரங்களில் அவர்களின் நிலைமையை மேம்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்  குறித்து அரசுக்கு ஆணையம் பரிந்துரைகளை வழங்கும்.

1. தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குதல்.
2. அரசு பணிகளில் பிரதிநிதித்துவம்
3. வணிகம், வர்த்தகம், தொழில்துறைகள்
4. ஊரகக் கடன், சந்தைப்படுத்துதல், கூட்டுறவு
5. வீட்டுவசதி
6. மானியங்கள்
7. சமுதாய மேம்பாடு

4. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நீண்டகால, குறுகிய கால நடவடிக்கைகள் குறித்து ஆணையம் பரிந்துரை அளிக்கலாம்.
மேற்கண்டவை தான் சட்டநாதன்  ஆணையத்திற்கு தமிழக அரசு வழங்கிய பணிகள் ஆகும். இந்த பணிகள் அனைத்தையும் முடித்து 1970-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சட்ட நாதன் ஆணையத்திற்கு தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்திருந்தது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் நிலைமை குறித்து விரிவாக ஆய்வு செய்த சட்ட நாதன் ஆணையத்தால் குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியவில்லை. அதனால், ஆணையத்தின் பதவிக்காலம் 1970-ஆம் ஆண்டு இறுதி வரை நீடிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே பணிகளை முடித்த ஆணையம், 26.11.1970-இல் அதன் அறிக்கையை அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞரிடம் தாக்கல் செய்தது. அப்போது தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர்,   மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராஜன் உடனிருந்தார். ஆணையத்தின் பரிந்துரைகளை விரைந்து ஆய்வு செய்யவும், சாத்தியமான பரிந்துரைகளை செயல்படுத்தவும் கலைஞர் ஆணையிட்டார். அதன்படி சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்யும் பணிகள்  தொடங்கப்பட்டன.

சட்டநாதன் ஆணையம் அதற்கு வழங்கப்பட்ட பணிகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தது. தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதுடன் ஆணையம் அதன் பணிகளை முடித்துக் கொள்ளவில்லை. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, ஊக்குவிப்புத் தொகை, கல்விக்கடன்,  சிறப்பு பயிற்சி என விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அதனடிப்படையில் பரிந்துரைகளை வழங்கி இருந்தது.

வணிகம், வர்த்தகம், தொழில்துறைகள், ஊரகக் கடன், சந்தைப்படுத்துதல், கூட்டுறவு, வீட்டுவசதி, மானியங்கள், சமுதாய மேம்பாடு ஆகிய விஷயங்கள் குறித்தும் சட்டநாதன் ஆணையம் விரிவான பரிந்துரைகளை அளித்திருந்தது, அவையெல்லாம் ஒருபுறமிருக்க, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து சட்டநாதன் ஆணையம் அளித்திருந்த பரிந்துரைகள் தான் மிகவும் முக்கியமானவையாகும். அவற்றைப் பார்ப்போம்.

1. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவகுப்பினரின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, அவர்களுக்கு வழங்கப்படும் 25% இட ஒதுக்கீடு எந்த வகையிலும் போதுமானது அல்ல. அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறைந்தது 40% ஆக உயர்த்தப்பட வேண்டும். அது சாத்தியப்படாத பட்சத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை குறைந்தது  33% ஆகவாவது உயர்த்த வேண்டும் என்று சட்டநாதன் ஆணையம் பரிந்துரை வழங்கியிருந்தது.

2. அதுமட்டுமின்றி, தமிழக அரசு பணிகளிலும், தொழிற்கல்லூரிகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்துள்ள பிரதிநிதித்துவம் என்பது அவர்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கோ  அல்லது அவரவரின் மக்கள்தொகைக்கோ சற்றும் பொருத்தமில்லாத அளவுக்கு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை ஒன்றாக இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தப்படும் பிரிவுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆணையம் பரிந்துரைத்தவாறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 33% ஆக அதிகரிக்கப்படும் போது அதை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 17%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% என்ற அளவில் பிரித்து வழங்கப்பட வேண்டும்.

