முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 25 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 25

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 25

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

24. அம்பாசங்கர் ஆணைய அறிக்கையும்,
செயல்படுத்தப்படாத பரிந்துரைகளும்!

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 50% ஆக உயர்த்தப்பட்டதை புள்ளி விவரங்களின் அடிப்படையில் உறுதி செய்ய புதிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை இரு மாதங்களில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 15.10.1985-இல் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பை நிறைவேற்றும் நோக்கத்துடன் 1980-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 13-ஆம் தேதி இரண்டாவது தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தை சமூகநலத்துறை அரசாணை எண்: 3078-மூலம் அமைத்து எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு ஆணையிட்டிருந்தது.

ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக பணியாற்றியவருமான ஜே.ஏ. அம்பாசங்கர் நியமிக்கப் பட்டார். தமிழ்நாட்டின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரான சட்டநாதன் அவர்களைப் போலவே அம்பாசங்கர் அவர்களும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டநாதன் ஆணையத்தில் தலைவர் தவிர, இரு உறுப்பினர்கள் மற்றும் ஓர் உறுப்பினர் செயலாளர் என மொத்தம் 3 பேர் மட்டுமே இருந்ததனர். ஆனால், அம்பாசங்கர் ஆணையத்தில் முதற்கட்டமாக  12 உறுப்பினர்களும், ஓர் உறுப்பினர் செயலரும் நியமிக்கப்பட்டனர். சட்டநாதன் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட இருவரும் மாவட்ட அமர்வு நீதிபதிகள் ஆவர். ஆனால், அம்பாசங்கர் ஆணையத்தின்  உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 12 பேரும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆவர்.

தமிழக சட்ட மேலவை உறுப்பினர் எஸ்.ஆர் இராதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேலூர் ஜி.விஸ்வநாதன், வி.வி.சுவாமிநாதன், எஸ்.ஆண்டித்தேவர், பழ.நெடுமாறன், அன்பில். தருமலிங்கம், குமரி அனந்தன்,  ஜான் வின்சென்ட், டாக்டர். சமரசம், சமூக செயல்பாட்டாளர்கள் லியாகத் அலி கான், திருமதி. சவுந்தரா கைலாசம், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி எம்.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அலுவல் சார்ந்த உறுப்பினர் செயலராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் இயக்குனர் நியமிக்கப்பட்டார். ஆணையத்தின் பணிகள் தொடங்கிய சில வாரங்களில்  கூடுதலாக 8 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களையும் சேர்த்து உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது. இது அப்போதைய எம்.ஜி.ஆர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அமைச்சர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அம்பாசங்கர் ஆணையத்திற்கு மொத்தம் 8 பணிகள் வழங்கப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:

1. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15(4), 16(4) மற்றும் அவை தொடர்பான சட்டப்பிரிவுகள் மற்றும் உச்சநீநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பட்டியலை மறு ஆய்வு செய்தல்.

2. தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலைமை குறித்து அறிவியல்பூர்வமான, உண்மையை அறியும் வகையிலான விசாரணையை ஆணையம் மேற்கொள்ளும்.

3. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆணையம் ஆய்வு செய்யும்.  கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலையை முன்னேற்றுவதில் அந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பயனளித்துள்ளன என்பதையும் ஆணையம் மதிப்பீடு செய்யும்.

4.  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள்  கல்வி மற்றும் பிற விஷயங்களில் அடைந்த முன்னேற்றம், அதற்காக அவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட சலுகைகள், முன்னுரிமைகள்,  பயன்கள் ஆகியவற்றை ஆணையம் ஆய்வும், மதிப்பீடும் செய்யும்.

5.அ.    தொழிற்கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவை உட்பட கல்வியில் இடஒதுக்கீடு    வழங்குதல்.
ஆ. அரசு வேலைவாய்ப்புகளில் பிரதிநிதித்துவம்.
இ. வணிகம், வர்த்தகம், தொழில்துறைகள்
ஈ. ஊரகக் கடன், சந்தைப்படுத்துதல், கூட்டுறவு
உ. வீட்டுவசதி
ஊ. மானியங்கள்
எ. சமுதாய மேம்பாடு ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலைமையை முன்னேற்ற அரசு  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆணையம் பரிந்துரை செய்யும்.

6. பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை மேம்படுத்துவதற்காக மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய  குறுகிய கால நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்தும் ஆணையம் பரிந்துரை வழங்கும்.
7. 01.02.1980-ஆம் தேதியிட்ட சமூகநலத்துறையின் அரசாணை எண் 73-இன்படி தமிழக அரசால் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு அப்படியே தொடரலாமா அல்லது ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமா? எனபது  குறித்து உரிய ஆதாரங்களைத் திரட்டி அதனடிப்படையில் ஆணையம் பரிந்துரை செய்யும்.

8.அ.   தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் கணக்கெடுப்பு மற்றும் வகைப்படுத்துதல் தொடர்பான கேள்விகள்.

ஆ. தொழிற்கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியற்றின் மாணவர் சேர்க்கை உட்பட கல்வியில் இடஒதுக்கீடு வழங்குதல் குறித்த கேள்விகள்.

இ. மாநில அரசு பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வினாக்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆணையம் ஆராயும்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள மக்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை அறிந்து கொள்வதற்காக அம்பாசங்கர் ஆணையம் அறிவியல்பூர்வமான முறைகளை கையாண்டது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு சமுதாயத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் நோக்குடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட வினாக்கள் பட்டியலை பொது இடங்களில் பொதுமக்களிடம் வழங்கிய ஆணையத்தின் பணியாளர்கள், அதற்கான மக்களின் பதில்களை எழுத்துப்பூர்வமாக வாங்கினார்கள். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், வீட்டுவசதி நிலைமை ஆகியவை குறித்த வினாக்கள் அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தன. அதன்மூலம் அவர்களின் நிலையை துல்லியமாக அறிய முடிந்தது.

பொதுமக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு பதிவு செய்வதற்காக ஆணையத்தின் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வழக்கமாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் நீதிபதிகளாகவோ, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளாகவோ தான் இருப்பார்கள். ஆனால், அம்பாசங்கர் ஆணையத்தின் உறுப்பினர்கள் அரசியல்வாதிகளாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் இருந்ததால் அவர்களுக்கு மக்களின் கல்வி மற்றும் சமூகம் சார்ந்த பிற்படுத்தப்பட்ட தன்மை குறித்த நவீன சிந்தனைகள் குறித்தும், சட்ட அறிவு குறித்தும்  பயிற்றுவிக்க வேண்டியிருந்தது. அதற்காக, சமூக விஞ்ஞானிகள், சட்ட வல்லுனர்களைக் கொண்டு  ஆணையத்தின் உறுப்பினர்களுக்கு பல்வேறு கருத்தரங்குகளை ஆணையம் நடத்தியது.

பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு வகைப்படுத்துவதற்காக அவர்களின் வீடுவீடாக சென்று ஆணையம் கணக்கெடுப்பு நடத்தியது. பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை அறிவதற்காக பள்ளிகள் அளவில் 5 விழுக்காடு மாணவர்களிடமும், கல்லூரி மற்றும், பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களிடம் இன்னும் அதிக அளவிலும் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக மற்றும் கல்வி சார்ந்த பிற்படுத்தப்பட்ட தனமையை அறிந்து கொள்வதற்காக, தமிழ்நாட்டில் எத்தனை பிற்படுத்தப்பட்ட குடும்பங்கள் உள்ளனவோ, அவற்றில் ஒரு விழுக்காடு குடும்பங்களை உத்தேசமாக தேர்ந்தெடுத்து  அவர்களிடம் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவத்தை அறிவதற்காக, அனைத்து நிலை பணியாளர்கள் அனைவரிடமும்  முழு அளவில் அவர்கள் குறித்த விவரங்களைக் கேட்டு பதிவு செய்தது அம்பாசங்கர் ஆணையம்.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், அதை செய்வதற்காக ஒவ்வொரு சமூகத்தின் சமூகம் சார்ந்த பிற்படுத்தப்பட்ட தன்மை, கல்வி சார்ந்த பிற்படுத்தப்பட்ட தன்மை,தொழில் சார்ந்த பிற்படுத்தப்பட்ட தன்மை, பொருளாதாரம் சார்ந்த பிற்படுத்தப்பட்ட தன்மை ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில் அந்த சமூகங்களில் சமூகம் மற்றும் கல்வி சார்ந்த பின்னடைவை அடையாளம் காண ஆணையம் முடிவு செய்தது.

அதற்காக கீழ்க்கண்ட காரணிகளை அம்பாசங்கர் ஆணையம் பயன்படுத்தியது. அவற்றின் விவரம்:

1. சாதி/வகுப்பு  சமூகரீதியான பின்னடைவாக ஏற்றுக்கொள்ளப்படும்.

2. வாழ்வாதாரத்திற்காக மனித உழைப்பு, தரம் குறைந்த, தூய்மையற்ற பணிகளை செய்தல் அல்லது வாழ்வாதாரத்திற்காக மனித உழைப்பில் ஈடுபடும் பெண்களின் விழுக்காடு மாநில சராசரியை விட 10 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருக்கும் சமுதாயங்கள் அல்லது வாழ்வாதாரத்திற்காக குழந்தைகளை பணிக்கு அனுப்பும் குடும்பங்களின் விழுக்காடு  மாநில சராசரியை விட 10 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருக்கும் சமுதாயங்கள்.

3. கூரை வீடுகளில் வாழும் குடும்பங்களின் அளவு மாநில சராசரியை விட குறைந்து 10 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உள்ள சமுதாயங்கள் அல்லது  வாழ்வாதாரத்திற்காக கடன் வாங்கும்  குடும்பங்களின் அளவு மாநில சராசரியை விட  10 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உள்ள சமுதாயங்கள் அல்லது நகை அடகுக் கடைகள்/ வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கும் குடும்பங்களின் அளவு மாநில சராசரியை விட  10 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உள்ள சமுதாயங்கள்.

4. பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை மாநில சராசரியை விட 10 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள சமுதாயங்கள்.

5.  மேல்நிலைக் கல்வி  அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை மாநில சராசரியை விட 10 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள சமுதாயங்கள்.

6. மாநில சராசரியை விட குறைந்தது 10 விழுக்காடு அதிகமான எழுத்தறிவின்மை கொண்ட சமுதாயங்கள் அல்லது மாநில சராசரியை விட 10 விழுக்காடு அதிகமான இடைநிற்றல் கொண்ட சமுதாயங்கள்
மேற்குறிப்பிடப்பட்ட 6 காரணிகளில் முதல் 3 காரணிகளுக்கும் தலா 3 மதிப்பெண்கள் வீதம் 9 மதிப்பெண்களும், அடுத்த 3 காரணிகளுக்கும் தலா 2 மதிப்பெண்கள் வீதம் 6 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்  உள்ள ஒரு சமுதாயம் கல்விக்கான காரணிகளில் குறைந்தபட்சம் 2 மதிப்பெண்கள் உட்பட மொத்தம் 8 அல்லது அதற்கும் கூடுதலான மதிப்பெண்களை பெற்றிருந்தால் அந்த சமுதாயம் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என மதிப்பிடப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலேயே நீடிக்க அனுமதிக்கப்படும்.

பொதுப்பட்டியலில் உள்ள ஏதேனும் சாதிகள் பிற்படுத்தப்பட்ட தன்மையை கொண்டிருக்கிறார்களா? என்பதை அடையாளம் காண, மேற்கண்ட 6 காரணிகளில் முதல் காரணியைத் தவிர்த்து மீதமுள்ள 5 காரணிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த 5 காரணிகளுக்குரிய 12 மதிப்பெண்களில் 6 அல்லது அதற்கும் கூடுதலான மதிப்பெண்களை ஏதேனும் சமுதாயங்கள் எடுத்தால் அவை பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களாக கருதப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இவ்வாறாக,  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த 174 சாதிகள் தொடர்ந்து அந்த பட்டியலில் நீடிக்கவும், பொதுப்பட்டியலில் இருந்த சாதிகளில் 24 சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் அம்பாசங்கர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

அவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்ட சாதிகளின் மக்கள்தொகை தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 67% ஆக இருக்கும் என்று ஆணையம் மதிப்பிட்டிருந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உத்தேச மக்கள்தொகை 67% என்றாலும் கூட, உச்சநீதிமன்றம் விதித்த 50% வரம்புக்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்பதால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 32% ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அம்பாசங்கர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இவை அனைத்தும் கல்விக்கான இட ஒதுக்கீட்டுக்கான பரிந்துரைகள் ஆகும்.

அரசு வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியை அம்பாசங்கர் ஆணையம் தனியாக தீர்மானித்தது. அதன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், எந்தெந்த சமுதாயங்கள் எல்லாம் தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் மாநில சராசரியை விட 10% குறைவான பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனரோ அவர்கள் அனைவரும் வேலைவாய்ப்புக்கான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அவ்வாறு சேர்க்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளின் எண்ணிக்கை 111 ஆகும். பொதுப்போட்டி பட்டியலில் இருந்த 5 சமுதாயங்களையும் மேற்குறிப்பிடப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அம்பாசங்கர் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

வேலைவாய்ப்புகளில் மாநில சராசரியை விட அதிக பிரதிநிதித்துவம் பெற்றிருந்த சமுதாயங்களிலும் கூட, சில சமுதாயத்தினர், மொத்தமுள்ள 4 நிலை பணிகளில் குறைந்தது 2 நிலைப்பணிகளில் மாநில சராசரியை விட குறைந்த பிரதிநிதித்துவம் மட்டுமே பெற்றிருந்தனர். அதனடிப்படையில் 40 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களும், ஒரு பொதுப்போட்டிப் பிரிவு சமுதாயமும் வேலைவாய்ப்புக்கான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப் படலாம் என்றும் அம்பாசங்கர் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. கல்வி சார்ந்த இட ஒதுக்கீட்டுக்கான பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் பொதுப்போட்டிப் பிரிவில் இடம் பெற்றிருந்த 24 உயர்சாதிகள் சேர்க்கப்பட்டன. ஆனால், வேலைவாய்ப்பு சார்ந்த பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 6 உயர்சாதிகளை மட்டுமே அம்பாசங்கர் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. மீதமுள்ள 18 உயர்சாதிகள் குறித்து முடிவு எடுப்பதை அம்பாசங்கர் ஆணையம் ஒத்திவைத்திருந்தது.

கல்விக்கான இட ஒதுக்கீட்டில் பெரும்பகுதியை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்த  சமுதாயங்களில் சில குறிப்பிட்ட சமுதாயங்கள் மட்டும் தான் அனுபவித்து வந்தன என்பதையும் அம்பாசங்கர் ஆணையம் அம்பலப்படுத்தியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள 3 வகையான தொழிற்கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களில் நான்கில் மூன்று பங்குக்கும் கூடுதலான, அதாவது 75 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களை வெறும் 34 சமுதாயங்கள் மட்டும் தான் அனுபவித்து வந்தன. மீதமுள்ள 25 விழுக்காட்டுக்கும் குறைவான இடங்கள் தான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மற்ற 188 சாதிகளுக்கு கிடைத்தன. 75 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களைப் பிடித்த 34 பிரிவினரின் மக்கள்தொகை தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 40% மட்டும் தான் என்பதையும் அம்பாசங்கர் ஆணையம் விரிவான புள்ளி விவரங்களுடன் நிறுவியிருந்தது.

கல்வி உதவித்தொகை, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றிலும் மூன்றில் இரு பங்குக்கும், அதாவது 66%-க்கும் கூடுதலான இடங்களை மேற்கண்ட 34 சாதிகள் மட்டும் தான் அனுபவித்து வந்தன. அந்த 34 சாதிகளிலும் கூட, முதலில் உள்ள 11 சாதிகளை சேர்ந்தவர்கள்  மட்டும் தொழிற்கல்லூரிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மொத்த இடங்களில் சுமார் 66% இடங்களைக் கைப்பற்றினர். அதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக உள்ள சமுதாயங்கள் மூன்றில் இரு பங்கு இடங்களை கைப்பற்றுகின்றன என்பதை தெளிவுபடுத்தி இருந்த அம்பாசங்கர் ஆணையம், இந்த அநீதியைக் களைய தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை வழங்கியிருந்தது. இவ்வாறாக அம்பாசங்கர் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கை மிகவும் சிறப்பாக தயாரிக்கப்பட்டு 28.02.1985-இல் அரசிடம்  தாக்கல் செய்தது.

மற்றொருபுறம் ஆணையத்தின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்தே அதன் பரிந்துரைகள் தொடர்பாக ஆணையத்தின் உறுப்பினர்களிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றிருந்த 34 சாதிகளை அப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும்,  17 உயர்சாதிகள்  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் ஆணையத்தின் தலைவர் அம்பாசங்கர் தன்னிச்சையாக பரிந்துரைத்தது  நியாயமற்ற செயல் என்று ஆணையத்தின் உறுப்பினர்கள் விமர்சித்தனர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகள் சேர்க்கப்படும் போது, அவ்வாறு சேர்க்கப்படும் சாதிகளையும் சேர்த்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள அனைத்து சாதிகளின் மக்கள் தொகை தமிழகத்தின் மொத்தம் மக்கள்தொகையில் 67 விழுக்காடாக உயரும் என்பதால், அதற்கு இணையாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டையும் 67% ஆக உயர்த்த வேண்டும்  என்று ஆணையத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்களே கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகள்  ஏற்கப்பட்டால் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்படும் என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அஞ்சினார்.

அதனால், அம்பாசங்கர் ஆணையத்தின் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய அவர் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கைகள் விடுத்தாலும் கூட அதை அவர் ஏற்கவில்லை. ஆனால், அந்த ஆணையத்தின் சில பகுதிகளை மட்டும் மிகவும் தந்திரமாக எம்.ஜி.ஆர் பயன்படுத்திக் கொண்டார். அம்பாசங்கர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டதன் நோக்கமே, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டும்; அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக இட  ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகத் தான். அதனால், தமிழ்நாட்டில் புதிதாக தயாரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின்படி அப்பிரிவினரின் மக்கள்தொகை 67% ஆக உயரும் என்று மதிப்பிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு சமூகநீதி வழங்கும் வகையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 67% அதிகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான  ஆணைய உறுப்பினர்கள் பரிந்துரைத்திருப்பதாலும் அதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை இப்போதுள்ள 50% அளவில் தொடரலாம் என்று 1985&ஆம் ஆண்டு ஜூலை  30&ஆம் தேதி புதிய அரசாணையை எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி, அம்பாசங்கர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று பொதுப்போட்டி பிரிவில் இருந்த 29 உயர்சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தும் அதேநாளில் அரசாணை வெளியிடப்பட்டது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து 34 சாதிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. அதுகுறித்து எந்த அறிவிப்பையும் அரசு வெளியிட வில்லை.

பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை 67% ஆக இருக்கும் என்று ஆணையம் மதிப்பிட்டிருந்தாலும் கூட, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 32 விழுக்காட்டுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் கூறியிருந்தார். ஆனால், பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மக்கள்தொகைக்கு இணையாக 67% ஆக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தனர். தமிழக அரசு நினைத்திருந்தால் அந்த பரிந்துரைகளை ஏற்று தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான இட ஒதுக்கீட்டை 67% ஆக உயர்த்தியிருந்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அதில் நீதிமன்றங்கள் தலையிட்டிருக்காது. ஆணையத்தின் தலைவர் அம்பாசங்கர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 32 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என பரிந்துரை செய்திருந்தாலும், உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 50% என்று மறுஉறுதி செய்து அரசின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத் தக்கது.

அம்பாசங்கர் ஆணையத்தின் மற்றொரு முக்கியப் பரிந்துரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை தொகுப்பு இட ஒதுக்கீடாக மாற்ற வேண்டும் என்பதாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளில் ஒரு சில சாதிகள் மட்டும் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றன; பெரும்பான்மையான சாதிகளுக்கு எவ்வாறு சமூக அநீதி இழைக்கப்படுகிறது என்பது குறித்து புள்ளி விவரங்களுடன் அம்பாசங்கர் ஆணையம் விரிவாக விளக்கியிருந்தது. ஆனால், அதை செயல்படுத்துவதற்கான அரசியல் துணிச்சல் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசுக்கு இல்லை. அதனால், தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை 15 ஆண்டுகளுக்கு முன் 1970-ஆம் ஆண்டில் கலைஞர் எவ்வாறு மிகவும் தந்திரமாக, திட்டமிட்டு தவற விட்டாரோ, அதேபோல், 1985-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரும் இன்னும் அதிக தந்திரத்துடன்  திட்டமிட்டு நழுவ விட்டார் என்பது தான் உண்மை. இதை எவராலும், எப்போதும் மறுக்க முடியாது.

1989-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்த நிலையில், 1989-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி அம்பாசங்கர் ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்,  எம்.ஜி.ஆர் அரசால் அமைக்கப்பட்ட அம்பாசங்கர் ஆணையத்தின் அறிக்கை மீது கலைஞர் தலைமையிலான திமுக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாளை....
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: கலைஞர், எம்.ஜி.ஆர். அரசுகள் இழைத்த துரோகங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages