முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 24 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 24

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 24

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

23. இட ஒதுக்கீடு: எம்.ஜி.ஆர் செய்த பெருங்கேடும்,
சரி செய்ததால் விளைந்த பெரும் நன்மையும்!

தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது தெளிந்த நீரோடை போன்றது. இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிப்பது, இட ஒதுக்கீடு வழங்குவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட அளவீடுகளை பயன்படுத்துவது போன்றவற்றில் தமிழகத்தில் உள்ள கட்சிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம்; ஆனால், இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்பதிலும், அது விகிதாச்சார அடிப்படையில் அமைய வேண்டும் என்பதிலும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் கருத்தொற்றுமை கொண்டிருந்தன; இப்போது கொண்டிருக்கின்றன.

அத்தகைய சூழலில் தான் 1979-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி சமூகநலத்துறையின் அரசாணை எண்1156 மூலம் ஓர் அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31% இட ஒதுக்கீடு தொடரும். ஆனால், ஆண்டு வருமானம் 9,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது தான்  அந்த அறிவிப்பு.
அதுவரை தெளிந்த நீரோடையாக சென்று கொண்டிருந்த தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் எம்ஜிஆர் அரசின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூகநீதியில் அக்கறை கொண்ட பலருக்கும் எம்.ஜி.ஆரின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், சமூகநீதி வரலாற்றை  அறிந்தவர்களுக்கு  இது நிச்சயம் அதிர்ச்சியை அளித்திருக்காது.

ஆம்.... இந்தியாவில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்ய வேண்டும்; அதைப் பயன்படுத்திக் கொண்டு உயர்சாதியினரில் பெரும் பகுதியினரை ஏழைகள் என்று அறிவித்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளுக்குமே உண்டு. வாய்ப்புகள் கிடைத்த போதெல்லாம் அதற்கு செயல்வடிவம் கொடுக்க இரு கட்சிகளுமே முயற்சி செய்தும், வெற்றி பெற்றும் உள்ளன.

1953-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் தலைமையிலான முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்த  அறிக்கை மிகவும் அற்புதமான ஆவணம் ஆகும். ஆனாலும், அந்த அறிக்கையை செயல்படுத்த மறுத்த அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார். அதற்குக் காரணம்.... பொருளாதார அடிப்படையில் ஏழை பிராமணருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நேருவின் விருப்பத்தை பரிந்துரை அறிக்கையில் சேர்க்க காகா கலேல்கர் மறுத்து விட்டது தான்.

காகா கலேல்கர் ஆணையத்தின் அறிக்கையை நிராகரித்து விட்ட நேரு அரசு, அதன்பின் நீண்ட நாட்களுக்கு புதிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்கவில்லை. 1961-ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மாநில அரசுகள் தனியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்து இட ஒதுக்கீட்டை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.  அதேநேரத்தில் ‘‘ இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க சாதிகளை விட பொருளாதார அளவீடுகளை பயன்படுத்தலாம்’’ என்ற சமூகநீதிக்கு எதிரான அறிவுரையையும் நேரு அரசு வழங்கியது. மற்றொருபுறம், பொருளாதார அடிப்படையில் பிற பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பட்டியல் தயாரிக்கப்படவில்லை என்று கூறி, ஆந்திர அரசின் இட ஒதுக்கீட்டு ஆணையை அம்மாநில உயர்நீதிமன்றம் இரு முறை ரத்து செய்து தீர்ப்பளித்தது. நீதிமன்றங்களும் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தன என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

இத்தகைய நிகழ்வுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால், எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுத்தது யாருக்கும் அதிர்ச்சியாகவோ, வியப்பாகவோ  இருக்காது. இது ஒருபுறமிருக்க, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் மக்கள் மத்தியில்  செல்வாக்கு பெருகும் என்று யாரோ கொடுத்த தவறான ஆலோசனையை எம்.ஜி.ஆர் அப்படியே நம்பினார். அதனால் தான் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்ற தமது முடிவை, 1980-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடையும் வரை, நியாயப்படுத்தியே பேசி வந்தார் அவர்.

ஆண்டு வருமானம் ரூ.9 ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 31% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற எம்.ஜி.ஆர் அரசின் ஆணைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. திமுக தலைவர் கலைஞர், திராவிடர் கழகத்தின் அப்போதைய பொதுச்செயலாளர் கி.வீரமணி ஆகியோர் தலைமையில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்தில்  உள்ள சிறிய கட்சிகளும், சமூக நீதி அமைப்புகளும், சாதி அமைப்புகளும், அரசு அலுவலர் சங்கங்களும் வருமான வரம்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடின. ஆனாலும் அந்த போராட்டங்களை கண்டுகொள்ளாத எம்.ஜி.ஆர், சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டி தமது செயலை நியாயப்படுத்தினார்.

‘‘1. ஆண்டு வருமானம் 9,000 ரூபாயைத் தாண்டும் ஊதியப் பிரிவினர்.
2. 10 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்துள்ள நிலவுடைமையாளர்கள்.
3. வரிவிதிப்பு வருமானம் 9,000 ரூபாயைத் தாண்டும் வணிகர்கள்.
4. தாய், தந்தையர் இருவரும் வருமானம் ஈட்டினால் அவர்களின் ஆண்டு மொத்த வருமானம் 12,000 ரூபாய்க்கும் கூடுதலாக இருப்பது ஆகிய  4 வகையினரும் கிரீமிலேயர்கள் என்றும், கிரிமீலேயர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றும் சட்டநாதன் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையைத் தான் அதிமுக அரசு செயல்படுத்துகிறது’’ என்று மக்களிடம் விளக்கமளித்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அவரது விளக்கம் எடுபடவில்லை.

இந்திய வரலாற்றில், அப்போதைய நிலையில், இட ஒதுக்கீட்டுக்கான பாராட்டத்தக்க கொள்கை ஆவணம் என்றால் அது  கர்நாடகத்தின் எல்.ஜி. அவானூர் (லி.நி. பிணீஸ்ணீஸீuக்ஷீ) ஆணையத்தின் அறிக்கைதான். அவானூர் ஆணையத்தின் அறிக்கை பிற்படுத்தப்பட்ட மக்களின் பைபிள் என்று போற்றப்படுகிறது. அந்த ஆவணம் பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காண்பதற்காக விரிவான ஆய்வுகளின் அடிப்படையில்  தயாரிக்கப்பட்டது. அந்த ஆய்வுகளில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை அடையாளம் காண சமூகம், கல்வி சார்ந்த காரணிகள் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனவே தவிர, பொருளாதாரக் காரணிகள் இந்த விஷயத்தில் கணக்கில் கொள்ளவில்லை. பின்னாளில் தயாரிக்கப்பட்ட மண்டல் ஆணைய அறிக்கையிலும் சாதிக்கும், சமூகம் மற்றும் கல்வி நிலைக்கும் முக்கியத்துவ அளிக்கப்பட்டது; பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

மண்டல் ஆணையம் பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காண்பதற்காக 4 பொருளாதார காரணிகளை  பயன்படுத்தியது. ஆனால், அவை பொதுவான பொருளாதார காரணிகள் அல்ல. இந்த 4 பொருளாதார காரணிகளும் சமூகம், கல்வியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஏற்பட்ட ஏழ்மையை சுட்டிக்காட்டும் காரணிகள் தான். இந்த பொருளாதார காரணிகளை கணக்கில் கொள்வது என்பது பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அல்ல.... மாறாக, சமூக ரீதியிலும், கல்வியிலும் பின்தங்கிய சமுதாய மக்கள் பொருளாதார நிலையிலும் கடுமையாக பின்தங்கி உள்ளனர் என்பதை நிறுவுவதற்காகத் தான் இந்த காரணிகளை மண்டல் ஆணையம் பயன்படுத்தியது.

ஆனால், இவை எதுவும் 1977-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு புரிய வில்லை. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு தான் அடித்தட்டு, ஏழை மக்களை வறுமையில்  இருந்து மீட்டு மேலே கொண்டு வரும் என்று எம்.ஜி.ஆர் நம்பினார்; மற்றவர்களும் அதேபோல் நம்ப வேண்டும் என்று எதிர்பார்த்தார். பொருளாதார அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு என்பதில் உறுதியாக இருந்த அவர், தமது நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறினார்.

‘‘ பிற்படுத்த வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு   ரூ.9 ஆயிரத்தைத் தாண்டக்கூடாது. இதில் எந்த மாற்றத்தையும் தமிழக அரசு செய்யாது. அதேநேரத்தில் இந்த உத்தரவால் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தொழிற்கல்வி பெறுவதில் மிகவும் வலிமையாக உள்ளனர். அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 31% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை அவர்கள் முழுமையாக அனுபவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, பொதுப்போட்டிக்கான இடங்களில் 29% இடங்களைக் கைப்பற்றுகின்றனர். அதனால் தொழிற்கல்லூரிகளில் அவர்களுக்கு 60% வரை இட ஒதுக்கீடு கிடைக்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் இந்த இட ஒதுக்கீடு எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அந்த சமுதாயத்தில் உள்ள முன்னேறிய, பணக்கார குடும்பங்கள் மட்டுமே அனுபவிக்கக் கூடாது. வண்ணார்கள், மருத்துவர்கள், கொத்தனார்கள், சிறு உழவர்கள், கைவண்டி இழுப்பவர்கள் என சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களும் இட ஒதுக்கீட்டின் பயன்களை அனுபவிக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர் விளக்கமளித்தார்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற சர்ச்சை எழுந்து ஒரு மாதத்தில், அடுத்த சர்ச்சைக்கு எம்.ஜி.ஆர். அடிகோலினார். 1979-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் நாள் புதுக்கோட்டையில் நடைபெற்ற தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய எம்.ஜி.ஆர்.,‘‘ தமிழ்நாட்டில் உயர்சாதிகளைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்’’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன. ஆனால், அவை எதுவும் எம்.ஜி.ஆர் அரசை பாதிக்கவில்லை.

பொருளாதார அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று எம்.ஜி.ஆர் அரசு பிறப்பித்த அரசாணையை எரிக்கும் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்தின; அவ்வாறு அரசாணைகள் எரிக்கப் பட்டதால் கிடைத்த சாம்பலை அரசுக்கு அனுப்பி வைத்தன. அதைக் கண்டும் எம்.ஜி.ஆர். அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக,‘‘ தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்த அரசாணையை எதிர்க்கட்சிகள் எரித்து, அதில் கிடைக்கும் சாம்பலை அரசுக்கு அனுப்பி வைக்கின்றன. அதை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் அனுப்பிய சாம்பல் எங்கள் கைகளுக்கு கிடைத்தவுடன் அவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் வளர்க்கப்படும் குரோட்டன்ஸ் செடிகளுக்கு உரமாக போடுவோம்’’ என்று எம்.ஜி.ஆர். அரசின் மூத்த அமைச்சரான நாவலர் நெடுஞ்செழியன் கிண்டல் செய்தார். இவை அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை கிளறச் செய்தன.

அப்போது தமிழகத்தில் இருந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை எம்.ஜி.ஆர். அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாக வைத்து தான் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் பெரியவர் ஆனைமுத்து ஒருவர் தான், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கான அரசாணையை ரத்து செய்வதுடன், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 31 விழுக்காட்டிலிருந்து 60% ஆக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி 19.08.1979-இல் தமிழக அரசுக்கு மனு அளித்தார்.  கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆட்சிகளில் பொதுப்பட்டியலில் இருந்த பல சமுதாயங்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்  சேர்க்கப்பட்டதால், பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 65% அதிகரித்து விட்டதால், அவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 60% ஆக உயர்த்த வேண்டுமென அவர் கோரினார்.  தொடர்ந்து 07.10.1979 -இல் அப்போதைய தமிழக அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் மூலமாகவும் இந்த கோரிக்கையை  முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பெரியவர் ஆனைமுத்து அவர்கள் புரிய வைத்தார். அதற்கு உடனடியாக பயன் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்த இரு மாதங்களில் மிகப்பெரிய நன்மை விளைந்தது.

அத்தகைய சூழலில் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஜனதா அரசு அக்கட்சியின் தலைவர்கள் இடையே ஏற்பட்ட மோதலாலும், காங்கிரஸ் கட்சி செய்த சதியாலும் கவிழ்ந்தது. உடனடியாக நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 1980-ஆம் ஆண்டு ஜனவரி  3 மற்றும் 6-ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்தேர்தலில்  திமுக - காங்கிரஸ் கூட்டணி 55.89% வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 இடங்களில் 37 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக - மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கூட்டணிக்கு இரு இடங்கள் மட்டுமே கிடைத்தன.

கோபிச்செட்டிப் பாளையத்தில் சின்னசாமி, சிவகாசியில் சவுந்தர ராஜன் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர். அதிமுக அணிக்கு 40.15% வாக்குகள் மட்டும் தான் கிடைத்தன. அதுவரை பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு தமக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று நம்பிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் உடனடியாக தமது தவறை உணர்ந்தார். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதால் மக்களிடையே ஏற்பட்ட மாபெரும் கோபம் தான் தமது தோல்விக்கு காரணம் என்று எம்.ஜி.ஆர் நம்பினார். தமது தவறை சரி செய்வதற்கு துடித்துக் கொண்டிருந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான இரு வாரங்களுக்குள், அதாவது 1980-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டினார். அந்த கூட்டத்தை திமுக புறக்கணித்தது. திமுகவின் கூட்டணி கட்சியான திராவிடர் கழகம் கலந்து கொண்டது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது; சமூக, கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு சாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதையேற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர் அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த இரண்டாவது நாளில், அதாவது ஜனவரி 21&ஆம் நாளில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட  அரசாணையை ரத்து செய்தார். அதன்மூலம் 7 மாதங்கள் நடைமுறையில் இருந்த பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற பெரும் கேட்டுக்கு முடிவு கட்டினார் அதிமுக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

அடுத்த 10 நாட்களில் எவருமே எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தமிழகத்திற்கு காத்திருந்தது.

ஆம்... எவருமே எதிர்பார்த்திராத வேளையில் 1980-ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி, சமூகநலத் துறை அரசாணை எண் 73-ன் மூலம் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 31 விழுக்காட்டிலிருந்து 50% ஆக அதிகரிக்கப்பட்டது. அத்துடன் பட்டியலினத்தவருக்கான 18% இட ஒதுக்கீட்டையும் சேர்த்து தமிழகத்தின் மொத்த இட ஒதுக்கீடு 68% ஆக உயர்ந்தது. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை பெரும் வெற்றியாக எதிர்க்கட்சிகள் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் கோரிக்கை விடுக்கவில்லை. தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் எவரிடமும் ஆலோசனை நடத்தாமல்  இட ஒதுக்கீட்டின் அளவை 50% ஆக அதிகரித்து ஆணையிட்டார். அது மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இட ஒதுக்கீட்டின் அளவை எம்.ஜி.ஆர் அதிகரித்ததற்கு அரசியல்ரீதியிலான காரணங்கள் இருந்தன. 1980-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமது கட்சி படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கியது தான் என்பதை எம்.ஜி.ஆர் உணர்ந்திருந்தார். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட பெருங்கேடு என்பதையும் அவர் அறிந்திருந்தார். 1980-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றுக் கொண்டது.

இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக பதவியேற்ற நாளில் இருந்தே, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசை கலைக்க வேண்டும் என்று காங்கிரசின் கூட்டணி கட்சியான திமுக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்த நிலையில், எம்.ஜி.ஆர் அரசைக் கலைத்து விட்டு, தேர்தல் நடத்தினால் அதில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராகி விடலாம் என்று கலைஞர் நம்பினார். அதனால் எந்த நேரமும் தமது அரசு கலைக்கப்படலாம் என்பதை எம்.ஜி.ஆர்  நன்றாக உணர்ந்திருந்தார். எனவே, அதற்கு முன்பாகவே சமூகநீதிக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்ததன் வெளிப்பாடு தான் 50% இட ஒதுக்கீடு அறிவிப்பாகும். எம்.ஜி.ஆர்  அஞ்சியதைப் போலவே 1980-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி அவரது அரசு கலைக்கப்பட்டது. ஆனாலும் அதற்கு 16 நாட்கள் முன்பாகவே தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து விட்டது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக இட ஒதுக்கீட்டின் அளவை 50% ஆக எம்.ஜி.ஆர் உயர்த்தியதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அது சமூகநீதிக்கு செய்யப்பட்ட பெரும் மரியாதை என்பதில் எந்த ஐயமும் இல்லை. அந்த நடவடிக்கையின் மூலம் தமிழக அரசின் கல்வி, வேலைவாய்ப்பில்  பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநித்துவம் பெருமளவில் அதிகரித்ததை எவரும் மறுக்க முடியாது.

1970-ஆம் ஆண்டில் சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது, அதில் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை 25 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடாக உயர்த்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்தினால், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டி விடும் என்று கூறி இடஒதுக்கீட்டை அதிகரிக்க அப்போதைய முதலமைச்சர் கலைஞர் முன்வரவில்லை. இறுதியில் இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டை தாண்டாத வகையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காடாக மட்டும் உயர்த்தினார். ஆனால், எம்.ஜி.ஆர் இது குறித்த எந்தக் கட்டுப்பாட்டையும் பற்றி கவலைப்படாமல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தியது துணிச்சலானது; பாராட்டத்தக்கது. அப்போது அது உயர்த்தப்படாமல் இருந்திருந்தால் இப்போதும் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 31%, மொத்த இட ஒதுக்கீடு 50% என்ற அளவில் தான் நீடித்து இருந்திருக்கும்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு என்ற பெருங்கேட்டுக்கு இந்த நடவடிக்கை மூலம் எம்.ஜி.ஆர் பரிகாரம் செய்து விட்டார் என்பது தான் உண்மை. இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே  எம்.ஜி.ஆருக்கு எதிரான அலை மறைந்து, ஆதரவு அலை வீசியது. அதன் உதவியுடன் அந்த ஆண்டு மே 28&ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் எம்.ஜி.ஆர்.

இதனிடையே தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 50 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டதை  எதிர்த்து உயர்சாதி மாணவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் 1982-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீடு 50% ஆக உயர்த்தப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் அடுத்த இரு மாதங்களுக்குள் புதிய ஆணையத்தை அமைத்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டும்; அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக இட  ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியிருந்தது.

நாளை.....
அம்பாசங்கர் ஆணையமும்,
வெளியிடப்படாத அறிக்கையும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages