தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி -25. (09.06.2020)
சட்டமன்றத்தில் பா.ம.க பங்களிப்பு சுருக்கமாக... சில மட்டும்.
ஜி.கே.மணி:தமிழ்நாட்டில் முன்பு ஒரு அமைச்சர் பொறுப்பு வகித்து வந்த காவல்துறை நீண்டகாலமாக முதலமைச்சர் துறையாக மாறி இருக்கிறதென்றால் காவல் துறையின் முக்கியத்துவம் உணர முடிகிறது.அரசுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழ்வது காவல்துறை.அதாவது சட்டத்தை நடைமுறைப்படுத்துவது,சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவது, குற்றங்களை தடுப்பது, உடைமைகளை பாதுகாப்பது, பொதுமக்கள் கூடும் கூட்டங்கள் திருவிழாக்களில் பாதுகாப்பளித்து அமைதி காப்பது, இயற்கைப் பேரிடர் மீட்புப் பணிகள் மேற்கொள்வது,
போக்குவரத்து சீர்படுத்துவது போன்ற செயல்பாடுகளை தன் கடமையாக நிறைவேற்றுவது காவல்துறை.
உலகிலேயே தலைசிறந்த காவல்துறை (போலீஸ்) என பாராட்டப்படுவது ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை.அந்த ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை தமிழ்நாடு காவல்துறை என போற்றப்பட்டு வருகிறது. இங்கே பேசுகின்ற எல்லாக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் காவல்துறையைப் பற்றி குறைகளை சொல்லி,தங்கள் தொகுதியிலும் மற்ற இடங்களிலும் நடந்த நிகழ்வுகளை சுட்டிக்காட்டியும் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளார்கள்.
பா.ம.க சார்பில் காவல்துறையில் உள்ள குறைகளையும்,அதற்கான தீர்வுகளை சுட்டிக்காட்டியும், காவல்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், சீர்திருத்தங்கள், காவல்துறை பணியின் தன்மை கடினமானது என்பதால் அதற்குரிய ஊதிய உயர்வு,பதவி உயர்வு,பணி நேர வரம்பு உள்ளிட்டவைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் எங்கள் கருத்துக்களை வலியுறுத்துகின்றேன்.
முதலமைச்சர் அவர்கள்:ஜி.கே.மணி அவர்களே,நீங்கள் சொல்கிற காவல்துறை சீர்திருத்தங்களுக்கு காவல் ஆணையம் முதலில் அமைத்தது நான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.எவ்வளவு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,தமிழ்நாட்டில் முதலில் காவல் ஆணையம் அமைத்தது. சீர்திருத்த நடவடிக்கைகள்,மத்திய அரசின் காவல் சீர்திருத்தங்கள், டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றத் தின் சீர்திருத்தங்கள் எல்லாம் தெரிந்துதான் சொல்கின்றேன். இவ்வளவு சீர்திருத்தங்கள் நாம் பேசிக் கொண்டிருந்தாலும் கீழே நடைமுறை கள் எவ்வாறு உள்ளது. இந்த சீர்திருத்தங்கள் போதாது. ஓரளவு மாறியிருந்தாலும், ஆங்கிலேயர் காலத்தின் நடைமுறை காவல் துறையில் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதோடு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் காவல்துறையை தங்கள் ஏவல் துறையாக வைத்து செயல்படுத்தக் கூடாது.
அமைச்சர்:ஜி.கே.மணி அவர்களே, இப்படி சொல்லக்கூடாது, காவல்துறை மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறது.
ஜி.கே.மணி:அமைச்சர் அவர்களே, காவல்துறை மிக முக்கியமானது. காவல்துறையில் யார் தலையீடும் ஆதிக்கமும் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் தன்னாட்சி பெற்ற (INDEPENDENT AUTHORITY)அமைப்பாக செயல்பட வேண்டும்.அந்த நிலையை உருவாக்க வேண்டும்.அப்போது தான் காவல்துறை சரியாக செயல்பட முடியும்.பொதுமக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.அமைச்சர் இங்கே சொல்கின்றார்.நான் எவ்வளவு ஆதாரத்தோடு சொல்லட்டுமா? எங்களது இட ஒதுக்கீட்டுப் போராட்டம் ஒன்றே போதுமே. எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் பெரிய சமுதாயத்தின் கல்வி, வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டின் உரிமைப்போராட்டம். அந்த காலக் கட்டத்தில் பழிவாங்க வேண்டுமென்று எவ்வளவு அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதே. இலட்சக்கணக்கானவர்கள் மீது பொய் வழக்கு.அடி,உதை,மண்டை, கை,கால் உடைப்பு.வீடுகளில் பாத்திரம் பண்டங்கள் சேதம். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டது கொஞ்சமா ? எத்தனை ஆண்டுகள். இறுதியாக ஏழு நாட்கள் தொடர் சாலை மறியலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 21 பேர் காக்கை, குருவிகள் போல் சுட்டுக் கொல்லப்பட்டதே.அந்த கொடுமையைச் சொன்னால் நீண்ட நேரமாகும். இதையெல்லாம் காவல்துறை தானே செய்தது.ஏழு ஆண்டுகள் அறவழிப் போராட்டம் நடத்தினோமே! அப்போதும் பொய் வழக்கு தானே போடப்பட்டது.
அமைச்சர்:ஜி.கே.மணி அவர்களே, அதை நாங்கள் செய்யவில்லை.
ஜி.கே.மணி: யார் செய்தது காவல்துறைதானே.தமிழ்நாட்டில் தானே நடந்தது.காவல்துறையை ஆட்சியாளர்கள் கைப்பாவையாகக் கருதக்கூடாது.அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இந்தியக் காவல்துறையில் கேரளா, மேற்குவங்காளம்,டில்லி,மகாராஷ்டிரா,குஜராத்,ராஜஸ்தான்,பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுவதாக சொல்லப்படுகிறதே!அந்த நிலை தமிழ்நாட்டில் வர வேண்டாமா?
மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப குற்றங்கள் மேலோங்கி வருகின்றன. குற்றவாளிகளுள் தீவிரவாதமும், வன்முறையாளர்களும் அதிகரித்து வருகின்றன.அதற்கு தகுந்தவாறு காவல்துறை தற்போது இருப்பதை விட மேலும் நவீனப்படுத்த வேண்டும். காவலர் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு காவல் துறையில் சட்டம்_ ஒழுங்கு பிரிவு,ஆயுதப்படை,குற்ற புலனாய்வு மற்றும் உளவுப்பிரிவு, மகளிர் காவல் பிரிவு,கடலோரக் காவல்படை,பொருளாதார குற்றப்பிரிவு,சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவு,போக்குவரத்துக்காவல் பிரிவு, மதுவிலக்கு_தடுப்பு பிரிவு, கமாண்டோ படை,தொழில்நுட்ப பிரிவு,மோப்பநாய் பிரிவு,இரயில்வே காவல் பிரிவு,காவலர் பயிற்சி போன்ற 16 பிரிவுகள் உள்ளன.
இதைத் தவிர சிறைக்காவல், தீயணைப்புத்துறை,ஊர்க்காவல் படை ஆகியவையும் உள்ளன.
காவல்துறை சீர்திருத்தங்களின் பண்புகளாக சொல்லப்பட்டவை:
*காவல்துறை பொதுமக்களின் நண்பர்கள்
*நல்லவர்களுக்கு நண்பர்கள்_ தீயோர்க்கு சிம்மசொப்பனம்
*குற்றம் சாட்டப்பட்டவரையோ, சந்தேகப்படும் நபரையோ துன்புறுத்தக்கூடாது.
*சட்டத்தை,அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது
*அரசு ஆணைகளை மதித்து நிறைவேற்ற வேண்டும்,அதைப் பற்றி விமர்சிக்கக் கூடாது
*பொதுமக்களிடம் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும், பண்புடனும் நடந்து கொள்ள வேண்டும்
*யார்மீதும் சட்டப்படியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருப்பு வெறுப்பு காட்டக் கூடாது
*கைது செய்தவரை தரக்குறைவாக நடத்தக்கூடாது.அவனும் மனிதன்தான் என்கின்ற உணர்வு வேண்டும்
*ரோந்து செல்லும் நேரங்களில் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்
*பொதுக்கூட்டங்கள்,திருவிழாக்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.யாராவது குற்றம் செய்திருந்தாலும் தன்னையே தாக்கி இருந்தாலும் அந்த இடத்தில் சரியாக அணுக வேண்டும்.தரக்குறைவாக பேசக்கூடாது.
*அமைதியாக இருக்கவேண்டும். உறுதியாக செயல்பட வேண்டும்.
*பொதுமக்களின் பிரதிநிதிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடனும்,அவர்கள் கூறும் குறைகளை அக்கறையுடன் கேட்டு சட்டத்திற்குட்பட்டு ஆவன செய்ய வேண்டும்.
*கடமை தவறாமல் இருத்தல் வேண்டும்.
* ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் நடத்தல் வேண்டும்.
*நலிவுற்ற பிரிவினரிடம் பரிவு காட்ட வேண்டும்.
*பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடத்தில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்
*எக்காரணம் கொண்டும் கையூட்டு பெறக்கூடாது
*பொதுமக்களை பாதுகாக்கக் கூடியவர் என்பதை மறந்து விடக்கூடாது.
சட்டமன்றத்தில் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது இது என் நாடு,என் நாட்டு மக்கள் என் நாட்டுக்காகவும் என் நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் நேர்மையுடன்,சேவை நோக்குடன், கடமை தவறாமல் பணியாற்றுவேன் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.
காவல்துறைக்கு அரசு என்ன செய்ய வேண்டும்.காவல்துறைக்கு பா.ம.க முன்வைத்த கோரிக்கைகள், நிறைவேற்றப்பட்டவைகள், சீர்திருத்தங்கள் போன்றவை
நாளைதொடரும்... பகுதி-26
No comments:
Post a Comment