3. அதுமட்டுமின்றி, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் புறக்கணிக்கப் பட்டு வரும் நாவிதர், வண்ணார், பர்வதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர்,  குரும்பர் ஆகிய 7 சாதிகளின் முன்னேற்றத்திற்காக சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சட்டநாதன் ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி அந்த சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு பட்டியலில்  சேர்ப்பதுடன், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 16% இடங்களுக்கு சுழற்சி (ரோஸ்டர்) பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவற்றில் 14,15 மற்றும் 16 -ஆவது இடங்கள் இந்த பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் சட்டநாதன் ஆணையம் பரிந்துரை வழங்கியிருந்தது.அந்த சமுதாயங்களின் மக்கள்தொகை, கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கிய நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது சட்டநாதன் ஆணையத்தின் இந்த பரிந்துரை மிகவும் சரியான ஒன்றாகும்.

அதேபோல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனியாக 17% இட ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனியாக 16% இட ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரையும் மிகச்சரியானவை ஆகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அன்றைய நிலையில் காலத்தின் கட்டாயமாகவே இருந்தது. இதற்கு ஓர் எடுத்துக் காட்டைக் கூறுகிறேன்.
கல்வியில், குறிப்பாக தொழிற்கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலையை அறிந்து கொள்வதற்காக அக்கல்லூரிகளின் முதல்வர்களிடம் இருந்து சட்ட நாதன் ஆணையம் சில புள்ளிவிவரங்களைக் கேட்டது. அதன்படி தொழிற்கல்லூரி முதல்வர்கள் அனுப்பிய புள்ளி விவரங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒட்டுமொத்தமாக 25% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒட்டுமொத்த இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லாத பிற்படுத்தப்பட்ட  வகுப்பினரை மட்டும் குறிக்கும்) பொதுப்போட்டி இடங்களிலும் குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடித்து  ஒட்டுமொத்தமாக 60% முதல் 70% வரை பிரதிநிதித்துவம் பெற்று இருந்தனர்.

அதேநேரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 25% இடஒதுக்கீட்டில் கூட தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் தடுமாறினார்கள். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களை பிடித்திருந்தனர். பல கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் என்பதே இல்லாமல் இருந்தது என்பதை சட்டநாதன் ஆணையம் படம்பிடித்துக் காட்டியது. அதனடிப்படையில் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

அதுமட்டுமின்றி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்  என்று பரிந்துரைத்திருந்த  சட்டநாதன் ஆணையம், அந்த பிரிவில் எந்தெந்த சாதிகள் சேர்க்கப்பட வேண்டும்; அவ்வாறு சேர்க்கப்படும் ஒவ்வொரு சாதியின் உத்தேச மக்கள்தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களையும் பட்டியலாக தயாரித்து தமிழக அரசிடம் தாக்கல் செய்திருந்தது. அதன் விவரம் வருமாறு:

* 1971-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை   - 4,00,34,200
* ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் மக்கள்தொகை - 2,04,67,928 (51.13%)
* சட்டநாதன் ஆணையத்தின் பார்வைப்படி பிற்படுத்தப்பட்ட
  வகுப்பினரின் மக்கள்தொகை - 1,15,14,597 (28.76%)
* சட்டநாதன் ஆணையத்தின் பார்வைப்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட
  வகுப்பினரின் மக்கள்தொகை - 89,53,331  (22.37%)

*  ஒட்டுமொத்தமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 105 சமுதாயங்கள் இடம் பெற்று இருந்தன.

*  சட்டநாதன் ஆணையத்தின் பார்வைப்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட  சாதிகளின் எண்ணிக்கை 38 ஆகும்.

* மீதமுள்ள 67 சமுதாயங்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக கருதப்படும்.

ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்  அளவு 56.25% ஆகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 43.74% ஆகும். இந்த விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 33% இட ஒதுக்கீட்டை பிரித்து, முழுமைப்படுத்தி  முறையே 17%, 16% இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சட்டநாதன் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இது எந்த வகையிலும் குறை கூற முடியாத ஏற்பாடு ஆகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நியாயங்கள், காரணங்களையும் சட்டநாதன் ஆணையம் தமிழக அரசிடம் தாக்கல் செய்திருந்தது.

இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். சட்டநாதன் ஆணையம் உருவாக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவு மக்களின்  பிற்படுத்தப்பட்ட தன்மை குறித்து ஆய்வு செய்து உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக, 1954-ஆம் ஆண்டில் 39 சாதிகளைக் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற  பிரிவை காமராசர் உருவாக்கினார். ஆனால், அது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது அல்ல. கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக மட்டுமே அப்போது அந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் 38 சாதிகளைக் கொண்டதாக மாறிய அந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தான்  கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சட்டநாதன் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இது தவிர சட்டநாதன் ஆணைய அறிக்கையில் இடம்பெற்று இருந்த மற்றொரு முக்கிய அம்சம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற முறையை கொண்டு வர வேண்டும் என்பதாகும். அதற்காக அவர் சில அளவீடுகளை பரிந்துரைத்து இருந்தார்.

1. ஆண்டு வருமானம் 9,000 ரூபாயைத் தாண்டும் ஊதியப் பிரிவினர்.
2. 10 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்துள்ள நிலவுடைமையாளர்கள்.
3. வரிவிதிப்பு வருமானம் 9,000 ரூபாயைத் தாண்டும் வணிகர்கள்.
4. தாய், தந்தையர் இருவரும் வருமானம் ஈட்டினால் அவர்களின் ஆண்டு மொத்த வருமானம் 12,000 ரூபாய்க்கும் கூடுதலாக இருப்பது.

மேற்கண்ட 4 வகையினரும் கிரீமிலேயர்கள் என்று சட்டநாதன் ஆணையம் பரிந்துரைத்து இருந்தது.    கிரீமிலேயர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றும் சட்டநாதன் ஆணையம் கூறியிருந்தது.
சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் முக்கிய அம்சமான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை ஆணையத்தின் மற்ற இரு உறுப்பினர்களான நீதிபதிகள் சின்னப்பன், ஜமால் உசேன் ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை ஏற்படுத்தக் கூடாது என்பதில் அவர்கள் இருவரும் மிகவும் உறுதியாக இருந்தனர்.

நீதிபதி சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டவுடன், அது உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி அப்போதே மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற தனிப் பிரிவை அரசு ஏற்படுத்தி, தனி இட ஒதுக்கீட்டை வழங்கியிருந்தால் அது மிகப்பெரிய சமூகநீதிப் புரட்சியாக இருந்திருக்கும். ஆனால், அந்த பரிந்துரையை மட்டுமல்ல.... ஆணையத்தின் எந்த பரிந்துரையையும் செயல்படுத்த அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் தயாராக இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதில் அவருக்கு ஆர்வம் இல்லை.

சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவையாவது 33% ஆக உயர்த்தலாமே என்று யோசனைகள் தெரிவிக்கப்பட்ட போது, அவ்வாறு  உயர்த்தினால் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு 51% ஆக அதிகரிக்கும். அது இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகி விடும் என்று கூறி செயல்படுத்தத் தயங்கினார். அதன்பின் தந்தை பெரியார் தலையிட்டு, இட ஒதுக்கீட்டின்  அளவை 50 விழுக்காட்டைத் தாண்டாமல் அதிகரிக்கலாமே என்று கூறிய பிறகு தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டிலிருந்து 6% அதிகரித்து 31% ஆக கலைஞர்  உயர்த்தினார். பட்டியலினத்தவருக்கான 18% இட ஒதுக்கீட்டையும் சேர்த்து தமிழகத்தின் ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 49% ஆக அதிகரிக்கப்பட்டது.

கலைஞர் அரசின் இந்த நடவடிக்கை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த வகையிலும் நன்மை செய்யவில்லை. மாறாக பாதிப்பைத் தான் ஏற்படுத்தியது. காரணம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான  இட ஒதுக்கீட்டின் அளவை 6% மட்டும் அதிகரித்த கலைஞர், பொதுப்போட்டிக்கான பிரிவில்  இருந்த  15 சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து சேர்த்தார். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இதை விட பெரிய துரோகத்தை எவரும் இழைத்திருக்க முடியாது.

1969-ஆம் ஆண்டில் சட்டநாதன் ஆணையம் அமைக்கப்பட்ட போது, அதற்கு அளிக்கப்பட்ட பணி வரம்புகளில் புதிய சாதிகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆராய வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. ஆணையமும் அத்தகைய பரிந்துரை எதையும் வழங்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது பொதுப்பட்டியலில் இருந்த 15 சாதிகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் கலைஞர் சேர்த்தது எந்த வகையில் சமூகநீதி?

அதிலும் குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்ட 15 சாதிகளும் கல்வி வலிமை, சமுதாய வலிமை, பொருளாதார வலிமை என ஏதாவது ஒரு வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் ஏற்கனவே  இருந்த 105 சாதிகளை விட வலிமையானவர்கள். அதனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட சாதிகளே பெரும்பான்மையான இட ஒதுக்கீட்டை அனுபவித்தன. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் ஏற்கனவே போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கலைஞர் அரசின் புதிய நடவடிக்கை அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

ஒருபுறம் சட்டநாதன் ஆணையம் பரிந்துரைக்காத ஒன்றை செய்த கலைஞர் தலைமையிலான அரசு, ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டவாறு 38 சாதிகளைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை ஏற்படுத்த மறுத்து விட்டது. இதுவும் சமூக நீதிக்கு அளவிட முடியாத அளவுக்கு பெருந்துரோகம் அல்லவா?

சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வன்னியர்கள் உள்ளிட்ட சாதிகளை உள்ளடக்கிய   மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தி, அதற்கு 16% இட ஒதுக்கீடு அளித்து இருந்தால், பின்னாளில் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி  தொடர்போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டியதில்லை; துப்பாக்கிச் சூட்டுக்கு  நாங்கள் 21 உயிர்களை இழந்திருக்கத் தேவையில்லை. அதற்கெல்லாம் மேலாக 1971-ஆம் ஆண்டிலேயே தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட 38 சமுதாயங்களின் பிரதிநிதித்துவம் 18 ஆண்டுகளுக்கு முன்பே வளரத் தொடங்கி  இருந்திருக்கும். அந்த சமுதாயங்கள் இன்று கல்வியிலும், சமூகத்திலும் இன்னும் உயர்ந்த நிலையை  அடைந்திருக்கும். இதையெல்லாம் செய்யாமல் அந்த சமுதாயங்களின் வளர்ச்சியைத் தடுத்ததும், அதனால் அந்த சமுதாயங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பின்னடைவும் வரலாற்றில் என்றுமே ஈடுசெய்ய முடியாத அல்லவா?

சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரோஸ்டர் முறையில் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அது அந்த பிரிவில் இடம்பெற்றுள்ள அனைத்து சாதிகளுக்கும் சம நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. அதை அப்போது கலைஞர் அரசு செய்யாததால் அதன்பிறகு வந்த எந்த அரசும் ரோஸ்டர் முறையையோ, உள் ஒதுக்கீட்டு முறையையோ நடைமுறைப்படுத்தவில்லை. அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்தி வருகிறது. பா.ம.க.வை தவிர இந்த விஷயத்தில் குரல் கொடுத்து வரும் ஒரே தலைவர் ஆனைமுத்து அய்யா அவர்கள் தான்.

சட்டநாதன் ஆணையம் பரிந்துரைத்த நாவிதர், வண்ணார், பர்வதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர்,  குரும்பர் ஆகிய 7 சாதிகளுடன் குலாலர் சமுதாயத்தையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்; யாதவர், முத்தரையர், விஸ்வகர்மா ஆகிய 3 சாதிகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2014&ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வரும் ஒரே தலைவர் பெரியவர் ஆனைமுத்து அவர்கள் மட்டும் தான். 

ஒருபுறம் வன்னியர்கள் உள்ளிட்ட 38 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவிக்க வேண்டும் என்ற சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையை நிராகரித்தது, மற்றொருபுறம் பொதுப்போட்டிப் பிரிவில் இருந்த 30% சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்ததன் மூலம் வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலைமையை மேலும் மோசமாக்கியது என இரு துரோகங்களை கலைஞர் தலைமையிலான திமுக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைத்தது.

1960-களின் இறுதியில் சட்டநாதன் ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே, உரிய இடஒதுக்கீடு கிடைக்காததால் கோபத்தில் இருந்த வன்னியர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்பது தான். அதற்காகத் தான் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த சட்டநாதனை ஆணையத்தின் தலைவராக கலைஞர் நியமித்தார். ஆனால், வன்னியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர் வழங்கிய நியாயமான பரிந்துரைகளைக் கூட நிறைவேற்றாமல் வன்னியர்களை கலைஞர் அரசு ஏமாற்றியது.

நாளை....

இட ஒதுக்கீடு: எம்.ஜி.ஆர் அரசின்
சறுக்கலும், சமாளிப்பும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages