என்று தீரும் என் வருத்தங்கள்? - மருத்துவர் இராமதாசு அய்யாவின மனவேதனை.
இன்றுடன் 106 நாட்கள்...
ஆம்.... பாட்டாளி சொந்தங்களை நான் சந்தித்து இன்றுடன் 106 நாட்கள் ஆகின்றன.
மார்ச் 12 & ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திருமண உறுதியேற்பு விழாவில் பாட்டாளி சொந்தங்களை சந்தித்து உரையாடினேன். அது ஒரு மகிழ்ச்சியான பொழுதாக அமைந்தது. அதன்பின் அடுத்தடுத்து பல கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும்; அப்போதெல்லாம் என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களை சந்திக்கலாம் என்ற எண்ணத்துடன் அடுத்த இரு நாட்களில் தைலாபுரம் தோட்டத்துக்கு திரும்பினேன்.
அதன்பின் இன்றுடன் 106 நாட்களாகி விட்டன. என்னாலும் எங்கும் சென்று கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை; தொண்டர்களை தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து பேசவும் வாய்ப்பில்லை. காரணம்..... கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள்.
ஒரு தாய் ஓரிரு நாட்கள் வேண்டுமானால் குழந்தைகளை பார்க்காமல் பிரிந்திருக்கலாம். ஆனால், 106 நாட்கள், அதாவது கிட்டத்தட்ட ஓராண்டின் மூன்றில் ஒரு பகுதி காலத்திற்கு எப்படி குழந்தைகளை தாயால் பிரிந்திருக்க முடியும். அவ்வாறு பிரிந்திருக்கும் தாயின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும்? அத்தகைய மனநிலையில் தான் நான் இப்போது இருக்கிறேன். இது தான் எனது முதல் வருத்தம்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவத் தொடங்கிய போது, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்; மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று நான் விரும்பினேன். ஆனால், அதற்கு மாறாக நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
இது தான் எனது இரண்டாவது வருத்தம் ஆகும்?
திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக் கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரம், செடி, கொடிகளை நானே நட்டு வைத்து எனது நேரடி கண்காணிப்பில் வளர்த்து வருகிறேன். கோடைக்காலம் முடிவடையும் காலத்தில் அந்த செடிகளும், கொடிகளும் பூத்துக் குலுங்கும். ஆம்... இப்போதும் அவை பூத்துக் குலுங்குவதாக அங்குள்ளவர்கள் எனக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக என்னால் தான் நேரில் சென்று அந்த மலர்களையும், செடி கொடிகளையும் நேரில் பாரக்க இயலவில்லை; அவற்றுடன் உரையாட முடியவில்லை.
கல்விக் கோயில் வளாகத்தில் மே பிளவர் ட்ரீ( May Flower tree) என்ற மரம் உள்ளது. அந்த மரத்தில் மே மாதத்தில் தான் மலர்கள் பூத்துக் குலுங்கும். அந்த மரத்துக்கு Pride of India என்ற இன்னொரு பெயரும் உண்டு. அவை பூத்துக்குலுங்குவதை பார்ப்பதில் தனி சுகம்.
அதேபோல், ஒவ்வொரு வகையிலும் ஒரு சிறப்பு மிக்க பல செடி, கொடிகள், மலர்கள் உள்ளன. ஆனால், அவை பூத்துக்குலுங்குவதை என்னால் பார்க்க முடியாமல் இருப்பது தான் மூன்றாவது வருத்தமாகும்.
இதே போல் இன்னும் பல வருத்தங்கள் உள்ளன. கொரோனா விலகல் முடிவடைந்து, ஊரடங்குகள் தளர்த்தப்படும் போது, தொண்டர்கள் அனைவரையும் சந்தித்து பேசுவேன். அப்போது எனது அனைத்து வருத்தங்களும் தீரும் என்பது உறுதி!
No comments:
Post a Comment