சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி -28 (14.06.2020 )
தமிழ்நாட்டில் முழு மது ஒழிப்பு (பூரண மதுவிலக்கு) வேண்டுமென்று மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் தொடர்ந்து போராடி வருவதை அனைவரும் நன்கு அறிவர்.தமிழ்நாடு முழுவதும் மருத்துவர் அய்யா அவர்களுடன் நானும் நிர்வாகிகளும் மாவட்டந்தோறும் மாநாடுகள், போராட்டங்கள் நடத்தியது,மருத்துவர் அன்புமணி அவர்களுடன் நானும் நிர்வாகிகளும்,மாவட்டந்தோறும் போராட்டங்களில் பங்கேற்றது_ மருத்துவர் அய்யா அவர்களும் மருத்துவர் அன்புமணி அவர்களும் பா.ம.க சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஏற்பாடு செய்து வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் மதுக்கடைகள் மூடப்பட்டது. சட்டமன்றத்தில் பா.ம.க தொடர்ந்து வாதாடி அதிக கடைகள் திறக்காமல் முட்டுக்கட்டையாக இருந்துவந்தது அனைவருக்கும் தெரிந்த செய்தியே.
பா.ம.க சட்ட மன்ற உறுப்பினர்கள் என்னுடன் மாவீரன் ஜெ.குரு, திருக்கச்சூர் கி.ஆறுமுகம்,மருத்துவர் ஆர்.கோவிந்தசாமி,கோ.எதிரொலி மணியன்,கே.எல்.இளவழகன்,டி.கே. இராஜா,மு.கார்த்தி,ப.கண்ணையன், இல.வேலுச்சாமி,கி.பாரிமோகன், சக்தி கமலாம்பாள்,டி.ஏ.மேகநாதன், நடராஜன்,மலையப்பசாமி,காசாம்பூ பூமாலை இறுதியாக அ.கணேஷ் குமார் ஆகியோர் சட்டமன்றத்தில் அவ்வப்போது வாதாடி கடுமையாக குரல் கொடுத்தும் செயல்பட்டார்கள்.
பேரவைத் தலைவர் அவர்களே, பா.ம.கவின் உயிர் மூச்சுக் கொள்கையாக தொடர்ந்து இந்த அவையில் வலியுறுத்தி வருகின்ற, மதுவிலக்கு குறித்து முதலமைச்சர் அவர்களையும் அரசையும் மீண்டும் வலியுறுத்துகின்றேன். மது கொடியது. மக்களை அழைத்து வருகின்றது.மது அரக்கன் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும்.மதுவை ஒழித்து மக்களை காக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. மதுவின் கொடுமையைப்பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் கள்உண்டோர், நஞ்சுண்டோர் என்று கூறியுள்ளார்.
'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்றுச்சான்றோர் முகத்துக் களி'கள்
குடிப்பவனைக் கண்டால் பெற்ற தாயின் முகமே வெறுப்படையும் என்னும்போது அறிவுடைய சான்றோர் முகம் மகிழ்ச்சியை காட்டுமா? என்றுரைத்துள்ளார்.
*மது குடிச்சவனக்கு சொல்லு புத்தி ஏறாது
*மது உள்ளே போனால் மதி வெளியே போகும்
*குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சு
*குடிகாரனுக்கு மனைவி, குழந்தைகள் பற்றி கவலையில்லை குடிகாரன் சொத்தை விற்று,கடன் வாங்கி,மனைவி தாலியை விற்றாவது குடித்தே ஆக வேண்டும் என்றெல்லாம் மதுவைப் பற்றி சொல்லுவதுண்டு.
முதலமைச்சர் அவர்களே, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தேவை.இந்து மதம்,இஸ்லாம் மதம், கிறிஸ்துவ மதம்,சமண மதம்,புத்த மதம்,சீக்கிய மதம் உள்ளிட்ட எல்லா மதங்களும் மது கொடியது,மது வேரறுக்கப்படவேண்டும் என்று பகிர்கின்றன. நமது வழிகாட்டி தலைவர்கள் அண்ணல் காந்தியடிகள்,தந்தை பெரியார், முன்னாள் முதலமைச்சர்கள் இராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா,பெருந்தலைவர் காமராஜர்,பக்தவச்சலம்,பேரறிஞர் அண்ணா போன்றோர் எல்லோரும் எக்காரணம் கொண்டும் மது அனுமதிக்கக்கூடாது,மது தடை செய்ய வேண்டிய கொடிய நஞ்சு என்றுரைத்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47ன் கீழ் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுபானம் மற்றும் போதை பொருட்களை தடை செய்ய வேண்டுமா ? அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தின் உண்மையான சொத்து வலிமையான,திறமையான மனித வளம்தான்.மனிதவளம் மேலும் மேலும் மேம்பட வேண்டும். உலகில் எந்த நாட்டிலும் இல்லாத மனித வளம்,அதிலும் இளைஞர் சக்தி 40% என்பது மிகப்பெரிய ஆற்றல் நமக்கு மட்டுமே உண்டு.எந்த ஒரு நாடு இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்கிறதோ,அது வளர்ந்த நாடாக கருத முடியுமென வல்லுனர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விலை மதிப்பற்ற மனித வளத்தையும் அதிலும் அதீத வளமும் ஆற்றலும் கொண்ட இளைஞர் சக்தியையும் மது சீரழித்துக் கொண்டிருக்கிறதே.மது அருந்துவதினால் மனிதவளம் முடங்குகிறதே.குடிப்பவர் உடல்நலம் பாழாகிறதே.மனித உழைப்பு குறைவதனால் பொருளாதார உற்பத்தி,வருவாய் இல்லாமல் குடும்பங்கள் சீரழிகிறதே! இதையெல்லாம் பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறதே,நீண்ட கவலையளிக்கிறதே.
1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டு மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதே. இச்சட்டம் கூடாது,மதுவிலக்கு தொடர வேண்டும்.மது விற்க அனுமதிக்க கூடாது என்று ( கொட்டும் மழையிலும்,கடுங்குளிரிலும் குடையை பிடித்துக்கொண்டு தள்ளாத வயதிலும் நள்ளிரவில் மூதறிஞர் இராஜாஜி வேண்டிக்கொண்டது ) உள்ளிட்ட எல்லாத் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதே.
முதலமைச்சர் அவர்கள்:நண்பர் மணி அவர்களே,அவசரப்பட்டு குற்றச்சாட்டு சுமத்தாதீர்கள்.எனது ஆட்சியிலும் மதுவிலக்கு அமல் படுத்தியிருக் கின்றேன்.மக்களின் மனநிலை, கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் சூழல் போன்ற பிரச்சினைகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஜி.கே.மணி:1971 இல் மதுவிலக்கு ரத்து,மீண்டும் 1974ல் மதுவிலக்கு அமலுக்கு வந்தது,1983ல் மீண்டும் மதுவிலக்கு சட்டம் ரத்து.1990_1991ல் மதுவிலக்கு அமலுக்கு வந்தது.மாறி மாறி வந்தது. 2003ல் டாஸ்மாக் நிறுவனம் மூலம் நேரடி மது விற்பனை துவங்கியது.
மதுவிலக்கு கொள்கையில் அரசு உறுதியாக இருந்தால் மது மனிதனை அழிக்குமா? அரசே விஷம் என்னும் கொடிய மதுவை கொடுத்து மக்களை அழிக்கலாமா? மக்கள் நலனை காக்க வேண்டிய அரசு, அழிக்கும் நோக்கில் ஈடுபடலாமா?
1971 க்கு முன் ஒரு கிராமத்தில் 2 பேர்,3 பேர் சாராயம் குடிப்பவர்கள் இருந்தார்கள்.அந்த கிராமத்தில் உள்ள மக்கள் சொன்னது 'அய்யோ அது குடிகாரன் வீடு' அந்தப் பக்கம் போகாதீர்கள் என்பார்கள். எனக்கு நன்கு தெரியும். கிராமங்களுக்கு இரவு நேரத்தில் காவல்துறையினர் வந்து குடிகாரர்கள் வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி வாயை ஊதச் சொல்வார்கள். வாயை ஊதி சாராய வாடை வீசினால் கைது செய்து அழைத்துச் செல்வார்கள்.போலீஸ் வருவார்கள் குடிக்கக் கூடாது என்ற பயம் இருந்தது.அப்பொழுது சாராயம் குடிப்பவர்கள் மீதும் விற்பவர்கள் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பார்கள்.தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 1996ல்_12,889, 1997ல்_1,29,977, 1963ல்_1,23,006,..... 1967ல்_1,90,713, 1968ல்_2,53,607, 1969ல்_1,65,052, 1970ல்_1,89,548. அப்போது குடிப்பது பெரிய குற்றமாக கருதப்பட்டது.சிறைக்குச் செல்ல வேண்டுமே என்ற பயம் இருந்தது.அப்போது குடிக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொன்னால் குடிகாரர்கள் சரியென ஏற்றுக் கொள்வார்கள்.
1971க்கு பிறகு அரசு மதுவை விற்பனை செய்து நீங்கள் எல்லோரும் குடிக்கலாம் வாருங்கள்.... வாருங்கள்.... என்று மக்களை அழைத்து குடிக்க செய்தது. ஓடி,ஓடி குடிக்க தொடங்கினார்கள். இன்று நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது.மது குடியின் உச்சித்தில்.
மது குடிப்பதால் சிறுமூளை பாதிக்கப்படுவதுடன் பல்வேறு நோய்கள் பாதிப்புகள்,பிரச்சினைகள் வரும் என்று மருத்துவ வல்லுனர்கள் பட்டியலிட்டு சொல்கின்றனர். மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.க நாங்கள் இதற்காக தனி இயக்கமே நடத்திக் கொண்டு வருகின்றோம். எங்கள் மகளிர் கள்ளச்சாராயம் ஊரல் பானைகளை அழித்தார்கள் என்று எங்கள் மீது மகளிரணியினர் மீதும் வழக்குப் போடுகிறது அரசாங்கம்.
அமைச்சர்:ஜி.கே.மணி அவர்களே, சட்டத்தை நீங்களே கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது.புகார் கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
ஜி.கே.மணி:அமைச்சர் அவர்கள் சொல்வது விந்தையாக உள்ளது. சாராயத்தை ஒழிப்பதில் அரசுக்கே அக்கறை இல்லை.காவல்துறை எங்கே நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்.மது விலக்கை வலியுறுத்தி பா.ம.க சார்பில் மாவட்டந்தோறும் மாநாடுகள், போராட்டங்கள்,பேரணிகள் எத்தனை? எத்தனை? எங்கள் மீது எத்தனை வழக்குகள்.
முதலமைச்சர் அவர்கள்:நண்பர் மணி அவர்களே,நீங்கள் சொல்வதில் உண்மை இருப்பதை மறுக்கவில்லை. இருக்கின்ற சூழலையும் பார்க்க வேண்டும். கள்ளச்சாராயம் பெருகும். கட்டுப்படுத்த முடியாது அதோடு
"கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாள் பாதுகாத்துக்கொள்ள முடியும்"(என்றார்).
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,கற்பூரத்தை பாதுகாக்க முடியும்.குடிப்பவர்கள் எத்தனை நாட்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று குடிக்க முடியும். வெளிமாநிலங்களிலிருந்து சாராயம் கடத்தி வராமலும் தடுக்க முடியும்.தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தி விட்டாலே எல்லாம் சரியாகிவிடும்.தமிழ்நாடு முன்னுதாரணமாக நிகழ்ந்தால், வழிகாட்டினால் அண்டை மாநிலங்களிலும் மதுவிலக்கு வரும்.இதை கட்டாயம் நடை முறைப்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இந்த புள்ளி விவரங்களை கொண்டு வருகின்றேன்.கடந்த மூன்று ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் (பட்டியல் கையில்) சாலை விபத்திலும்,உயிரிழப்பிலும் இந்தியாவில் முதல் மாநிலம் தமிழ்நாடுதான்.அதிலும் குடித்துவிட்டு வண்டி ஓட்டி நடந்த விபத்து 60% அதிலும் படித்த இளைஞர்கள் உயிரிழப்பு அதிகம்.வண்டி ஓட்டியவர் உயிரிழப்பு என்பதோடு இல்லாமல் எதிரில் வந்தவர்கள் மீதும் மோதி அவர்கள் உயிரிழப்பும் வேதனையளிக்கிறது.
மது விற்பனையில் இந்தியாவில் முதலிடம் தமிழ்நாடு.மது குடிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்.குடித்துவிட்டு ஏற்படும் கணவன்_ மனைவி குடும்பத் தகராறு,வழக்கும் அதிகம்.அதில் இளம்பெண்கள் விவாகரத்து. கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் எண்ணிக்கை அதிகம்,பெண்கள் வாழ்க்கையை பாழாக்கும்,மகளிர் காவல் நிலைய வழக்கு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிப்பு.குடித்துவிட்டு மனைவியை கொடுமை படுத்துவதால் இளம் பெண்கள் தற்கொலைச்சாவில் இந்தியாவில் முதலிடம் தமிழ்நாடு.குடிப்பவர்களால் நடக்கும் கொலை,கொள்ளை,ஆள் கடத்தல்,வழிப்பறி,கூலிப்படை நடவடிக்கை,திருட்டு,பெண்கள் பாலியல் கொடுமை போன்ற குற்ற வழக்குகள் மிக மிக அதிகம் எல்லா குற்றங்களுக்கும் தாய் மதுவே. இதுதான் தமிழ்நாட்டின் ஆரோக்கிய மான வளர்ச்சியா? குடித்து,குடித்து இளம் வயதில் நோய்வாய்ப்பட்டு மருத்துவச் செலவு அதிகம். பொருளாதார இழப்பு,கடன் படும் நிலை,இறுதியில் இளம் வயதில் உயிரிழப்பு அதிகம்.
குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீடு,நிலம் சொத்தை விற்பது,மனைவி தாலியை விற்று குடிக்கும் அவலம்.குடும்பத் தகராறில் குழந்தைகளின் கல்வி பாதிப்பு.
இப்படி குடிப்பதனால் ஏற்படும் அவலங்கள்,குடும்பச் சீரழிவுகள், மனித சமுதாயத்தின் பேரழிப்புப்பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு,இறுதித் தீர்வு,நிரந்திரத்தீர்வு மதுவை ஒழித்து மக்களைக் காப்போம்,மதுவிலக்கு அமலாக்கப்படும் என்ற ஒரு அரசாணை போதும்.அவசரச்சட்டம். மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களை காக்கும் அரசுக்கு அவசர நடவடிக்கை தேவை.
இவற்றில்_மதுஒழிப்பு குறித்து சட்டமன்றத்தில் வாதாடியது நீண்ட நாட்கள்.மருத்துவர் அய்யா அவர்கள், மருத்துவர் அன்புமணி அவர்கள், பா.ம.கவினர் போராட்ட வரலாறு நீண்ட,நெடியது.தமிழ்நாட்டில் சீரழிவுகள் அதிகம்.சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன்.
நாளையும் தொடரும். -29
No comments:
Post a Comment